தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாக உள்ள நிலையில், பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கட்சி நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனை, செயல்வீரர்கள் கூட்டம், நலத்திட்டங்கள் ஆலோசனை, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம், பொதுக்கூட்டம் என பல்வேறு நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், அதிமுக-பாஜக இணைந்த தேசிய கூட்டணி சார்பில் கடந்த 23 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில், தமிழக பாஜக சார்பில் பேரவைத் தொகுதிகளுக்கு தொடர் சுற்றுப்பயணம் செல்ல உள்ள பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் குறைந்தது இரண்டு முதல் அதிகபட்சமாக ஏழு தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்ணாமலை
சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 பேரவைத் தொகுதிகளுக்கு பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளராக தமிழக முன்னாள் பாஜகத் தலைவர் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எல்.முருகன்
திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, உதகமண்டலம் ஆகிய 5 பேரவைத் தொகுதிகளுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வானசி சீனிவாசன்
திருப்பூர் தெற்கு, குன்னூர், கோயம்புத்தூர் தெற்கு ஆகிய தொகுதிகளுக்கு வானசி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழிசை சௌந்திரராஜன்
கும்மிடிபூண்டி, மயிலாப்பூர், நாங்குநேரி, பொள்ளாச்சி, கிளியூர் ஆகிய தொகுதிகளுக்கு தமிழிசை சௌந்திரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எச்.ராஜா
முதுகுளத்தூர், விளவன்கோடு, திருப்பதூர், சிவகங்கை, உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதிகளுக்கு எச்.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வி.பி. துரைசாமி
எழும்பூர், ராசிபுரம், பரமத்திவேலூர் தொகுதிகளுக்கு வி.பி. துரைசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொன். ராதாகிருஷ்ணன்
தென்காசி, பரமக்குடி, மேட்டுப்பாளம், பழனி ஆகிய தொகுதிகளுக்கு பொன். ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கண்ட தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்கள் குறைந்தது இரண்டு முறையாவது முழுமையான சுற்றுப்பயணத்தை நடத்த வேண்டும்.
ஒவ்வொரு முறை சுற்றுப் பயணத்தின் போது நாம் 24 மணி நேரம் செலவிட வேண்டும்(இரவு தங்கி வர வேண்டும்).
சமுதாய தலைவர்கள், சட்டப்பேரவை குழுக்கள், தொகுதியில் உள்ள மாவட்ட மண்டல் அணி நிர்வாகிகளுடன் சந்திப்பு, தொகுதியில் உள்ள பிரிவு நிர்வாகிகளோடு சந்திப்பு, ஒரு சக்தி கேந்திரத்திற்கு நேரடியாக சென்று ஊக்கப்படுத்துதல், ஒரு பூத்திற்கு நேரடியாக சென்று பலம் வாய்ந்த பூத் பற்றி வழிகாட்டுதல், கார்யகர்தாவோடு தனிப்பட்ட முறையில் பேசுதல், ஒவ்வொரு தொகுதி வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள், ஒருங்கிணைந்து திட்டமிட்டு பணி செய்தல், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளோடு இணைந்து செல்லுதல், தொகுதி வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்படுதல்.
எல்லா நிகழ்வுகளும் ஒரு சுற்றுப்பயணத்தில் முடிக்க வேண்டும் என்று பாராமல் தொடர் சுற்றுப்பயணத்திலும், தொகுதிக்கு தகுந்தவாறு நாம் திட்டமிடலாம். இது ஒரு வழிகாட்டுதல் மட்டும் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.