இறையன்புவின் வாழ்வியல் தொடர்

தனிமையிலிருந்து தப்ப!

வெ. இறையன்பு

தனிமையில் பலவித வகைகள் உண்டு. மாநகரங்களில் இருக்கும் தனிமை விசித்திரமானது. பல நேரங்களில் அது சிறைச்சாலையின் தனிமையைப் போல அமைந்துவிடுகிறது. பலருடைய கதவுகள் நுழைந்த உடனேயே சாத்திக் கொள்ளப்படுகின்றன. அவர்கள் அருகிலிருப்பவர்களிடம் எந்த உறவையும் வைத்துக் கொள்வதில்லை. அடுக்ககங்களில் அடுத்த வீடே அந்நிய நாடாகி விடுகிறது. அங்கே வசிக்கிறவர்கள் பேர் கூடத் தெரிவதில்லை. பழக நினைத்தாலும் பயம் பற்றிக் கொள்கிறது. இந்தத் தனிமை முதியவர்களை அதிகம் வாட்டுகிறது. 

வயோதிகத்தில் அதிகம் வெளியே வர முடியாமல் தீவைப் போலத் தேங்கி விடுகிறார்கள். மாநகரப் பரபரப்போடு அவர்களால் போட்டி போட முடிவதில்லை. வெளியே சென்று வர அச்சம் ஏற்படுகிறது. சொந்த வாகனம் இல்லாவிட்டால் நிகழ்வுகளுக்குச் செல்வது கடினம். அனைவருக்கும் அந்த வசதி அமைவதில்லை. ஓடிச்சென்று பொது வாகனங்களைப் பிடிப்பதற்கோ, நிறைய செலவு செய்து வாடகை வாகனம் அமர்த்துவதற்கோ முடியாதவர்கள் இருக்கிறார்கள். சேமிப்பு அனைத்தையும் செலவு செய்து மகன்களைப் படிக்க வைத்தும், மகள்களுக்குத் திருமணம் செய்து வைத்தும் இருப்பைக் கரைத்தவர்களுக்கு நாளை நகர்த்துவது, யுகத்தை நகர்த்துவதைப் போல நீளமான வேதனையாக இருக்கிறது.

பெருநகரங்களில் தனிமையைத் தகர்க்கும் ஆறுதலாக தொலைக்காட்சி அமைந்துவிடுகிறது. அவற்றிலும் குடும்பப் பிரச்னைகள் குறித்த சம்பவங்களே இடம்பெறுவதால் அவர்கள் அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் தங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டுக்கொண்டு கண் கலங்குகிறார்கள். அவர்கள் மன அழுத்தமும், வேதனையும் அதிகரிக்கிறது. 

மனவியல் சொல்லும்படி மூளையைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர முடியாமல் அவர்கள் சூழல் அமைகிறது. மாலைவேளையில் பாட்டுக் கச்சேரிக்கோ, இலக்கிய நிகழ்வுக்கோ செல்வதற்கு விருப்பம் இருந்தாலும் வாய்ப்புகள் இல்லாமல் அவர்கள் இருக்கிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளில் வாழ்க்கை கண்களை உருட்டி பயமுறுத்தும்போது வேறுவிதமான முடிவுக்கு ஆட்படுகிறார்கள். 

கிராமப்புறங்களில் தனிமை இருப்பதில்லை. ஒரு காலத்தில் கூட்டுக்குடும்பம் பெரியோர்களை மையமாக வைத்து இயங்கியது. பலரும் உழைத்து குடும்பத்தின் பொது நோக்கத்தை நிறைவேற்றினார்கள். சிறிய அளவு நிலம் இருந்தாலும், கூலியாட்கள் வைக்காமல் குடும்பத்து உறுப்பினர்களே பண்ணையைப் பராமரிக்க முடிந்தது. ஒருவர் நோய்வாய்ப்பட்டால் மற்ற ஆண்கள் குடும்பத்தைத் தாங்கினார்கள். குழந்தைகளை வளர்ப்பது எளிதாக இருந்தது. ஆளுக்கு ஒரு வாய் ஊட்டி, பெரிதாவது தெரியாமல் அவை வளர்ந்து நின்றன. எல்லாரும் அமர்ந்து பந்தியில் சாப்பிடுவதுபோல உண்பதும், கிடைத்த இடத்தில் உறங்குவதும் வாழ்க்கை குறித்த குறைவான எதிர்பார்ப்புகளை அவர்கள் நினைவில் முடிந்து வைக்க வைப்பதாய் இருந்தது. 

