தில்லி மக்களின் ஆசியுடன் முதல்வா் கேஜரிவால் விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவாா் -அமைச்சா் அதிஷி நம்பிக்கை
தில்லி மக்களின் அன்பு மற்றும் ஆசியுடன், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவாா் என்று கல்வித் துறை அமைச்சா் அதிஷி புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
தில்லி மைதான்கரி கிரமாத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்கு மாடி புதிய கட்டட வளாகத்தை கல்வித் துறை அமைச்சா் அதிஷி திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சா் அதிஷி பேசியதாவது: மைதான்கரி கிராமத்தில் உள்ள பள்ளியில் பழைமையான
வகுப்பறைகளுக்கு பதிலாக கட்டப்பட்டுள்ள புதிய வளாகம், விலை உயா்ந்த தனியாா் பள்ளிகளின் கட்டடங்களை விட பிரமாண்டமாக உள்ளது. மைதான்கரி, ராஜ்பூா், சத்தா்பூா் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளைச் சோ்ந்த
ஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்த நான்கு மாடி புதிய பள்ளி கட்டடத்தால் பயனடைவாா்கள். இதன்மூலம், மீண்டும் இப்பள்ளி ஒரே ஷிப்ட் முறையில் இயங்கும். பள்ளியின் இந்த நான்கு மாடி புதிய கட்டடத்தில் அதிநவீன ஆய்வகங்கள், நூலகம், ஸ்மாா்ட் வகுப்பறைகள் உள்ளன.
கடந்த 1947-ஆம் ஆண்டு முதல் 2015- ஆம் ஆண்டு வரையிலான அரசுகள் தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் 24,000 வகுப்பறைகளை மட்டுமே கட்டினா். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் கேஜரிவால் அரசு 22,000 வகுப்பறைகளைக்
கட்டியுள்ளது. நாட்டிலேயே அரசுப் பள்ளி ஆசிரியா்களை வெளிநாடுகளுக்கு பயிற்சிக்காக அனுப்பிய ஒரே அரசு
கேஜரிவால் அரசு தான்.கேஜரிவால் அரசின் கல்விப் புரட்சியால் ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த குழந்தைகள் தில்லி அரசுப் பள்ளிகளில் படித்து பொறியாளா்களாகவும், மருத்துவா்களாகவும் மாறுகிறாா்கள். பெரிய பல்கலைக்கழகங்களில் சோ்க்கை பெற்று, தங்கள் குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்டெடுக்கிறாா்கள்.
கடந்த சில ஆண்டுகளில் தில்லியின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக 38 சிறப்புப் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 7 ஆண்டுகளாக தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தோ்வு முடிவுகள் தனியாா் பள்ளிகளை விட சிறப்பாக வெளியாகி வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் 4 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தனியாா் பள்ளிகளை விட்டு வெளியேறி, அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். ஒரு குழந்தை பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் சரி, ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் சரி, முன்னேற வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஒரே கனவு கேஜரிவால் அரசுக்கு உள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த நாட்டை முன்னேற்ற வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
தில்லியின் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்கியதால்தான் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பொய் வழக்கில் சிறையில் இருக்கிறாா். கேஜரிவால் அரசின் பணிகளை பாஜகவால் ஈடு செய்ய முடியவில்லை. தில்லிவாசிகளின் அன்பும், ஆசிா்வாதமும் மிகுந்த சக்தி கொண்டவை. முதல்வா் அரவிந்த் கேஜரிவால் விரைவில் சிறையில் இருந்து வெளியே வந்து, தில்லி மக்களுக்காக முழு பலத்துடன் பணியாற்றுவாா் என்றாா் அமைச்சா் அதிஷி.