தொடங்கலாம் எதையும் பயிற்சியுடனும், முயற்சியுடனும்!
முயற்சிக்கும், பயிற்சிக்கும் தன்னம்பிக்கை என்பது மிகவும் அவசியம். நம்மால் முடியும் என்ற உரத்தினை உள்ளத்தில் ஏற்றி முயற்சி மேற்கொண்டால் மட்டுமே, எந்தவொரு செயலிலும் வெற்றி பெற முடியும்.
ஒரு முறை முயற்சி செய்து விட்டு அதற்கு பலன் கிடைக்கவில்லை என்றால் தனது அதிர்ஷ்டத்தைக் குறை சொல்லிக் கொள்வார்கள் இளைஞர்கள் சிலர். ஆனால் தொடர்ந்து தேவையான பயிற்சிகளை மேற்கொண்டால் எந்தவொரு வெற்றியும் எட்டும் உயரம்தான்.
தந்தை கொடுக்கும் பணத்தைக் கொண்டு தொழில் தொடங்கும் இளைஞர்கள் பலர், பணத்தை மட்டுமே முதலீடு செய்கின்றனர். ஆனால், செய்யக் கூடிய தொழிலில் உரிய பயிற்சி இல்லையென்றால், ஆரம்பித்த சில காலங்களிலேயே அத் தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.
இப்படி கையைச் சுட்டுக் கொண்டவர்கள் அதற்கு பின் புதிய திட்டமிடல் எதுவும் இன்றி கிடைக்கும் வேலையைச் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். இப்படி போதிய பயிற்சி இன்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு செயலுமே தோல்வியைத்தான் சந்திக்கும்.
மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியோடு புதிதாக களம் இறங்குபவர்களால் உரிய தூரத்தை, உரிய நேரத்தில் கடக்க முடியாது.
அவர்களிடம் முயற்சி இருந்தாலும், அவர்கள் செய்த அந்த முயற்சிக்குரிய பலன் மட்டுமே கிடைக்கும். ஆனால், முறையாகப் பயிற்சியை மேற்கொண்டு பின்பு உரிய முறையில் முயற்சித்தால் மாரத்தான் தூரம் கூட அவர்களுக்கு மண்டியிடும்.
இத்தகைய முயற்சிக்கும், பயிற்சிக்கும் தன்னம்பிக்கை என்பது மிகவும் அவசியம். நம்மால் முடியும் என்ற உரத்தினை உள்ளத்தில் ஏற்றி முயற்சி மேற்கொண்டால் மட்டுமே, எந்தவொரு செயலிலும் வெற்றி பெற முடியும்.
அதைப் போல், குழப்பமான மனநிலை தெளிவற்ற நீரோடை போன்றது. குழப்பமான மனநிலை முயற்சி, பயிற்சி, தன்னம்பிக்கை ஆகிய மூன்றையுமே நீர்த்துப் போகச் செய்து விடும்.
ஒரு செயல் குறித்த தெளிவான பார்வையின்மையின் காரணமாக வருவதுதான் குழப்பம். ஜவுளிக் கடைக்குச் சென்று புது சட்டை எடுக்கும் பொழுதுதான் பலருக்கு குழப்பம் வரும். வீட்டில் இருக்கும் தம்பியின் சட்டை அளவு என்ன அல்லது பேண்டின் அளவு என்ன என்ற குழப்பம்தான் அது. 40 ஆ, 42 ஆ என்ற குழப்பம் ஏற்படும் நிலையில் நம்மிடம் பணம் இருந்தும் அந்த சட்டையை அல்லது பேண்டினை எடுக்க முடியாமல் போகும். இதுதான் அனேக இளைஞர்களின் கதையாக உள்ளது.
தெளிவற்ற மன நிலையில், எதைச் செய்வது? எப்பொழுது செய்வது? எனத் தெரியாமல் குழம்பி கடைசியில் அதிர்ஷ்டத்தின் மேல் பாரத்தை போட்டுவிட்டு தங்களின் திறமைகளை வெளியே கொண்டு வராமல் முடங்கி விடுகின்றனர். எனவே, மன குழப்பங்களைத் தவிர்த்து உரிய முயற்சியும், சரியான பயிற்சியையும் மேற்கொண்டால் வெற்றியை எளிதில் எட்ட முடியும்.