செய்திகள்

உடல் எடையைக் குறைக்கணுமா? இந்த தப்பெல்லாம் செஞ்சுடாதீங்க!

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நீண்ட நாள்கள் டயட்டில் இருக்கிறீர்களா? அப்படி இருந்தும் உடல் எடை குறையவில்லையா?

DIN

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நீண்ட நாள்கள் டயட்டில் இருக்கிறீர்களா? அப்படி இருந்தும் உடல் எடை குறையவில்லையா? அப்படியெனில் உங்கள் டயட் முறையில் ஏதேனும் தவறு இருக்கலாம். 

டயட் எனும் உணவுக் குறைப்பில் கீட்டோஜெனிக் டயட், பேலியோ டயட், சைவ உணவு முறை என பலவிதமான உணவு முறைகள் உள்ளன. இதில் அவரவர்களுக்கு ஏற்ப டயட் முறையை பின்பற்றுகின்றனர்.

ஆனால், இவ்வாறு டயட் இருந்தும் சிலருக்கு உடல் எடை குறைவதில்லை என்று கூறுகின்றனர். காரணம், அது உங்கள் உணவு முறையில் பிரச்னையில்லை, மாறாக, உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று தவறான முறையில் டயட் இருப்பது. 

இணையத்தை பின்பற்றுவது 

உடல் எடையைக் குறைக்க சிலர் ஊட்டச்சத்து நிபுணர்களை நாடாமல் இணையத்தில் கூறும் சில வழிமுறைகளைப் பின்பற்றுவது சரியானது அல்ல. உடல் பருமன் கொண்டவர்கள் கண்டிப்பாக ஊட்டச்சத்து நிபுணரை கலந்தாலோசித்து டயட் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 

ஆடம்பரமான உணவு முறை

சில ஆடம்பரமான உணவுத் திட்டங்கள் மிகவும் சுவாரசியமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். ஆனால் தரமானதாக இருக்காது. ஒவ்வொருவருக்கும் உடலியல் தேவைகள் மாறுபடும். ஒவ்வொருவருக்கும் உடல் பருமனுக்கு காரணங்கள் மாறலாம். எனவே, கவர்ச்சியான டயட் முறைகள் என்று பார்க்காமல் உங்களுக்கு ஏற்ற டயட் முறையை ஒரேமாதிரியாக பின்பற்ற வேண்டும். 

காலை உணவைத் தவிர்ப்பது

காலை உணவு அன்றைய நாளைக்கான மிக முக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. வேலைக்குச் செல்லும் முன், காலை உணவைச் சாப்பிடாமல் இருப்பது அல்லது நாள் முழுவதும் உணவைத் தவிர்ப்பது மிகப்பெரிய தவறு. சிலர் உடல் எடையைக் குறைக்க வேண்டும், கலோரிகளை சேர்க்கக்கூடாது என்று சாப்பிடாமல் இருப்பார்கள். இது மிகவும் தவறு. 

இப்படி காலை உணவைத் தவிர்ப்பதால் உடலின் முக்கிய ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும். சோர்வு, தலைச்சுற்றல், குறைந்த ரத்த அழுத்தம், ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படலாம். காலை உணவாக பயறு வகைகள், முட்டை, ஓட்ஸ், இட்லி, கோதுமை பிரெட் ஆகியவை சாப்பிடலாம். 

ஆரோக்கியமற்ற பேக்கிங் உணவுகள் 

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால், டயட்டில் இருக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக பேக்கிங் உணவுகளை சாப்பிடக்கூடாது. டின்களில் அடைக்கப்பட்ட கூல் ட்ரிங்க்ஸ், டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. அப்படியே பேக்கிங் உணவுகள் என்றால் அதில் என்னென்ன சேர்க்கப்பட்டிருகிறது என்று பார்த்து வாங்க வேண்டும். 

உடற்பயிற்சியை தவிர்ப்பது 

உடல் எடையைக் குறைப்பது என்பது குறிப்பிட்ட நாள்களில் நடந்துவிடும் ஒன்றல்ல. அது ஒரு நீண்ட பயணம். உடல் எடையைக் குறைக்க, உணவுக்கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும். 60:40 என்ற விகிதத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதாவது உணவுக்கு 60% உடற்பயிற்சிக்கு 40% முக்கியத்துவம் கொடுங்கள். கடினமான உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. பதிலாக 40 முதல் 50 நிமிடங்கள் தினசரி நடைப்பயிற்சி கூட போதுமானது. 

தூக்கம் இல்லாமை

உடல் எடையைக் குறைக்க சரியான தூக்கம் மிகவும் அவசியம். சரியாக ஓய்வெடுக்காதவர்களுக்கு அல்லது சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு உடல் எடையை குறைப்பது மிகவும் கடினம். நாள் ஒன்றுக்கு 7-8 மணிநேர தூக்கம் மிகவும் முக்கியம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூரிஸ்ட் ஃபேமிலி: டப்பிங் பணிகளை தொடங்கிய சசிகுமார்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

சபரிமலையில் கனமழை

நடிகர் சிவாஜியுடன் அரசியல் பயணம்! பெரியார் பேரன் ஈவிகேஎஸ் இளங்கோவன்!

அல்லு அர்ஜுன் கைது: மத்திய அமைச்சர்கள் கண்டனம்!

SCROLL FOR NEXT