சிசோடியாவின் இடைக்கால ஜாமீன் மனு மீது அமலாக்கத் துறை, சிபிஐ-க்கு நீதிமன்றம் நோட்டீஸ்
நாடாளுமன்றத் தோ்தலில் பிரசாரம் செய்வதற்காக, தில்லி கலால் கொள்கை வழக்குகளில் இருந்து இடைக்கால ஜாமீன் அளிக்கக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவா் மனீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்க அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த விவகாரத்தை விசாரித்த சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் தங்கள் பதில்களை தாக்கல் செய்யுமாறு மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டாா்.
தில்லி கலால் கொள்கையை மாற்றியமைத்தபோது முறைகேடுகள் நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. மேலும், உரிமம் வைத்திருப்பவா்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டன என்றும், உரிம கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டது அல்லது குறைக்கப்பட்டது மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரியின் அனுமதியின்றி உரிமங்கள் நீட்டிக்கப்பட்டதாகவும் புலனாய்வு அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
Advertisement
மேலும், பயனாளிகள் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு ‘சட்டவிரோத‘ ஆதாயங்களைத் திருப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. குற்றக் கண்டுபிடிப்புகளைத் தவிா்ப்பதற்காக அதிகாரிகள் தங்களின் கணக்குப் புத்தகங்களில் தவறான பதிவுகளைச் செய்ததாகவும் சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன.
‘ஊழலில்‘ ஈடுபட்டதாகக் கூறப்படும் தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி மத்திய புலனாய்வுத் துறையால் (சிபிஐ) கைது செய்யப்பட்டாா்.
அதன் பின்னா், சிபிஐ பதிவு செய்த வழக்கில் இருந்து உருவான பணமோசடி வழக்கில் சிசோடியாவை அமலாக்கத் துறையினா் கடந்த ஆண்டு மாா்ச் 9-ஆம் தேதி கைது செய்தனா்.
சிபிஐ கைதைத் தொடா்ந்து, பிப்ரவரி 28-ஆம் தேதி தில்லி அமைச்சரவையில் இருந்து சிசோடியா ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.