இன்று குழந்தைகள் படித்து வெளி மாநிலங்களுக்கோ, நாடுகளுக்கோ சென்ற பிறகு, கணவன்-மனைவி இருவரும் தனிமையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைகிறார்கள். உடலில் தெம்பும், தொடர்பும் இருக்கிறவர்கள் ஓய்வுக்குப் பிறகும் பணியைத் தேடிக்கொண்டு ஒரு காலகட்டம் வரை சுறுசுறுப்புடன் இயங்குகிறார்கள். ஆனால் அது அவர்கள் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தவே செய்கிறது. 

பெருநகரங்களில் தூரத்தை நேரத்தால் நிர்ணயிக்க வேண்டியதாய் இருக்கிறது. அருகிலிருக்கிற இடத்திற்குக் கூட போக்குவரத்து நெரிசலில் போய் வர அதிக நேரம் தேவைப்படுகிறது. இது வயோதிகர்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

தனிமை விபரீத எண்ணங்களின் விளைநிலம். படைப்பாளிகள் தனிமையை விரும்பலாம். எப்போதும் பரபரப்பாக இருப்பவர்கள் தனிமை வேண்டும் என்பதற்காகவே பயணம் செய்யலாம். அப்போதும் உதவிக்குத் தேவையான நபர் அவர்கள் அருகில் இருப்பார்கள். வயோதிகத் தனிமை கொடூரமானது. அது பழைய சம்பவங்களை அசை போட வைக்கும். மனம் வித்தியாசமான வடிகட்டி. அது நல்லவற்றை மட்டும் நினைவில் நிறுத்தி, ஆகாதவற்றை வழிய விட்டுவிடும். நாம் கற்பனைகளையும் கலந்தே கடந்த காலத்தை கட்டமைக்கிறோம். எல்லாருக்கும் அவர்களுடைய இறந்த காலம் இனிமையாகவே தோன்றுகிறது. நிகழ்காலம் பயங்கரமானதாக இருக்கிறது. அதிலிருந்து தப்பிப்பதற்கு எந்த வழியையும் தேர்ந்தெடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.

பணிக்காக பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய சூழல் நேரிடுகிறது. இன்றைய உலகில் வேளாண்மையின் மகத்துவம் மங்கிவரும் நிலையில், பொருளாதாரத்தின் தேவைகள் பெருகி இருக்கிற சூழலில், கூட்டுக் குடும்பத்தை வலியுறுத்துவது போகாத ஊருக்கு இல்லாத வழியைச் செல்லாத மனிதர் உரைப்பதைப்போல.

எந்தப் பிரச்னையையும் கட்டத்துக்கு வெளியே வந்து சிந்தித்தால், பெட்டியைக் கடந்துவந்து யோசித்தால், தீர்வு காண முடியும். பிழைப்புக்காக பெருநகரங்களுக்கு வருகிறவர்கள் ஓய்வுக்குப் பிறகும் அங்கேயே தங்குவது என்கிற முடிவை எடுக்க வேண்டிய தேவையில்லை. இது அநாவசியமான நகர்மயமாக்கலை ஏற்படுத்துகிறது. மாநகரம் விரிவாகிக் கொண்டே போகும்போது இயற்கை மூலாதாரங்கள் அதிக அளவில் சுரண்டப்படுகின்றன. வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்ட நிலையில் பலருடைய இருப்பு, ஊசிப்போன பலகாரத்திலிருந்து வரும் நூலைப் போல இழுத்துக் கொண்டு வருகிறது. 

இதற்கு எளிமையான தீர்வு ஒன்று உண்டு. பணி ஓய்வு முடிந்ததும் மாநகரங்களைவிட்டு சொந்த ஊருக்குப் பயணப்படுவது நல்லது. அங்கேயே குழந்தைகள் இருப்பவர்கள் நீடிப்பதில் பிரச்னை இல்லை. யாருமற்றவர்கள் தங்கள் வீட்டில் அகதிகளைப் போல வாழ வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலானோருக்கு வேளாண்மை சம்பந்தப்பட்ட சொத்துக்கள் ஊரில் இருக்கின்றன. இருப்பது அரை ஏக்கராகவோ, ஒரு ஏக்கராகவோ கூட இருக்கலாம். மூலைக்கு ஒன்றாகச் சிதறிப்போய் இருக்கிற சகோதரர்கள் ஒன்றாகச் சேர்ந்து எளிய குடியிருப்பை அமைத்துக் கொண்டு அங்கே போய் தங்கலாம். மனம் தொடக்கத்தில் பழகியவர்களையே அதிகம் நேசிக்கிறது. எத்தனை மனஸ்தாபங்கள் வந்தாலும் சகோதரர்களின் அன்புபோல அது இருக்காது என்று பலரும் அறிவார்கள். எந்த மகிழ்ச்சி வந்தாலும் முதலில் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளவே மனம் பட்டாம்பூச்சியாய் படபடக்கிறது. 

இன்று மின்னணு சாதனங்களின் வசதியால் தொடக்கப்பள்ளியில்  படித்தவர்களைக் கூட தேடிக் கண்டுபிடிக்க முடிகிறது. ஒருவருக்கு இரண்டு நண்பர்கள் பரிச்சயமாக இருந்தால் போதும். அவர்களைக் கொண்டு அனைவருடைய இருப்பிடங்களையும், அலைபேசி எண்களையும் தருவித்து குழு அமைத்து அரட்டையடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஒன்றாகப் படிக்கும்போது பேசிக் கொள்வதைக்கூடச் செய்யாத அவர்கள், மற்றவர்கள் மகன்கள் திருமணத்திற்கு ஒன்று கூடுகிறார்கள், ஆணும் பெண்ணும் கை குலுக்கிக் கொள்கிறார்கள். வகுப்பறையில் எலியும் பூனையுமாய் இருந்தவர்கள் அருகருகே அமர்ந்து மனம்விட்டு பேசிக் கொள்கிறார்கள். உடலைத் தாண்டியது பழக்கம் என்கிற உண்மையை அறிய அவர்களுக்கு இத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கிறது. பழைய நினைவுகளையெல்லாம் பகிர்ந்துகொள்வது அத்தனை சுகம். பாசாங்கில்லாத நட்பாக அவர்களுடைய பரிமாற்றங்கள் தொடர்கின்றன. 

எல்லா வேறுபாடுகளையும் காலம் கரைத்துவிடும். எல்லா ரணங்களையும் நேரம் ஆற்றிவிடும். மனம் பரந்து விரிகிறபோது சின்னச் சின்னப் பிரச்னைகளை மறந்து விடுவோம். தன்முனைப்பு உடலில் தெம்பு இருக்கும்வரை மட்டுமே தாக்குப் பிடிக்கும். அதற்குப் பிறகு சதைகள் தளர்ந்ததும், நரம்புகள் சுருண்டதும் வீம்பு குறையும். இதுவே மனித இயற்கை. 

இன்று இயற்கைக்கு இயையாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிற காரணத்தால், அறுபதைத் தாண்டுகிறபோது எல்லாருக்கும் ஏதோ பிரச்னை. ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவற்றில் மட்டும் பொதுவுடைமை நிலவுகிறது. 

சகோதரர்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதும், ஒரே சமையலறையில் சமைத்துக் கொள்வதும், அவர்களுக்கு வரும் ஓய்வூதியத்தைக் கொண்டு தக்க பணியாளர்களை அமைத்துக் கொள்வதும் எளிது. அவர்கள் தனிமை பறக்கும். பகிர்ந்து கொள்ள பல விஷயங்கள் இருக்கும். அருகிலுள்ள கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்றால் எல்லாருக்குமான வாகனத்தை அமர்த்துவது எளிது. ஒருவருக்கொருவர் மருத்துவரீதியாகவும் உதவி செய்ய முடியும்.  அருகில் நமக்கு வேண்டியவர்கள் இருக்கிறார்கள் என்கிற நினைப்பே பெரிய பலம். 

வழிபாடும், தியானமும், வயோதிகமும் கடலைப்போல மனம் விரிவதற்காகத்தானே தவிர, குளத்தைப் போல தேங்குவதற்காக அல்ல.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT