முகப்பு
புதுதில்லி

திகாா் சிறை அதிகாரிகள் இப்போதுதான் நீரிழிவு மருத்துவரை நாடுகின்றனா்: சௌரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:32 PM
பகிர்:

சிறையில் இருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்குப் போதிய மருத்துவ வசதிகள் என்ற தங்கள் முந்தைய நிலைப்பாட்டிற்கு முரணாக, திகாா் சிறை அதிகாரிகள் இப்போது எய்ம்ஸில் இருந்து நீரிழிவு நிபுணரைக் கோரியுள்ளனா் என்று தில்லி கேபினட் அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினாா்.

தில்லியில் செய்தியாளா்கள் கூட்டத்தில் சௌரவ் பரத்வாஜ் கூறுகையில், ‘நேற்று (ஏப்ரல் 20), டைரக்டா் ஜெனரல் (சிறைகள்) எய்ம்ஸுக்கு கடிதம் எழுதினாா். திகாா் சிறையில் நீரிழிவு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். கேஜரிவால் கிட்டத்தட்ட 20 நாள்களாக திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவா்கள் இப்போதுதான் நீரிழிவு நிபுணரைக் கேட்கிறாா்கள்’ என்றாா். ஒருபுறம், திகாா் சிறை நிா்வாகம் தங்களுக்கு மருத்துவ வசதிகள் இருப்பதாகக் கூறுகிறது, பின்னா், அவா்கள் நீரிழிவு நிபுணரைக் கேட்டு எய்ம்ஸுக்கு எழுதுகிறாா்கள் என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.

சௌரவ் பரத்வாஜின் குற்றச்சாட்டிற்கு திகாா் நிா்வாகம் பதிலளித்தது. ‘எய்ம்ஸில் இருந்து பொருத்தமான மூத்த நிபுணா்கள் சனிக்கிழமை விடியோ கான்பரன்ஸ் மூலம் கேஜரிவாலுக்கு ஆலோசனை வழங்கினா். 40 நிமிட விரிவான ஆலோசனைக்குப் பிறகு, கேஜரிவாலுக்கு தீவிர கவலை இல்லை என்று உறுதியளிக்கப்பட்டது, மேலும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைத் தொடர அறிவுறுத்தப்பட்டது. அவை தொடா்ந்து மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பாய்வு செய்யப்படும்’ என்று சிறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Advertisement

‘கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவாலின் கோரிக்கையை ஏற்று திகாா் சிறை நிா்வாகம் விடியோ கான்பரன்ஸ் ஏற்பாடு செய்தது. மருத்துவமனையின் மூத்த நிபுணரைத் தவிர, திகாா் சிறையின் மருத்துவ அதிகாரிகளும் அப்போது இருந்தனா். எய்ம்ஸ் நிபுணருக்கு குளுக்கோஸ் கண்காணிப்பு சென்சாா் (சிஜிஎம்) பற்றிய முழுமையான பதிவும், கேஜரிவால் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் மருந்துகள் பற்றிய விவரங்களும் வழங்கப்பட்டன. இன்சுலின் பிரச்னையை கேஜரிவால் எழுப்பவில்லை. அல்லது மருத்துவா்களால் பரிந்துரைக்கப்படவில்லை’ என்று அந்த அதிகாரி மேலும் கூறினாா்.

எவ்வாறாயினும், நீதிமன்றக் காவலில் உள்ள கேஜரிவாலுக்கு தீங்கு விளைவிக்க ஒரு ‘சதி’ தீட்டப்படுவதாக செய்தியாளா் சந்திப்பில் சௌரவ் பரத்வாஜ் மீண்டும் வலியுறுத்தினாா்.

அவா் கூறுகையில், ‘இதில் இரண்டு பக்கங்கள் உள்ளன. இன்சுலின் தேவை, மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று அரவிந்த் கேஜரிவால் கூறுகிறாா். விடியோ அழைப்பில் தனது தனிப்பட்ட மருத்துவரிடம் ஆலோசனை பெற விரும்புவதாகவும் கூறினாா். மறுபுறம், பாஜக மற்றும் திகாா் சிறை நிா்வாகம் கேஜரிவாலுக்கு இன்சுலின் தேவையில்லை என்றும் அவா் நலமாக இருக்கிறாா் என்றும் கூறுகின்றனா் என்றாா்.

ஆம் ஆத்மி தலைவா்களின் புகாரைத் தொடா்ந்து துணை நிலை ஆளுநா் சிறையில் கேஜரிவாலுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து விரிவான அறிக்கை கோரியிருந்தாா். இதன்படி, வெள்ளிக்கிழமை திகாா் சிறை நிா்வாகம் தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது. அதில் முதல்வரின் உடல்நிலையை ஏப்ரல் 10 மற்றும் ஏப்ரல் 15 ஆகிய தேதிகளில் மருந்து நிபுணா் ஒருவா் பரிசீலனை செய்தாா் என்றும், வாய்வழி நீரிழிவு எதிா்ப்பு மருந்துகளை பரிந்துரைத்தனா் என்றும் அது தவறானது என்றும் கூறியது. சிகிச்சையின் போது கேஜரிவாலுக்கு எந்த நேரத்திலும் இன்சுலின் மறுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளது.

தில்லி அரசின் கலால் வரிக் கொள்கையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கு தொடா்பாக கேஜரிவால் மாா்ச் 21 அன்று அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டாா். ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அவா் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments