ஸ்பெஷல்

நாங்களே ஆள்கிறோம்...ஊராட்சி நிர்வாகத்தில் பெண்கள்!

உற்சாகமாகப் பேசும் பெண் பிரதிநிதிகள் பலரும் இந்த முறையும் மீண்டும் போட்டியிடுவதை உறுதி செய்கிறார்கள். கூடவே, மக்களுக்கு நல்லது செய்திருக்கிறோம், ஏன் வாக்களிக்க பணம் தர வேண்டும் என்ற கேள்வியும் முன் 

சா. ஜெயப்பிரகாஷ்

அரசியலமைப்பு நிர்வாகத்தில் மூன்றாவது படியாகக் கருதப்படும் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

இன்னமும் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவிகித இடஒதுக்கீடு பெண்களுக்கு உறுதியாகாத நிலையில், உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவிகித ஒதுக்கீடு என்ற இந்த அறிவிப்பு முன்னோடித் திட்டமாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட பெண் பிரதிநிதிகள் எப்படி களத்தில் பணியாற்றினர் என்பது குறித்த விமர்சனங்களும் பலவாறு முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பெண் உறுப்பினர் மற்றும் தலைவர்களின் கணவர்கள்தான் எல்லாவற்றையும் கவனிக்கிறார்களா? தருமபுரி மாவட்டம் பென்னாகரம், பாலக்கோடு ஒன்றியங்களைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் சிலரை, இங்கு நடைபெற்ற அதிகாரமளிக்கும் கருத்தரங்கு ஒன்றில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் பேசியதிலிருந்து...
 

மாதம்மாள்
பேவள்ளி ஊராட்சித் துணைத் தலைவர் 

என்னோடு போட்டியிட்டவர்கள் 5 பேரும் ஆண்கள். நான் மட்டுமே பெண். வெற்றி பெற்றேன். எங்கள் ஊராட்சித் தலைவரும் பெண்தான். ஆனால், அவரது கணவரே எல்லாமும். சுதந்திர தினத்தன்று கொடியேற்ற அவரே வந்தார். தடுத்து நிறுத்தினோம்.
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரிகளும்கூட பெண் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை வழங்காத நிலை இருந்தது. எங்கள் கணவர்கள் வந்தால்தான் மதிப்பீர்களா என நேருக்கு நேராகக் கேட்டோம். படிப்படியாக எல்லாம் மாறியது.
சாலை, குடிநீர், கழிப்பறையுடன் நின்றுவிடாமல் நியாய விலைக் கடைகளுக்கும் சென்று இருப்பு விவரங்களையும் ஆய்வு செய்கிறோம்.
 

பி. சங்கீதா
ஓஜிஅள்ளி ஊராட்சி 7-ஆவது வார்டு உறுப்பினர்

அரசுப் பள்ளிகளில் இடைநிற்கும் மாணவர் பட்டியலை எடுத்து நேராக அந்த வீடுகளுக்குச் சென்று பேசி, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்திருக்கிறேன். எங்கள் ஊராட்சியில் பெண் உறுப்பினர்கள்தாம் அதிகம். 
நாங்கள் சொல்வதை தலைவர், அதிகாரிகள் கேட்டுக் கொள்வார்கள். மறுத்துப் பேச மாட்டார்கள். தீர்மானங்களைப் படித்துப் பார்த்துத்தான் கையெழுத்துப் போடுவோம்.
 

கலாவதி
எர்ணஅள்ளி ஊராட்சித் துணைத் தலைவர்

வார்டு உறுப்பினருக்குப் போட்டியிடும்போது, என்னோடு சேர்த்து 4 பேர் வேட்புமனு அளித்திருந்தனர். அவர்களில் இருவர் ஆண்கள். என்னை வாபஸ் பெறச் சொன்னார்கள். முடியாது என மறுத்தேன். பிறகு அனைவரும் வாபஸ் பெற்றனர். போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டேன். துணைத் தலைவரும் ஆனேன். எங்கள் பகுதி அங்கன்வாடி மையங்களை ஆய்வுசெய்து, தவறுகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். கிராமத்தில் முதியோர் ஓய்வூதியத் தொகை பலருக்கும் பெற்றுத் தந்திருக்கிறேன்.
 

