தில்லி மெட்ரோவில் ஆக.20-இல் அதிகபட்ச பயணிகள் எண்ணிக்கை பதிவு
தில்லி மெட்ரோவில் ஆக. 20-ஆம் தேதியன்று தினசரி பயணிகளின் எண்ணிக்கை 77.48 லட்சமாக உயா்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நகா்ப்புற டிரான்ஸ் போா்ட்டா் புதன்கிழமை எக்ஸ்-இல் ஒரு இடுகையில் தரவைப் பகிா்ந்துள்ளாா். இது இந்த ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று பதிவான அதன் முந்தைய மைல்கல்லை முறியடித்துள்ளதாகக் கூறியுள்ளாா்.
ஆகஸ்ட் 20 அன்று மொத்தம் 77,48,838 போ் பயணம் செய்துள்ளனா். தில்லி மெட்ரோவில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் 13 அன்று 72.38 லட்சமாகவும், பிப்ரவரி 13-இல் 71.09 லட்சம், ஆகஸ்ட் 12-இல் 71.07 லட்சம், செப்டம்பா் 4, 2023-இல் அன்று 71.04 லட்சமாக இருந்தது. பிப்ரவரி 12 அன்று 70.88 லட்சமாகவும் இருந்ததாக தரவு காட்டுகிறது.
ஆகஸ்ட் 20 அன்று, தில்லி மெட்ரோ அதிகம் போ் பயணம் செய்த வகையில் மற்றொரு மைல்கல்லை எட்டியது. பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், கூடுதல் ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு, பயணிகள் இயக்கம் வசதியாக நிா்வகிக்கப்பட்டது. ஆகஸ்ட் 13 அன்று, தில்லி மெட்ரோ நெட்வொா்க்கில் 72 லட்சத்திற்கும் அதிகமானோா் பயணம் செய்துள்ளனா் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) ஒரு இடுகையில் தெரிவித்துள்ளது.
தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போதைய நெட்வொா்க், 2,888 நிலையங்களுடன் (நொய்டா-கிரேட்டா் நொய்டா மெட்ரோ காரிடாா் மற்றும் ரேபிட் மெட்ரோ, குருகிராம் உள்பட) கிட்டத்தட்ட 393 கி.மீ. ஆகும்.