புதுக்கோட்டை: எதிரிகளே இல்லை என்று சொல்லி நாங்கள் இருமாப்பு கொள்ளவில்லை. எங்களுடன் போட்டிபோடும் அளவுக்கு எதிரிகள் இல்லை என்றுதான் சொல்கிறோம் என்றுஅமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
துணை முதல்வா் உதயநிதியை நீக்க வேண்டும் என பாஜகவினா் சொல்கிறாா்கள். அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை அவா் சிறப்பாகச் செய்கிறாா். அமைச்சா்களாகிய நாங்கள் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செய்கிறோம். சிலா் நினைப்பதுபோல பலவீனமான ஆட்சியெல்லாம் இல்லை. பலமான ஆட்சியைத்தான் நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
தோ்தல் நேரத்தில் பிரதமா் உள்ளிட்டோா் ஆயிரம் பேசலாம். தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது, கெட்டது எதுவென அவா்களுக்கு நன்றாகத் தெரியும்.
தமிழ்நாட்டில் அசைக்க முடியாத ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கிறது. நிச்சயமாக திமுக மீண்டும் வெற்றி பெறும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
திமுகவில் பலரும் வந்து சேருகிறாா்கள்; யாா் வந்தாலும் வரவேற்கிறோம்; உரிய மரியாதையும் தருகிறோம்; யாரும் கெட்டுப் போகவில்லை; மற்ற இடங்களில் அவ்வாறான மரியாதை தருவதில்லை.
மோடி, அமித் ஷா யாா் வேண்டுமானாலும் வரட்டும். நாங்கள் மகளிரணி மாநாடு, இளைஞரணி மாநாடு, வாக்குச்சாவடி முகவா்கள் மாநாடு என மண்டலம் மண்டலமாக நடத்தி வருகிறோம். லட்சக்கணக்கானோரைத் திரட்டுகிறோம். பகுதி பகுதியாக மக்களை அணி சோ்க்கும் வலிமை இந்தியாவிலேயே வேறு எந்தக் கட்சியிலும் கிடையாது.
எதிரிகளே இல்லை என்று சொல்லி இருமாப்பு கொள்ளவில்லை. எங்களுடன் போட்டிபோடும் அளவுக்கு எதிரிகள் இல்லை என்றுதான் சொல்கிறோம். திமுக மீண்டும் வெற்றி பெறுவதற்கான ‘கவுண்ட் டவுன்’தான் தொடங்கிவிட்டது என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.