பெண்களுக்கு மாரடைப்பு அதிகம் ஏற்படக் காரணம்?
ஆண்களைவிட பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகமாக உள்ளது என ஐரோப்பிய சொசைட்டி ஆஃப் கார்டியாலஜி என்ற அறிவியல் ஆன்லைன் தளம் கண்டறிந்துள்ளது.
ஆண்களைவிட பெண்கள் மாரடைப்பால் பாதிக்கப்படுவது அதிகம் என ஐரோப்பிய சொசைட்டி ஆஃப் கார்டியாலஜி என்ற அறிவியல் ஆன்லைன் தளம் கண்டறிந்துள்ளது.
அதுபோல இதுகுறித்த சமீபத்திய ஆய்வில் பெண்களுக்கு மாரடைப்பு தவறாக கண்டறியப்படுவதும் தெரிய வந்துள்ளது.
மார்பு வலி அல்லது மாரடைப்பு ஏற்படுவது பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது என்றும் இவ்வாறான பெண்கள் தாமதமாகவே தங்கள் நோயை அறிகின்றனர் என்றும் இதில் ஒரு சிலர் இதனை தவறாக அறிந்து தங்கள் உடல்நலக்கேட்டிற்கு தாங்களே காரணமாகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது மாரடைப்பு குறித்து குறைந்த சந்தேகமே பெண்களிடம் ஏற்படுகிறது, இது தாமதமாக மற்றும் தவறான நோயறிதலின் ஆபத்துகளுக்கு வழிவகுக்கிறது என்கிறார் ஸ்பெயினின் பார்சிலோனா மருத்துவமனையின் டாக்டர் ஜெம்மா மார்டினெஸ்-நடால்.
கடந்த 2008 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மார்பு வலியால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் குறித்தும் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் அவர்களின் ஆரம்ப நோயறிதல், மருத்துவப் பரிசோதனை உள்ளிட்டவை குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டது.
மாரடைப்பு ஏற்பட்ட மொத்தம் 41,828 நோயாளிகளில் 42 சதவீதம் பேர் பெண்கள். அவர்களின் சராசரி வயது 65 ஆண்டுகள். இதுவே ஆண்களில் சராசரி வயது 59 ஆண்டுகள்.
மாரடைப்பு அறிகுறி தோன்றிய பின்னர் 12 மணிநேரம் அல்லது அதற்கு மேலாக காத்திருந்தே பெண்கள் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவது இந்த ஆய்வின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. இது பெண்களின் உடல்நலம் குறித்த மோசமான நிலையாகும். ஏனெனில் இதயத்திற்கு ரத்த ஓட்டம் குறைவதே மாரைடைப்பின் எதிரொலி. மாரடைப்பு ஏற்படும்போது முடிந்தவரை விரைவாக சிகிச்சை அளிக்க வேண்டும், ஆனால் பெண்கள் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள், அதனாலே கடந்த 10 ஆண்டுகளில் ஆண்களைவிடபெண்களில் உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது என்று மருத்துவர் நடால் தெரிவித்தார்.
பெண்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெண்களும் மாரடைப்பு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
பெண்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் பெண்கள் மாரடைப்புக்கு தாமதமாகவே சிகிச்சை பெறுகின்றனர் என்றும் மேலும் ஒரு சில ஆய்வுகள் கூறுகின்றன. ஏன் பெரும்பாலான நேரங்களில் மாரடைப்பு ஏற்படுவதே பெண்களுக்குத் தெரிவதில்லை என்ற ஆய்வு முடிவுகளும் உள்ளன. இதற்கு காரணம் பெரும்பாலான பெண்களுக்கு மாரடைப்புக்கான அறிகுறிகள் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.