எம். நாகராணி
கரகதஅள்ளி ஊராட்சி 1-ஆவது வார்டு உறுப்பினர்

இளவயது திருமணங்களை நிறைய தடுத்து நிறுத்தியிருக்கிறோம். ஊராட்சிக் கூட்டங்களுக்கான அமர்வுக் கட்டணமாக ரூ. 50 மட்டுமே அரசிடமிருந்து பெறுகிறோம். அதையும் பலமுறை கேட்டுத்தான் பெற வேண்டியிருக்கிறது. ஆனால், தீபாவளி நேரத்தில் ரூ. 5 ஆயிரம் போனஸ் தருகிறார்கள்.
 

என். செல்வி
கம்மாளப்பட்டி ஊராட்சி 2-ஆவது வார்டு உறுப்பினர் 

ஊராட்சிக் கூட்டத்தில் குறிப்பேடு கையெழுத்து போடுவதற்கு முன்பு சில பக்கங்களைக் காலியாக விட்டு கையெழுத்து வாங்கினார்கள். தொடக்கத்தில் எங்களுக்குப் புரியவில்லை. அதன்பிறகு, காலியாக உள்ள பக்கத்தில் குறுக்கே கோடு போட்டுவிட்டு கையொப்பமிட்டோம். அதன்பிறகு நடைபெற்ற கூட்டங்களில் இடைவெளியின்றிதான் உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்குகிறார்கள்.
 

வி. கலைவாணி
பேளாரஅள்ளி ஊராட்சி 1-ஆவது வார்டு உறுப்பினர்

சாலை போடுவதற்கான பணிகளுக்காக ரூ. 7 லட்சம் வரை செலவிட்டதாகச் சொன்னார்கள். இந்தப் பணியில் அதிகமாக கணக்கு எழுதியிருப்பதைக் கண்டுபிடித்தேன்.  கூட்டத்தில் அதனைச் சொல்லி எதிர்ப்புத் தெரிவித்தேன். தனிநபர் கழிப்பறை கட்டியதாகக் கூறினார்கள். ஆனால், எனது வார்டுக்கு ஒரு கழிப்பறை கூடக் கட்டவில்லை. இதையும் சொல்லிக் கண்டித்தேன். பிறகு 7 கழிப்பறை கட்டலாம் என்றார்கள். எல்லா வீடுகளுக்கும் கட்ட வேண்டும் எனக் கோரியிருக்கிறேன். வார்டு பகுதிக்குள் 7 இடங்களில் மினி சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகளைப் போராடிப் பெற்று அமைத்திருக்கிறேன்.
 

வி. கலா
கும்மனூர் ஊராட்சி 12-ஆவது வார்டு உறுப்பினர்

எங்கள் பகுதி மக்களுக்கு பசுமை வீடுகள், தெரு விளக்குகள், தண்ணீர் தொட்டிகள், பள்ளி சுற்றுச்சுவர், மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை என அனைத்தையும் பெற்றுத் தந்திருக்கிறேன். எந்த நிலையிலும் எனது கணவர் இந்தப் பணிகளில் தலையிட மாட்டார். ஆண்டுக்கு ஒருமுறை போனஸ் தருகிறார்கள். மாத ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். எந்தக் கணக்கும் இன்றி எதற்காக போனஸ்? முறையாக ஊதியம் தரலாமே. தவறுகள் நடக்காதே! என்றார் கலா.

உற்சாகமாகப் பேசும் பெண் பிரதிநிதிகள் பலரும் இந்த முறையும் மீண்டும் போட்டியிடுவதை உறுதி செய்கிறார்கள். கூடவே, மக்களுக்கு நல்லது செய்திருக்கிறோம், ஏன் வாக்களிக்க பணம் தர வேண்டும் என்ற கேள்வியையும் முன்வைக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT