யார் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்பதும் மக்களுக்கு இன்னும் இரண்டரை மாதங்களில் தெரிந்துவிடும்.
16ஆவது மக்களவை, அதாவது கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கி மே 12ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற்ற அந்தத் தேர்தலில் மே 17ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்தன.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 282 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதன் கூட்டணியில் இடம்பெற்ற இதர கட்சிகளுக்கு 53 இடங்கள் கிடைத்தன.
ஹிந்தி பேசும் மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பிகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பெற்ற வெற்றிகள் மூலமே தனிப் பெரும்பான்மை கிடைத்தது.
அடுத்த 5 ஆண்டுகள் என்னைப் போன்று கடுமையாக உழைப்பவரை நாடு காணாது. எனது அரசியல் எதிரிகள் கூட எனது உழைப்பில் சந்தேகம் கொள்ள மாட்டார்கள் என்று கூறியிருந்தார் பிரதமர் மோடி.
இந்த ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்களும், சாதனைகளும் படைக்கப்பட்டிருந்தாலும், சில விமர்சனங்களையும், கடுமையான சவால்களையும் இந்த அரசு எதிர்கொண்டுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.
பதான்கோட், உரி, புல்வாமா ஆகிய இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கின.
அதுவும், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமாவில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தது கடைக்கோடி மக்களையும் கண்ணீர் சிந்த வைத்த நிகழ்வாக அமைந்தது.
பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மத்திய அரசும் உரிய பதிலடி கொடுத்தே வந்துள்ளது. இருப்பினும், இதுபோன்ற தாக்குதல்களை மேற்கோள்காட்டி, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையான விமர்சனங்களை மோடி அரசுக்கு எதிராக முன்வைத்து வருகின்றன.
நாட்டின் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இக்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
கடந்த 5ஆண்டுகளில் முன்னெடுத்த சாதனைகளை சுட்டிக் காட்டி, புதிய இந்தியாவை கட்டமைக்கவும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் பாடுபடும் ஒரே தலைவர் மோடி தான் என்ற பிம்பம் பாஜகவினரால் கட்டமைக்கப்பட்டுவரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.
சாத்தியமில்லாதது இன்று சாத்தியமானது என்ற முழக்கத்தை முன்வைத்து, பாஜக ஊடக பிரசாரத்தை தொடங்கிவிட்டது.
பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்துவரும் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் வரும் மக்களவைத் தேர்தலில் கடந்த முறையைக் காட்டிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் மோடி ஆட்சி அமைக்க வேண்டும்.
இந்திய அரசியல் வரலாற்றில் முந்தைய தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுவிட்ட கட்சி, அடுத்த தேர்தலில் மீண்டும் பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சி அமைத்ததில்லை. அதற்கு உதாரணமாக முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி (1977 மக்களவைத் தேர்தலில் தோல்வி), ராஜீவ் காந்தி (1989ஆம் ஆண்டில் தோல்வி) ஆகியோரைக் குறிப்பிடலாம்.
ஆனால், தற்போதைய பிரமதர் மோடி மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் வென்று இந்திய அரசியல் வரலாற்றில் புதிய சாதனையையும் படைத்தாலும் ஆச்சரியப்படுவதில்லை.
வேலையின்மை, விவசாயிகள் தற்கொலை, முறை சாரா தொழில் துறையில் பிரச்னைகள் என இந்த அரசுக்கு எதிராக சில பிரச்னைகள் எழுந்தாலும், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மத்தியில் பாஜகவுக்கு வரவேற்பு இருப்பதாகவே தெரிகிறது.
தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர் மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வரவேற்பு அதிகரித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மோடி, பாஜகவைக் காட்டிலும், பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று முதல்முறையாக நாட்டின் மிகப் பெரிய தேர்தலை சந்திக்கவுள்ள ராகுல் காந்திக்கும், காங்கிரஸுக்கும் இந்தத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தது காங்கிரஸ். கர்நாடகத்திலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி பொறுப்புக்கு வந்தது.
தற்போதைய 16-ஆவது மக்களவையில் பாஜகவுக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்த உத்தரப் பிரதேசத்தை மீட்டெடுக்க சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் காங்கிரஸுக்கு இடம் கிடைக்கவில்லை. மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறது. காங்கிரஸ் கட்சியோ இழந்த பெருமையை அந்த மாநிலத்தில் மீட்கப் போராடுகிறது. மேற்கு வங்கத்திலும் பரம வைரிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகளைத் தனித்தே எதிர்க்க மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் களமிறங்கியிருக்கிறது.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒருவர் கூட பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படாததையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய அரசியலில் மிக முக்கியத் தலைவர்களான சோனியா காந்தி (72 வயது), முலாயம் சிங் யாதவ் (80), சரத் பவார் (78), ஹெச்.டி.தேவெ கௌடா (86) ஆகியோருக்கு வயது அதிகமாகி வருகிறது. பாஜகவிலும் பல தலைவர்களுக்கு வயது கூடி வருகிறது. அதேநேரத்தில், 2019 மக்களவைத் தேர்தலில் 18 வயது முதல் 19 வயதுக்குள்பட்ட இளைஞர்கள் 1.5 கோடி பேர் தங்கள் அடிப்படை ஜனநாயகக் கடமையை முதல் முறையாக நிறைவேற்ற உள்ளனர். கோடிக்கணக்கான பெண்களும் வாக்களிக்க உள்ளனர்.
நாட்டின் தற்போதைய நிலை, ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், சமூக வலைதலங்களில் பரவும் செய்திகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு புதிய தலைமுறை வாக்காளர்களின் வாக்குகள் அமையும். எனவே, இந்தத் தேர்தலில் இளம் சமுதாயத்தினரின் வாக்குகள் ஒவ்வொன்றும் முக்கியப் பங்காற்றும் என்று நம்பலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.