ஸ்பெஷல்

எமராஜன் வேடத்தில் சாலைகளில் நடமாடும் நபர்! யாரிந்த இளைஞர்? எதற்கிப்படி துணிந்தார்?

RKV

பெங்களூரு தெருக்களில் எமராஜன் வேடத்தில் நடமாடிக் கொண்டும், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கக் கூடியவர்களை வாலண்டியராக இழுத்துப் பிடித்து நிறுத்தி ஹெல்மெட்டின் அத்யாவசியம் குறித்து விளக்கு, விளக்கென்று விளக்கி அதை அறியாமல் சுற்றுவதின் பின்னுள்ள அலட்சியத்தையும் அதன் பின் விளைவையும் எடுத்துக்கூறி தன் எமராஜன் வேலையைக் கச்சிதமாகச் செய்து கொண்டிருந்த அந்த இளைஞரின் பெயர் வீரேஷ் முட்டினமத். யார் இந்த இளைஞர்? இவருக்கு எதற்கு இந்த வேலை என்று சிலருக்குக் கேட்கத் தோன்றலாம். அந்த இளைஞர் சில கன்னட சீரியல்களில் நடித்திருக்கிறார். அவருக்கு நடிப்பு தான் எல்லாமும். நடிப்பின் மேலிருந்த ஆசையின் காரணமாகத் தனது பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவராகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வீரேஷுக்கு நடிப்பு என்றால் உயிர். சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் சினிமா தான் ஒரே லட்சியம் என்பதால் அதற்காக பெரும் பிரயத்தனத்துடன் முயன்று கொண்டிருக்கிறார். இடையிடையே மேடை நாடகங்கள் மற்றும் சீரியல்களில் தோன்றவும் மறுப்பதில்லை.

சில வாரங்களுக்கு முன்பு ரவிந்திர கலாஷேத்ராவிலிருக்கும் கரந்த் கேண்டீனுக்கு வருகை தந்த போக்குவரத்து காவலர்கள் குழு ஒன்று, சாலைப்போக்குவரத்தில் சாலை விதிகளை மதிக்காமல் செல்லக் கூடியவர்களை எச்சரிக்கும் விதத்தில் தாங்கள் புது விதமானதொரு பிரச்சார உத்தியை மேற்கொள்ளவிருப்பதாகவும் அதில் எமராஜனாக நடிக்க பொருத்தமான நபரைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் கூறி இருக்கிறார்கள். பல வாரங்களாகத் தேடுதல் நிகழ்த்தியும் கூட எமராஜனாக நடிக்க தங்களுக்கொரு நபர் கிடைக்கவில்லை என்றும் காவல்துறை அலுவலர்களையே நடிக்க வைக்கலாம் என்று பார்த்தால், அவர்களில் யாருமே எமனாக நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த உரையாடல் நிகழ்ந்த கணத்தில் அங்கிருந்த வீரேஷ் இந்த வாய்ப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தார். அப்படித்தான் காவல்துறை அதிகாரிகள் அளித்த எமராஜன் வேடத்தை தான் ஏற்றுக் கொண்டு தற்போது பெங்களூரு சாலைகள் மற்றும் போக்குவரத்து சிக்னல்கள் தோறும் எமராஜனாகத் தோன்றி சாலை விதிகளை மதிக்கத் தவறியவர்களை எச்சரித்து வருவதாகக் கூறுகிறார் அவர்.

காவல்துறையைச் சேர்ந்தவர்களே நடிக்கத் தயங்கிய ஒரு வேடத்தை நடிப்பின் மீதிருந்த மோகத்தால் மட்டுமே வீரேஷ் தேர்வு செய்யவில்லை. அவரது சொந்த வாழ்க்கை சோகமும் கூட இந்த முடிவெடுக்க அவரைத் தூண்டியிருக்கிறது எனலாம். கடந்தாண்டு வீரேஷின் மூத்த சகோதரர் மாரிசுவாமி இருசக்கர வாகன விபத்தொன்றில் சிக்கி அகால மரணமடைந்தார். அவரது மரணத்திற்காக பிரதான காரணம் தலையில் ஹெல்மெட் அணியாதது. இத்தனைக்கும் வாகனத்தை இயக்கியது மற்றொரு நபர். மாரிசுவாமி வாகனத்தின் பில்லியனில் தான் அமர்ந்து பயணித்திருக்கிறார். அப்படியிருந்தும் மரணம் சம்பவித்திருக்கிறது. ஆனால், நம்மூரில் வண்டியோட்டுபவர்களைத் தான் ஹெல்மெட் அணியச் சொல்லி வற்புறுத்த வேண்டியதாக இருக்கிறது. பில்லியனில் அமர்ந்து செல்பவர்கள், எங்களுக்கெல்லாம் ஹெல்மெட் தேவையே இல்லை என்று அந்த அறிவுரையைப் புறந்தள்ளுகிறார்கள். அது தவறு எனச் சுட்டுகிறது வீரேஷின் சகோதரர் மாரிசுவாமியின் மரணம். அந்தக்காரணத்தை முன்னிட்டும் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே வீரேஷ் இப்படி ஒரு முயற்சியில் இறங்கியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

இதில் மேலும் குறிப்பிடத்தக்கதும், பாராட்டத்தக்கதுமான அம்சம் என்னவென்றால், தனது இந்த சேவைக்காக வீரேஷ் ஒரு பைசா கூட பண உதவி பெறவில்லை என்பது தான். எமதர்ம ராஜனாக வேடம் பூணத் தேவையான உடைகளைக் கூட இவரையே தயார் செய்து கொள்ளுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டதால் அதற்கென தனியாக டிஸைனர் வைத்து தான் எமராஜனுக்கான உடைகளைத் தைத்துக் கொண்டதாகக் கூறுகிறார் வீரேஷ்.

பொது மக்களை சாலை விதிகளை மதிக்கச் செய்ய வேண்டும்.
ஹெல்மெட் அணிவதின் பின்னுள்ள அவசியத்தை உணரச் செய்ய வேண்டும்.
இந்த இரண்டு எச்சரிக்கைகளையும் பின்பற்றா விட்டால் என்னென்ன விபரீதங்கள் விளையும் என்பது பற்றியும் பொது மக்களிடம் விளக்கி உணர வைக்க வேண்டும்.

இந்த மூன்று டார்கெட்டுகளை நிர்ணயித்து அவற்றை நிறைவேற்றுவதற்காக மட்டுமே வீரேஷ் தற்போது பெங்களூரு சாலைகளில் எமராஜனாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

வீரேஷ் எமராஜனாக நடிக்க ஒப்புக் கொண்டதில் அவரது நண்பர்களுக்கு மிகப்பெரிய மனவருத்தம் இருக்கிறதாம். ஆயினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த நல்ல காரியத்தில் இறங்கியிருக்கும் வீரேஷ், இதைப் பார்த்த பின் சினிமாவில் தனக்கொரு பிரேக் கிடைத்தால் அதுவும் தன் வாழ்க்கைக்கு நல்லது தானே! என்கிறார்.

வீரேஷின் நல்ல மனதுக்கு அவர் சினிமாவிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துச் சிறப்பிக்க வாழ்த்துவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

SCROLL FOR NEXT