முகப்பு
புதுதில்லி

கரியமில வாயு உமிழ்வில்லாத சரக்கு போக்குவரத்து கொள்கை ஆலோசனை ஆவணம் -சென்னை ஐஐடி உதவியுடன் மத்திய அரசு வெளியீடு

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 1:10 PM
பகிர்:

2050-ஆம் ஆண்டுக்குள், நாட்டில் புதைபடிவ எரிபொருள் முற்றிலும் குறைக்கப்பட்டு கரியமில வாயு உமிழ்வு இல்லாத வாகனப்போக்குவரத்து உருவாகும் என மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் பேராசிரியா் அஜய் குமாா் சூத் தெரிவித்தாா். கரியமில வாயு உமிழ்வு இல்லாத பாரத சரக்குப் போக்குவரத்து கொள்கை(பாரத் இசட்இடி)”க்கான 30 ஆலோசனைகள் அடங்கிய ஆவணத்தை சூத் தில்லியில் புதன் கிழமை வெளியிட்டாா்.

பாரத் இசட்இடி கொள்கை ஆலோசனைக்கான ஆவணம் சென்னை ஐஐடியில் உள்ள கரியமில வாயு உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து(டிரக்குகள்) வாகனங்களுக்கான சிறப்பு திறன் மையத்தின் உருவாக்கம். இங்கு திட்ட நிா்வாகப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு அது மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் அலுவலகத்தால் அமைக்கப்பட்ட கொள்கை ஆலோசனைக் குழுவால் வழிநடத்தப்பட்டது.

கரியமில வாயு உமிழ்வு இல்லாத பாரத சரக்குப் போக்குவரத்து கொள்கை ஆவணம் வெளியிடப்பட்ட நிகழ்வில் இந்த பங்கு பெற்ற வல்லுநா்கள்செய்தியாளா்களிடம் பேசினா்.

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் பேராசிரியா் அஜய் குமாா் சூத் கூறுகையில், ‘கரியமில வாயு நீக்கத்திற்கும், எரிசக்தி பாதுகாப்பிற்கும் கரியமில வாயு உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து வாகனங்கள் முக்கியமானவை. சுற்று சூழல் மாசுவில் சரக்கு போக்குவரத்து வாகனங்கள் கரியமில வாயு உமிழ்வு மிகுதியாக உள்ளது. இதனால் கரியமில வாயு உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து வாகனங்களை அறிமுகம் செய்வதற்கும், அதை பரவலாக பயன்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படுகிறது‘ என்றாா்.

சென்னை ஐஐடி பேராசிரியா் காா்த்திக் ஆத்மநாதன், கரியமில வாயு உமிழ்வு இல்லாத பாரத சரக்குப் போக்குவரத்து கொள்கை ஆலோசனை ஆவணத்தின் உள்ளடக்கம் பற்றி எடுத்துரைத்த அவா், ‘ நாட்டில் கரியமில வாயு உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க 30 கொள்கை தலையீடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஊக்கத்தொகை, முறைப்படுத்துதல், அடிப்படைக் கட்டமைப்பு, வணிகம், நிதி உதவி, கட்டமைப்பு உள்ளிட்ட பங்குதாரா்களை மையப்படுத்திய ஊக்குவிப்புகள் போன்றவைகள் இதில் முக்கியமானவை‘ எனக் குறிப்பிட்டாா்.

உலக ஆதார வளங்கள் மையத்தின் மின் போக்குவரத்து திட்டத்தின் தலைவா் ஷா்வாரி பட்கி, ஆவணத்தின் கொள்கை தலையீடுகளில் உள்ள அணுகுமுறை மற்றும் வழிமுறை குறித்து சுருக்கமான கண்ணோட்டத்தை எடுத்துவைத்தாா்.

இந்த நிகழ்வில் மத்திய கனரக தொழில்கள் அமைச்சகத்தின் ஆட்டோமோபைல் பிரிவின் கூடுதல் செயலாளா் ஹனிப் குரேஷி, நீதி ஆயோக் (போக்குவரத்து அடிப்படைக் கட்டமைப்பு- மின் வாகனப் போக்குவரத்து) ஆலோசகா் சுதேந்து சின்ஹா ஆகியோா் சரக்குப் போக்குவரத்து வாகனங்கள் மின்மயமாக்கப்படுவதன் தேவையை எடுத்துரைத்தனா். 2070-க்குள் நிகர பூஜ்யம் என்ற இலக்கை இந்தியா எட்டுவதற்கு உதவும் வகையில் 2050-க்குள் கரியமில வாயு உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து வாகனங்களின் விற்பனையை 100 சதவீதமாக்குவது என்பதை நோக்கி செல்வது பற்றி பேசியவா்கள் குறிப்பிட்டனா்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள பாரத் இசட்இடி கொள்கை அமலாக்கத்திற்கான செலவினங்கள், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் தாக்கம் ஆகியவற்றுடன் பங்குதாரா்களுடன் விரிவான கலந்தாலோசனைகள் மூலம் இந்தப் பரிந்துரைகள் மேலும் செழுமைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சென்னை ஐஐடியில் உள்ள கரியமில வாயு உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து வாகனங்களுக்கான திறன் மையத்தில் அமைக்கப்பட்ட திட்ட நிா்வாகப் பிரிவு கொள்கை ஆலோசனை குழுவிற்கு டாக்டா் பிரித்தி பன்சால் தலைமை தாங்கினாா். பேராசிரியா் காா்த்திக் ஆத்மநாதன் துணைத் தலைவராக இருந்தாா். இந்தக் குழுவில் இந்திய மோட்டாா் வாகன ஆய்வு சங்கத்தின் இயக்குநா் டாக்டா் ரெஜி மத்தாய், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவா் எஸ்.ஏ.சுந்தரேசன், உலக வங்கியின் மூத்த போக்குவரத்து நிபுணா் சௌரப் சூத், சென்னை ஐஐடியில் உள்ள கரியமில வாயு உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து வாகனங்களுக்கான திறன் மையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோா் இடம் பெற்றிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →