இந்தக் கேள்வி நம்மில் எத்தனையோ பேருக்குள் எத்தனையோ சந்தர்பங்களில் எழுந்து, எழுந்து அடங்கி இருக்கலாம். ஆனால் அதற்காக நாம் என்ன செய்து விட்டோம் என்பதில் தான் இருக்கிறது, அந்தக் கேள்விக்கான மரியாதை. எல்லோருக்குள்ளும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது தான், ஆனால் பலருக்கும் நினைப்பதையெல்லாம் செயலில் காட்டி விடும் வேகமோ, தொடர்ந்த முனைப்போ, உழைப்போ ஆரம்பம் முதல் இறுதி வரை அப்படியே இருந்து விடுவதில்லை. பலருக்கும் சுய தம்பட்டக் கனவுகளில் அன்னை தெரசாவாக ஆசை இருக்கலாம்... ஆனால் நடப்பில் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு காய்ச்சல் என்றால் எங்கே தன் குழந்தைக்கும் தொற்றிக் கொள்ளுமோ எனும் பதட்டத்தில் சில நாட்களுக்கு நம் குழந்தையை அங்கே அண்ட விடாமல் பாதுகாப்பதில் தான் புத்தி செல்லும். பல யுகங்களாக இப்படித் தான் இருந்து வருகிறது நமது வெகு ஜன மனப்பான்மை.
எப்போதாவது இதிலிருந்து மாறுபட்டு நாம் ஆக நினைத்த நிஜ ஹீரோத்தன்மையுடன் எவரையாவது நாம் சந்திக்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? முதலில் அப்படி எல்லாம் இருக்க முடியுமா? என்று சந்தேகம் தான் வரும். பிறகு ஆற, அமர யோசித்து ஆஹா! இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா? என்று ஆச்சர்யத்துடன் அவர்களைப் பாராட்டத் தோன்றும். இதோ இந்த மனிதரும் அப்படிப் பாராட்டத் தகுந்தவர் தான்.
கேரளா கோழிக்கோட்டில் ’சுகிர்தம் ஷாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில் கல்வி கற்க வாய்ப்பு தடைபட்ட அல்லது மறுக்கப்பட்ட இளம்பெண்களின் வாழ்நாள் கல்விக் கனவுகளை நனவாக்கி நிறைவேற்றித் தரும் வேலையை மனமுவந்து செய்து கொண்டிருக்கிறார். யாரிந்த மகாதேவப் பிரசாத்? எப்படி அவருக்கு இப்படி ஒரு எண்ணம் வந்து செயல்படுத்தத் தோன்றியது? என்று பார்க்கலாமா?
கிராமத்தில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு விடுமுறை நாளொன்றில் பறை அடித்துக் கொண்டு வந்து ‘பழைய துணிகளும், உணவும் கேட்டு கையேந்திய ஏழைச் சிறுவர்களைக் கண்டு மனம் நொந்து போனது. தன் வயதொத்த சிறுவர்கள் தானே அவர்களும், தனக்கு சாதாரணமாகக் கிடைக்கக் கூடிய அத்தனை வசதிகளும் அவர்களுக்கு எட்டாக் கனியாக இருப்பதென்ன? இந்த நிலை மாற ஏதாவது செய்தாலென்ன? என்று யோசிக்கத் தொடங்கினான்.
கிட்டத்தட்ட தனது 27 வது வயது வரை அந்த யோசனையின் தாக்கத்திலிருந்து விடுபட முடியாது தனது பட்டப் படிப்பை முடித்தார் அந்த இளைஞர். இளமையில் இருந்து அவரைத் துரத்திக் கொண்டிருந்த சேவை மனப்பான்மை, அது இன்னும் அப்படியே தான் இருந்தது, அந்த எண்ணங்களின் தாக்கத்துடன் தான் ஒரு சமையல் கலை வல்லுநராக தனது பணியிடத்தில் ஒரு டேபிளில் இருந்து மறு டேபிளுக்கு காபிக் கோப்பைகளை கடத்திக் கொண்டிருந்தார் அவர். ஒரு கட்டத்தில் இதெல்லாம் அனர்த்தமான வேலை என்று நினைப்பு வலுப்பட்டதாலோ என்னவோ, கடைசியில் உலகம் முழுக்க சுற்றும் ஆசையில் தான் படித்த சமையல்கலை வல்லுநருக்கான படிப்பையும், அதன் மூலம் கிடைக்கக் கூடிய வருமானத்தையும் கூட பொருட்படுத்தாமல் அவற்றை தூக்கிப் போட்டு விட்டு மகாதேவ் சுகிர்தம் ஷாரிட்டபிள் டிரஸ்டை தொடங்கினார். அவரது சேவை மனப்பான்மைக்கான வெற்றி என்று தான் இதைச் சொல்கிறார் அவர்.
நமது நாட்டில், குடும்பத்தினரால் நிறைவேற்ற இயலாத கல்விக் கனவுகளுடன் ஆயிரமாயிரம் இளம் பெண்களும், சிறுமிகளும் ஏக்கத்தோடு காத்திருக்கிறர்கள். அவர்களுக்குத் தேவை ஏதோ ஒரு கல்வியோ? அல்லது சின்னஞ்சிறு பண உதவியோ அல்ல... விரும்பிய கல்வியை ஆசை தீரக் கற்றுக் கொள்ளும் ஆவலை நிறைவேற்றித் தர ஓரு ஆதரவுக் கரம் மட்டும் தான். அந்த ஆதரவுக் கரமாக அவர்களோடு பயணித்தாலென்ன? என்ற அவரது ஆர்வத்தின் வெளிப்பாடு தான் இந்த டிரஸ்ட்.
27 வயதில் வருமானம் தரக் கூடிய வேலையை விட்டு விட்டு இப்படி ஒரு நல்ல விசயம் தொடங்கப் போகிறேன் என்று சொன்னதும் நாலா பக்கமிருந்தும் அவருக்கு வந்து குவிந்தவை வாழ்த்துக்கள் அல்ல! இதென்ன முட்டாள் தனம் எனும் கண்டனங்கள் தான். இந்த நேரத்தில் தான் மகாதேவ் தனது தந்தையை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறார்.
கைவிடப்பட்டவர்களுக்கான கல்விக் கனவை நிறைவேற்ற ஒரு டிரஸ்ட் தொடங்கப் போகிறேன் என்று சொன்னதும் அவரது தந்தை குடும்பச் சொத்தை அடமானம் வைத்து பணம் கொடுத்தாராம். தந்தையின் பண உதவியோடும், நெருங்கிய நண்பர்கள் சிலரை உறுப்பினர்களாகக் கொண்டும் முதன் முதலாக 2006 ல் இந்த டிரஸ்ட் தொடங்கப்பட்டது.
முதலில் கைவிடப்பட்டவர்களுக்கான கல்விக் கனவு என்பது பொதுவாக இருந்தாலும் களப்பணியில் நாளடைவில் அவர் கண்டு கொண்ட உண்மை வேறொன்றாக இருந்தது. நிறைவேறாத கல்விக் கனவு என்பது ஆண்களை விட பெண்களுக்கு தான் பெரிய சவாலாக இருந்தது. வயது வந்த பெண்களுக்கு குடும்பத்திலும் சரி, சமூகத்திலும் சரி நிறைய கட்டுப்பாடுகள், பிடித்த கல்வியை படிக்க வைப்பதிலும் கூட ஆயிரத்தெட்டு தடைகள். இதைச் செய்... இதைச் செய்யாதே என்று ஏகத்துக்கும் கட்டுப்பாடுகள். இதிலிருந்து போராடி மீண்டெழவே நேரம் போதாதாகையால் நிறையப் பெண்களுக்கு தங்களுக்கு திறமை இருக்கிறது என்பதே கூட நம்பமுடியாத விசயமாகி விடுகிறது.. எனவே படிக்க வசதியற்ற குடும்பச் சூழல் கொண்ட பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தங்களது சொந்த வீட்டைப் போன்ற ஒரு சூழலை உருவாக்கிக் கொடுத்து அவர்களது கல்விக் கனவையும் நிறைவேற்றிக் கொடுத்தால் என்ன? என்று டிரஸ்டிகள் யோசித்தார்கள்
தொடங்கிய போது 3 பெண்களே இருந்திருந்தாலும் தற்போது 5 முதல் 18 வயதுக்குட்பட்டு 25 பெண்கள் இருக்கிறார்கள். முதலில் இங்கே தங்கிப் படிக்கத் தொடங்கிய பெண்கள் மூவரும் ஃபேஷன் டிஸைனர், சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ், வழக்குரைஞர் என்று கற்றுத் தேர்ந்து தங்களது கனவுகளை நனவாக்கிச் சென்றதை இவர்களது முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். மகாதேவ் தான் நினைத்ததை நடத்திக் காட்டி விட்டார், ஆனால் இப்படியெல்லாம் நேர்மையாக சேவை மனப்பான்மையுடன் இயங்கும் போது இவரைப் பற்றி மக்களது பொதுவான அபிப்ராயம் என்னவாக இருக்கிறது தெரியுமா?
சிறு வயதில் நடந்த ஏதோவொரு அதிர்ச்சிகரமான சம்பவம் தான் இவரை இப்படி மாற்றி விட்டது என்று கூறுகிறார்களாம். ஆம் அவர்களைப் பொறுத்தவரை சமூக சேவையெல்லாம் பணி ஓய்வு பெற்ற பிறகு செய்ய வேண்டியதென்று பட்டியலிடப்பட்ட ஒன்றல்லவா?!
அவர்கள் நீடிக்கட்டும் அவரவர் சொந்தக் கற்பனைகளுடன்... இங்கு அடுத்த கட்டமாகப் பெண்கள் தங்கிப் பயில சொந்தக் கட்டிடம் ஒன்று கட்ட வேண்டும். அங்கு மாணவிகள் விருப்பத்துக்கு ஏற்ப நவீன வசதிகளுடன் ஒரு மிகப்பெரிய நூலகம் அமைக்க வேண்டும். கம்ப்யூட்டர் லேப் ஒன்று தொடங்க வேண்டும் எனத் தனது எதிர்காலத் திட்டங்களை பட்டியிலிடுகிறார் மகாதேவ்.
இப்போது சுகிர்தம் டிரஸ்ட் மூலம் அங்கே தங்கிப் பயிலும் சிறுமிகளுக்கு எந்தத் தடைகளும் இன்றி அவரகள் விரும்பும் கல்வி... அது பாட்டு, நடனம், அறிவியல் ஆராய்ச்சி, கம்ப்யூட்டர், சட்டம், மருத்துவம், பொறியியல், சமையல் கலை என எதுவாக இருக்கட்டும், அதற்கான முறையான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படுகின்றன.
இது தானே நிஜமான ஹீரோயிஸம். இதைத் தானே நிஜமான வெற்றி என்று கொண்டாட வேண்டும். இப்படியானவர்களின் பொருட்டே இன்னும் இப்புவி சமநிலை இழக்காமல் இருக்கக் கூடும்... என நம்புவோமாக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.