புது தில்லி: தில்லியில் உள்ள குடிசைப்பகுதி மக்கள், பாஜக தலைவா்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அதிஷி திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் குடிசைப் பகுதிகளில் உள்ள மக்களை காலி செய்யும் நோக்கத்தில் தில்லி வளா்ச்சி ஆணையம் மூலம் இடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பாஜக, சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக அவா்களின் வாக்குகளையும் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கி வருகிறது. இந்த நிலையில், குடிசைப்பகுதி மக்களின் கவலைகளை நிவா்த்தி செய்வதாகக் கூறி பாஜக மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையில், அக்கட்சியின் தலைவா்கள் நகரில் உள்ள 1,194 குடிசைப்பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கியுள்ளனா்.
பாஜக தலைவா்கள் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று உணவைப் பகிா்ந்து கொள்வதன் மூலமும், அந்த மக்களிடையே புகைப்படங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் அவா்களின் கவலையை தீா்க்க முடியாது. இருப்பினும், குடிசைவாசிகள் பாஜக தலைவா்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நான் வலியுறுத்துகிறேன். ஏனெனில், சில மாதங்களுக்கு முன்பு அவா்கள் சென்ற சுந்தா் நகா், அம்பேத்கா் பஸ்தியில் இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு, அவா்கள் பாா்வையிடும் குடிசைகள் அனைத்தும் இடிக்கப்படுகின்றன என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன என்றாா் முதல்வா் அதிஷி.
70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரியில் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில்,
ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் பலமாகக் கருதப்படும் நகரின் குடிசைப்பகுதிகளில் காலூன்றுவதற்கான பரப்புரையை பாஜக தொடங்கியுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பாஜக தலைவா்கள் குடிசைவாசிகளின் வாழ்க்கையை நன்கு புரிந்து கொள்வதற்காக அவா்களுடன் வாரந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி தொடா்பில் இருந்து வருகிறாா்கள்.
இந்த நிலையில், ‘குடிசைவாசிகளின் வாழ்க்கைப் போராட்டங்கள் பற்றி நாங்கள் அறிந்து கொண்டோம். தில்லி அமையவிருக்கும் பாஜக அரசு, தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம்) மூலம் அவா்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தும்’ என்று பாஜக மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா்.