நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த பாதிப்புகளால் சிலருக்கு இதயம் தொடர்பான பிரச்னைகளும் வருகின்றன. இன்றைய காலத்தில் இளைஞர்கள்கூட அதிகமாக மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் நாம் அன்றாடம் சில உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக இதய நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அது வேறு ஒன்றும் அல்ல. பச்சை இலைக் காய்கறிகள்தான்.
இதய ஆரோக்கியத்திற்கு என்ன சாப்பிட வேண்டும்?
கீரை, காலே(ஒரு வகை முட்டைக்கோஸ்), முட்டைக்கோஸ், புரோக்கோலி, புதினா, கொத்தமல்லி தழைகள் போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் தினமும் ஒன்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் வைட்டமின்கள், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் நிரம்பியுள்ளன.
அவை ரத்த அழுத்தத்தைச் சீராகவும் கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகின்றன. பெரும்பாலும் உடலில் அதிக கெட்ட கொழுப்புகள் சேரும்போதுதான் இதயத்தின் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இது தவிர கேரட், ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, பேரிக்காய், திராட்சை உள்ளிட்டவை நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்தவை. இவையும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
தயிர், கொழுப்பு நீக்கப்பட்ட பால் அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் எடுத்துக்கொள்ளலாம்.
சால்மன் போன்ற எண்ணெய் நிறைந்த மீன்கள், சைவம் என்றால் பருப்பு வகைகள், சுண்டல், பச்சைப்பயறு போன்ற தானியங்கள், டோஃபு போன்றவை புரதம் நிறைந்த உணவுகளை உணவில் தினமும் சேர்க்க வேண்டும்.
நட்ஸ் வகைகள் மற்றும் ஆலிவ், சூரியகாந்தி எண்ணெய்களை அளவோடு பயன்படுத்துவது ஆரோக்கியமான இதயத்திற்கு வழிவகுக்கும்.
என்ன சாப்பிடக் கூடாது?
அரிசி, கோதுமை மற்றும் முழு தானியங்களை அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்கும்.
சோடியம் அதிகமுள்ள பொருள்களை உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது. உப்புதான் ரத்த அழுத்தத்திற்கு எதிரி, இது அமைதியாக இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, உப்பை அளவோடு எடுத்துக்கொள்ளுங்கள்.
கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், பேக்கிங் உணவுகள், துரித மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
சர்க்கரையையும் முடிந்தவரை குறைக்க வேண்டும், செயற்கை குளிர்பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மது, புகைப்பழக்கமும் இதயத்திற்கு நல்லதல்ல.
வீட்டில் சமைத்த உணவுகளைச் சாப்பிடுங்கள். மஞ்சள், இஞ்சி, சீரகம், எலுமிச்சை போன்றவற்றை உணவுகளில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமே.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
இதையும் படிக்க | வயிறு உப்புசமாக இருக்கிறதா? சரிசெய்யும் வழிகள் இதோ...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.