சருமப் பராமரிப்பு என்பது வெளிப்புறப் பராமரிப்பு என்று நாம் நினைக்கிறோம். அதாவது முகத்தில் சீரம்கள், மாஸ்க், மாய்ஸ்சரைசர், ஃபேஷியல் போன்றவற்றைச் செய்வதன் மூலமாக சரும அழகைப் பராமரிக்கலாம் என்று நினைத்து அதைச் செய்வதிலேயே கவனம் செலுத்துகிறோம்.
ஆனால் உண்மையில் சரும அழகு பராமரிப்பு என்பது வெளிப்புறத்தில் செய்வதல்ல, நாம் என்ன உணவு எடுத்துக்கொள்கிறோம் என்பதையும் பொருத்தது.
அவ்வாறு நாம் தினமும் பருகும் நீர் ஆகாரங்கள், பானங்கள் நம் சருமத்திற்கு மறைமுகமாக பெரிதும் உதவுகிறது.
சருமத்தைப் பராமரித்தும் சருமம் ஏன் அழகு பெறவில்லை? என்ற கேள்வி இருந்தால் உங்கள் உணவு முறைகளை மாற்ற வேண்டும் என்று அர்த்தம். அதிலும் செயற்கை பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சரும அழகைக் கெடுக்கும் பானங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
காபி / டீ
நம்மில் பெரும்பாலோர் ஒரு கப் டீ அல்லது காபி இல்லாமல் அந்த நாளைத் தொடங்க முடியாது. ஆனால் அந்த ஒரு கப், 3 அல்லது 4 ஆக மாறும்போதுதான் பிரச்சனை தொடங்குகிறது.
டீ அல்லது காபியில் அதிக சர்க்கரை, பால் சேரும்போது அது சருமத்தைக் கெடுக்கிறது.
காபி ஒரு டையூரிடிக் ஆக செயல்படுகிறது. அதாவது இது உடலில் தண்ணீரை விரைவாக இழக்கச் செய்கிறது. இது வறண்ட சருமத்திற்கு வழிவகுக்கிறது.
பதிலாக பிளாக் டீ, கிரீன் டீ, புதினா, எலுமிச்சை டீ போன்ற மூலிகை தேநீரை அருந்தலாம்.
செயற்கை சர்க்கரை பானங்கள்
கடைகளில் வரிசையாக கலர் கலராக அடுக்கி வைத்திருக்கும் செயற்கை பானங்கள் விரைவான ஆற்றலைத் தந்தாலும் அதில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகள், சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும் கொலஜன், எலாஸ்டின் புரத உற்பத்தியைக் குறைக்கின்றன. இதனால் சருமத்தில் தொய்வு, சுருக்கங்கள் ஏற்படும்.
இதற்கு பதிலாக இளநீர், மோர், பழச்சாறுகள் போன்ற இயற்கை பானங்களை அருந்தலாம்.
ஆல்கஹால்
காக்டெய்ல் சாப்பிடுவது ஆரோக்கியமானதாக நினைப்பது தவறு, அதிலும் குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் கலந்திருக்கும். இதுவும் உங்கள் உடலை நீரிழக்கச் செய்யும் டையூரிடிக். இது சருமத்தை வறண்டு போகச் செய்வது, சரும செல்களை உடைப்பது என கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
எனர்ஜி பானங்கள்
அதிகமாக வேலை செய்யும்பொருட்டு அல்லது ஜிம்களில் எனர்ஜி பானங்கள் அதிகம் பரிந்துரைக்கப்படும்.செயற்கை பொருள்களால் நிரம்பியுள்ள இந்த பானங்கள், இன்சுலின் அளவை அதிகரிக்கிறது, வீக்கம், முகப்பருவுக்கு வழிவகுக்கிறது. வாழைப்பழ ஸ்மூத்தி அல்லது இளநீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
நீர்ச்சத்து அவசியம்!
நீரேற்றம்தான் உண்மையிலேயே சருமத்திற்கு அழகைத் தருகிறது. இயற்கையான, சத்தான, செயற்கை ரசாயனங்கள் கலக்காத பானங்களைத் தொடர்ந்து அருந்துவதன் மூலமாக சருமத்தில் அழகைக் கூட்டலாம்.
காலை எழுந்தவுடன் குறிப்பிட்ட அளவு, உங்களுக்குத் தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். நாளொன்றுக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
இதையும் படிக்க | 3 நாள்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால்.. நிகழும் மாற்றங்கள் என்ன தெரியுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.