சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் யமுனா தேவி தம்பதியின் மகள் இளைய மகள் தன்யஸ்ரீ. 4 வயது தன்யஸ்ரீ கடந்த ஜனவரி மாதத்தில் ஓர் நாள் தன் தாத்தாவுடன் வீட்டின் அருகில் இருந்த மளிகைக் கடைக்குச் சென்றார். அவர் கடைக்குள் செல்லும் போது அதே கட்டிடத்தில் வசிக்கும் 30 வயது சிவா எனும் இளைஞர் இரண்டாம் மாடியில் இருந்து சிறுமி தன்யஸ்ரீயின் மீது விழுந்துள்ளார். அவர் குடிபோதையில் இருந்ததால் நிலைதடுமாறி மாடியிலிருந்து சிறுமியின் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. எடை மிக்க இளைஞர் ஒருவர் பச்சிளம் சிறுமியின் மீது விழுந்ததால் நசுங்கிய சிறுமி சுய நினைவை இழந்த நிலையில் அருகிலிருக்கும் அப்பல்லோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து கிரீம்ஸ் சாலையில் உள்ள அம்மருத்துவமனையின் பிரதான கிளைக்கு சிறுமி சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
அன்றைய நிலையில் சிறுமியின் ஆரோக்யம் கவலைக்கிடமாகவே இருந்தது. மூளையில் வீக்கமும், முதுகுத்தண்டு மற்றும் காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த மருத்துவர்கள் சிறுமியை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து 48 மணி நேரம் கெடுவில் வைத்தனர். சிறுமியின் மீது விழுந்து உயிராபத்தை ஏற்படுத்திய இளைஞர் சிவா கைது செய்யப்பட்டார். இதெல்லாம் கடந்த ஜனவரி மாதச் செய்திகள்.
தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி தன்யஸ்ரீ... முகமறியா பலரின் கருணையாலும் அவர்கள் அளித்த பொருளுதவியாலும் சிகிச்சை பலனளித்து நல்ல முறையில் ஆரோக்யம் பெற்று வீடு திரும்பியிருக்கிறார். மறுபிறவி எடுத்து துறு துறுவென ஓடித்திரியும் சிறுமியைக் கண்டு அவளது பெற்றோர் முகத்தில் சந்தோஷ வெளிச்சம் விரிகிறது.
மறுபிறவியெடுத்த தன்யஸ்ரீயைச் சந்தித்து புதிய தலைமுறை டிவி சேனல்காரர்கள் அளவளாவிய காணொளி...
சிறுமி தன்யஸ்ரீக்கு 7 வயதில் யாஷிகா என்றொரு அக்காவும் இருக்கிறார். யாஷிகா பள்ளி செல்வதைக் கண்டு தன்யஸ்ரீ தானும் பள்ளி செல்ல ஆசைப் படுவதாகவும் அதற்காக அவளைப் பள்ளியில் சேர்க்கும் முனைப்பில் தற்போது தாங்கள் இறங்கியிருப்பதாக அவளது பெற்றோர் தெரிவித்தனர். தங்கள் மகளது மறுபிறவிக்கு காரணம் முகமறியாத பலர் செய்த பொருளுதவி மற்றும் ஆறுதல் மொழிகளே! அவர்கள் அனைவருக்கும் மனமுவந்த நன்றிகள் என நெகிழ்கின்றனர் தன்யஸ்ரீயின் பெற்றோர்.
அக்காவுடன் பள்ளி செல்ல விரும்பும் தன்யஸ்ரீக்கு நன்றாகப்படித்து டாக்டராக வேண்டுமென்று ஆசையாம்!
தங்களது குழந்தையின் வாழ்வில் திடீரெனக் குறுக்கிட்ட கொடூரமான அந்த விபத்தினால் பலநாட்கள் கிழிந்த வாழைநார் போல மருத்துவமனை கட்டிலில் கிடந்த தங்களது சின்னஞ்சிறு மகள் துள்ளித் திரியும் கோலம் கண்டு நெக்குருகிப் போகிறார்கள் அவளது தாயும், தந்தையும்.
எமனின் நுழைவாயில் வரை சென்று மீண்டு வந்த சிறுமிக்கு தினமணி இணையதளம் சார்பாக வாழ்த்துக்கள்!
Image courtesy: puthiya thalaimurai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.