மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படாத சூழலில், 1948-ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் இருந்து அப்போதைய மக்களவைக்கு, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களாக 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட திருச்செங்கோட்டைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் டி.எம். காளியண்ணனும் ஒருவர். தற்போது அவருக்கு 99 வயதாகிறது.
இவர் 1952-ஆம் ஆண்டு முதல் முறையாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்துக்குள்பட்ட ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் 1957, 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
1967-இல் மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்ட காளியண்ணன், திமுக பொதுச் செயலர் க. அன்பழகனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
பின்னர், 1967 முதல் 1977-ஆம் வரை சட்டமேலவை உறுப்பினராக (எம்எல்சி) காளியண்ணன் பதவி வகித்தார். 1977, 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் டி.எம். காளியண்ணன் போட்டியிட்டார். இருப்பினும், இரு தேர்தல்களிலும், அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. பொன்னையன் வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர், பொருளாளர் போன்ற பதவிகளை வகித்த காளியண்ணன், 2000-ஆம் ஆண்டுக்கு பின் மெல்ல மெல்ல அரசியலை விட்டு விலகினார். இருப்பினும், ஒவ்வொரு தேர்தலின்போதும், பல்வேறு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவரிடம் வாழ்த்து பெற்றுச் செல்கின்றனர்.
அந்தக் காலத்தில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்ற இரு கட்சிகளே பிரதானமாக இருந்தன. இன்று ஏராளமான கட்சிகள் உள்ளன. இப்போது ஆரோக்கியமான அரசியல் இல்லை என்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவரான டி.எம்.காளியண்ணன்.
தன்னுடைய தேர்தல் அனுபவம் பற்றி அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டது.
முதல் தேர்தலைச் சந்தித்த அனுபவம் பற்றி?
1952-இல் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டேன். காமராஜர் எனக்கு அந்த வாய்ப்பை வழங்கினார். அப்போது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இரு கட்சிகள் மட்டுமே பிரதானம். சுயேச்சைகள் எண்ணிக்கை அதிகம் இருந்தது. அரசியல் கட்சிகளின் கொள்கைகளை மட்டுமே மக்கள் பார்த்தனர். அப்போதெல்லாம், வீடு, வீடாக, ஊர், ஊராகப் பிரசாரத்துக்குச் செல்ல மாட்டோம்.
முக்கியத் தலைவர்கள் வரும்போது பொதுக்கூட்டம் நடக்கும். அது தவிர, துண்டு பிரசுரம், நோட்டீஸ் போன்றவை இருக்கத்தான் செய்தது. பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கலாசாரம் அப்போது இல்லை.
இதுதான் அப்போதைய தேர்தல் நிலை. இப்போது எல்லாமே மாறிவிட்டது. எனது முதல் வாக்கை பொருத்தமட்டில், திருச்செங்கோடு தொகுதியில், குமாரமங்கலத்தில் காங்கிரஸ் வேட்பாளருக்காகப் பதிவு செய்தேன்.
தற்போதைய அரசியல் சூழல் எப்படி?
ஒவ்வொரு நாளும் ஒரு மாற்றம் நடக்கிறது. ஜாதி, பணம் போன்றவை அரசியலில் புகுந்து விட்டன. கொள்கைகளை பார்த்து வாக்களித்த காலம் மாறி, கொடுப்பது யார்? என்பதை பொருத்து வாக்களிக்கும் காலமாக மாறிவிட்டது. இதனால் நல்லவர்கள் வெற்றி பெறுவது கடினமாக உள்ளது.
தேர்தல் செலவுக்கு என்ன செய்தீர்கள்?
கட்சி சார்பில் போட்டியிடும்போது, தேர்தல் செலவுக்கு பெரிதாக எதிர்பார்க்க முடியாது. நம்முடைய கையிருப்பைக் கொண்டுதான் செலவழிக்க வேண்டும். தேர்தல் பணிக்காக வேட்பாளருடன் வரும் தொண்டர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டுமே செலவாகும்.
நடிகர்கள் அரசியலில் சாதிப்பார்களா?
சற்று கடினம்தான். சமீபத்தில், ஒரு நடிகரின் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்னிடம் வந்து வாழ்த்துப் பெற்று சென்றார். நடிகர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால், அவர்களோடு இணைந்து பணியாற்றுபவர்கள், தனக்கான தேவையை நிறைவேற்றிக் கொள்ளத் தவறுகள் செய்வதற்கு முயற்சிப்பர். அதைத் தடுக்க முடியாது. இவ்வாறான சூழ்நிலையில் உங்களுடைய தலைமைக்குத் தான் கெட்டப்பெயர் உருவாகும்.
தேர்தல் எப்படி நடைபெற வேண்டும்?
அரசியல் கட்சியின் கொள்கைக்காகவும், வாக்குறுதிகளுக்காகவும், வேட்பாளர் பற்றிய நல்லெண்ணத்திலும் மக்கள் வாக்குச்சாவடிகளை தேடிச் சென்று வாக்களிக்கும் நிலை வரவேண்டும். அந்த நிலை மீண்டும் வருவது சந்தேகம்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.