பல்லி என்றால் பலருக்கு பயம். அது எழும்பும் ஒலியைக் கேட்டாலே சிலர் நடுங்குவர். அதேவேளையில் அதனை வீட்டிலிருந்து விரட்டுவதற்கு வழி தெரியாமல் தவிப்பர்.
வீட்டுக்குள் பல்லியை வரவிடாமல் தடுக்க பல வழிகள் இருக்கிறது. பலரும் பல்லியை விரட்ட வீடுகளில் பயன்படுத்திய முறைகள்தான் இவை.
சாம்பாருக்குப் பயன்படுத்தும் சின்ன வெங்காயம் ஒவ்வொன்றையும் நன்றாக நசுக்கி அறையில் நான்கு பக்கமும் போட்டு வைத்தால், வெங்காய வாசனைக்கு பல்லி வராது.
ஒருவேளை வெங்காய வாசனை உங்களுக்கேப் பிடிக்கவில்லை என்றால் இதற்கு மாறாக பூண்டை தட்டி வைக்கலாம்.
ஓரிடத்திலிருந்துதான் அதிக பல்லிகள் வருகின்றன என்றால் அங்கு முட்டை ஓடுகளை வைக்கலாம். அதன் வாசனை பல்லிகளுக்குப் பிடிப்பதில்லை என்றும், முட்டை ஓடுகளைப் பார்த்து, தங்களது முட்டைகள் உடைக்கப்பட்டுவிட்டதாக எண்ணி பல்லிகள் அங்கிருந்து அகலுவதாகவும் கூறப்படுகிறது.
பல்லி என்ன நினைத்தால் நமக்கென்ன? நம் வீட்டை விட்டு ஓடினால் போதும் என்று நினைப்பவர்கள் இதைச் செய்யலாம்.
முட்டை ஓட்டை வைத்துவிட்டு அப்படியே மறந்துவிடாமல், பல்லி தொல்லை ஒழிந்ததும் அகற்றிவிடவும்.
வழக்கமாக, பூஜை அறையில் அல்லது சாமி படங்கள் வைத்திருக்கும் இடங்களில் பல்லிகள் அதிகம் வந்து தங்கிவிடும். இவற்றை விரட்ட மேற்கண்ட வழிமுறைகளை செய்ய முடியாது என்பதால் பலரும், மயிலிறகுகளை வாங்கி வந்து படங்களுடன் ஒட்டிவைத்து விடுகிறார்கள். இதனால் பல்லிகள் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்பதும் ஒரு யோசனை.
எதைச் செய்தும் பல்லிகளை ஒழிக்கவே முடியவில்லை என்றால், ஒரு பாட்டிலில் மிளகாய் தூளை சேர்த்து தண்ணீரில் கலந்து பல்லிகள் வரும் இடங்களில் லேசாக ஸ்பிரே செய்துவிடுங்கள். இந்த காரத் தன்மை காரணமாக பல்லிகள் வருவது நிச்சயம் குறையலாம்.
ஒருவேளை, மிளகாய் பொடி தூவும் யோசனை பிடிக்காதவர்கள், காபி பொடியைப் பயன்படுத்தலாம். காபி பொடியை தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்தாலும் பல்லிகள் வருவதில்லை என்கிறார்கள்.
ஒரு சிலர் வீர, தீரர்களாக செயல்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களாக இருப்பின் பல்லியை பிடிக்கும்முன் அதன் மீது குளிர்ந்த நீரை தெளித்துவிடுங்கள். அது செயலிழந்து இருக்கும்போது காகிதத்தால் பிடித்து தூக்கி எறியலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.