மக்களைவைத் தேர்தல் 2019

திருப்புமுனையைத் தந்த இடைத்தேர்தல்கள்!

தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் ஆதிக்கம் தவிர்க்க முடியாதது. பொதுவாக  இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதி. ஆனால், திமுக-வை ஆட்சியில் அமர்த்தி,

ஆர். முருகன்



தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் ஆதிக்கம் தவிர்க்க முடியாதது. பொதுவாக  இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதி. ஆனால், திமுக-வை ஆட்சியில் அமர்த்தி, காங்கிரஸை வீழ்ச்சியடைச் செய்ய இரண்டு இடைத்தேர்தல்கள் முக்கியப் பங்கு வகித்தன.
1962-இல் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதிக்கும், 1963-இல் திருவண்ணாமலை சட்டப் பேரவைக்கும் நடைபெற்ற இடைத்தேர்தல்கள்தான் தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய திருப்புமுனை தேர்தலாக அமைந்தன.
திருச்செங்கோடு: அப்போதைய திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியானது  ஈரோடு, மொடக்குறிச்சி, திருச்செங்கோடு, கபிலர்மலை, சங்ககிரி (தனி), எடப்பாடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது.
 1957, 1962 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப. சுப்பராயன் வெற்றி பெற்றார். 1962- இல் வெற்றி பெற்ற சுப்பராயன், மகராஷ்டிர மாநில ஆளுநரானார். சில மாதங்களிலேயே உடல்நலக்குறைவு ஏற்பட்டு, காலமானார். அதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் செங்கோடக் கவுண்டரும், திமுக சார்பில் செ.கந்தப்பனும் போட்டியிட்டனர். காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரஜா சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட், ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம், ஜனசங்கம், தமிழ்த் தேசியக் கட்சி, சோசலிஸ்ட் கட்சி ஆகியவை ஆதரவாக  களத்தில் இருந்தன. பணபலம், படைபலம், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தீவிரப் பிரசாரம் ஆகியவை காங்கிரசுக்கு வலுசேர்த்தன. திமுக-வை ராஜாஜியின் சுதந்திரா கட்சி மட்டுமே ஆதரித்தது. இருப்பினும், காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி திமுக-வைச் சேர்ந்த செ. கந்தப்பன் வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியைத் தோற்கடித்த வரலாறு அரசியலில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை பேரவைத் தொகுதியில் 1957-இல் சுயேச்சையாக வெற்றி பெற்றவர் ப.உ. சண்முகம். பின்னர், திமுக-வில் இணைந்து 1963 இடைத் தேர்தல் மற்றும் 1971, 1977 பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து, திருவண்ணாமலை தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர். இவரது இடைத்தேர்தல் வெற்றிதான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டது என்பதை மறுப்பதற்கில்லை.
1962 -இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில்  பி. பழனிபிள்ளை போட்டியிட்டார். திமுக சார்பில் ப.உ. சண்முகம் போட்டியிட்டார். இதில், காங்கிரஸ் வேட்பாளர் 35,148 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் 33,399 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இந்நிலையில், உடல் நலக்குறைவால் 1963-இல் பழனிபிள்ளை உயிரிழந்ததால் திருவண்ணாமலைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில், கடந்தமுறை போட்டியிட்டு தோல்வியடைந்த ப.உ.சண்முகத்துக்கே திமுக-வில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் பத்ராசலம் (அண்ணாமலை) நிறுத்தப்பட்டார். 
பொதுத் தேர்தலிலேயே திமுக-வின் வளர்ச்சியைக் கண்டறிந்த முதல்வர் காமராஜர், திருவண்ணாமலை இடைத்தேர்தலை தனக்கான சவாலாகவே கருதினார். எனவே, அமைச்சரவை சகாக்களுடன் தொகுதியிலேயே முகாமிட்டு, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார். தேர்தல் வாக்குறுதியாக மதுரை மாநகருக்கு அமல்படுத்தப்பட்ட குடிநீர்த் திட்டத்தைவிட, அதிக செலவில் ரூ.48 லட்சம் மதிப்பில் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை திருவண்ணாமலைக்கு கொண்டுவருவதாக அறிவித்தார். அனைவருக்கும் இலவசக் கல்வி, சத்துணவு, சீருடை, அணைகள் உள்ளிட்ட காங்கிரஸின் சாதனைகளும் இத்தேர்தலில் எடுபடாமல் போயின.
வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது, காகிதப் பூ மணக்காது; காங்கிரசின் சமதர்மம் இனிக்காது. இந்தியை மத்திய அரசு திணிக்கிறது; மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற முழக்கங்களே திமுக-வுக்கு வெற்றியைத் தேடித் தந்தன.
இதன்படியே, திருவண்ணாமலை இடைத்தேர்தலில் பொதுத் தேர்தலைவிட அதிக வாக்குகள் பெற்று திமுக வெற்றி பெற்றது. திமுக வேட்பாளர் ப. உ. சண்முகம், 38,666 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பத்ரசாலம், 37,191 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
இந்த இடைத்தேர்தல்களின் வெற்றியை, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் பொதுக் கூட்டங்களை நடத்தி திமுக தலைவர்கள் மேடையில் முழங்கினர். இதன் தொடர்ச்சியாக 1967-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுக வெற்றிவாகை சூடி ஆட்சி அமைத்தது. இதுவை அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தவையாகும்.
இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்ட வரலாறு இந்த இரு தேர்தலில்தான் முதன்முறையாகப் பதிவாகின. இப்போது, நடைபெறும் இடைத்தேர்தல்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே அமைந்துவிடுகின்றன என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT