super 30 Anand kumar 
ஸ்பெஷல்

கூகுள் டாப் 10 ல் இடம்பிடித்த இந்தியப் பிரபலங்களில் இவருக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு!

சாமானிய இந்தியர் ஒருவர், தனது திறமையாலும், விடாமுயற்சியாலும் முன்னேறி இன்று கூகுள் தேடலில் டாப் 10 ல் இடம்பெற்றிருப்பது மிகச்சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.

RKV

கூகுள் ஒவ்வொரு ஆண்டும், தனது தேடுபொறியில் அதிகமும் தேடப்பட்ட டாப் 10  பிரபலங்கள் என்றொரு பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு இறுதியிலும் பிரபலங்களை உள்ளடக்கிய அப்படியொரு பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறது. கூகுள் வெளியிட்டுள்ள அந்தப் பட்டியலில் சூப்பர் 30 பயிற்சி மையத்தின் நிறுவனரான ஆனந்த் குமார் கூகுளில் அதிகமும் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் 4 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. ஏழ்மையில் வாடும் பல்லாயிரக் கணக்கான இளைஞர்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக விளங்கி வரும் ஆனந்த் குமார் கடந்த 18 ஆண்டுகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களது ஐஐடி கனவு நிறைவேற உந்துசக்தியாகவும், வழிகாட்டியாகவும் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த் குமாரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் அவரது வேடத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து ’சூப்பர் 30’ என்றொரு திரைப்படம் வெளிவந்த பின்னர், அவர் இந்தியா முழுவதும் அறியப்பட்ட பிரபலமானார். அவரது கல்விச்சேவையைப் பாராட்டி இந்தியா முழுவதிலுமாகப் பிரபல கல்வி நிறுவனங்கள் அவரைத் தங்களது விருந்தினராக அழைத்துக் கெளரவித்திருந்தன. அவ்வகையில் ஆனந்த் குமாரின் புகழ் இந்தியா தாண்டியும் உலகம் முழுவதும் பரவியது.

கூகுள் டாப் 10 பட்டியலில் ஆனந்த் குமார் தவிர மேலும் பல பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டு மீண்ட இந்திய விமானப்படை வீரரான அபிநந்தன் வர்த்தமான், பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகானின் மகளும் நடிகையுமான சாரா அலிகான், பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான யுவராஜ் சிங் உட்பட பலரது பெயர் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இவர்களில் மற்ற அனைவருக்கும் திரைப்படப் பின்னணி இருக்கையில் ஆனந்த் குமார் மட்டுமே விதிவிலக்கானவர். அவருக்கு கிடைத்த புகழ் வெளிச்சத்துக்குப் பிறகு தான் அவரது வாழ்க்கை திரைப்படமானது. எனவே, சாமானிய இந்தியர் ஒருவர், தனது திறமையாலும், விடாமுயற்சியாலும் முன்னேறி இன்று கூகுள் தேடலில் டாப் 10 ல் இடம்பெற்றிருப்பது மிகச்சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது. தவிர, ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு ஐ ஐ டியில் இணைந்து பயிலும் விருப்பம் இருப்பின் அவர்களுக்குத் தனது பயிற்சி மையத்தின் மூலமாக இலவசப் பயிற்சி அளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் ஆனந்த் குமார் என்பது வரவேற்கத்தக்க விஷயங்களில் ஒன்று.

ஆனந்த் குமாரின் வெற்றிகளைப் பற்றி இன்னும் குறிப்பிட வேண்டுமென்றால், இதையும் சேர்த்துச் சொல்லலாம். கடந்த மாதம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார் ஆனந்த்குமார். இது சாதாரண அழைப்பல்ல. ஒரு உலகப் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகம் தனது மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்ற ஒரு இந்தியரை அழைக்கிறது என்றால் அவர் செயற்கரிய காரியங்களைச் செய்திருக்க வேண்டும். அவரது புகழ் அங்கு வரை பரவியிருக்க வேண்டும். அப்படியில்லாமல் அவர்கள் தங்களது மரியாதைக்குரிய விருந்தினராக இவரை அழைத்துச் சிறப்பிப்பது எங்ஙனம் சாத்தியம்?! அவ்வகையில் கூகுள் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள பிற இந்தியர்களைக் காட்டிலும் ஆனந்த் குமார் தனி மரியாதைக்குரியவர் எனலாம். அத்துடன் எந்த பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டாரோ, அதே பல்கலைக்கழகத்தில் இணைந்து பயில விரும்பி, அந்த ஆசைக்கனவு நிறைவேறாமல் தவித்தவர் ஆனந்த் குமார் என்பதும் இதில் குறிப்பிடத்தகுந்த விஷயமே. எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவரான ஆனந்த் குமாருக்கு கேம்ப்ரிட்ஜில் இணைந்து பயில மிகுந்த விருப்பமிருந்தது. அது அவரது கனவுகளில் ஒன்று. ஆனால், குடும்பத்தில் நிலவிய பொருளாதாரச் சிக்கல் காரணமாக அவரால் அன்று அங்கெல்லாம் சென்று பயில முடியவில்லை. ஆனால், இப்போது ஆனந்த் குமாரின் சாதனை காரணமாக அந்தப் பல்கலைக்கழகமே அவரை வேண்டி விரும்பி சிறப்பு விருந்தினராக அழைத்துக் கெளரவித்திருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம்.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமர்சிக்கப்படும் சாய் அபயங்கர் டூட் பாடல்!

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் உரையாடல்!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் கைது

யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!

அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர்?

SCROLL FOR NEXT