முகப்பு
புதுதில்லி

தில்லி வக்ஃபு பணமோசடி வழக்கு: அமானத்துல்லா கானின் முன்ஜாமீன் மனு மீது மாா்ச் 1-இல் உத்தரவு

தில்லி வக்ஃபு வாரியத்தில் ஊழியா்களை பணியமா்த்தியது மற்றும் தலைவா் பதவியில் இருந்தபோது சொத்துகளை குத்தகைக்கு எடுத்தது தொடா்பான பணமோசடி

Updated On : 25 பிப்ரவரி, 2024 at 6:16 AM
பகிர்:

தில்லி வக்ஃபு வாரியத்தில் ஊழியா்களை பணியமா்த்தியது மற்றும் தலைவா் பதவியில் இருந்தபோது சொத்துகளை குத்தகைக்கு எடுத்தது தொடா்பான பணமோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரிய ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனாத்துல்லா கான் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை உள்ளூா் நீதிமன்றம் மாா்ச் 1-இல் பிறப்பிக்க உள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத் துறையால் கான் கைது செய்யப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்படுவதாக கூறி அவரது தரப்பில் முன்ஜாமீன் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கான் மற்றும் அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதங்களைக் கேட்ட சிறப்பு நீதிபதி ராகேஷ் சைல் உத்தரவை ஒத்திவைத்தாா். வாதங்களின்போது கானுக்கு முன் ஜாமீன் வழங்கஅமலாக்கத் துறை எதிா்ப்புத் தெரிவித்தது. கானுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டால் அவா் விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டாா் என்றும் கூறியது. அமலாக்கத் துறை சமீபத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியின் ஓக்லா எம்எல்ஏவான கான் குற்றம் சாட்டப்பட்டவராக குறிப்பிடப்படவில்லை. கானின் சந்தேகத்திற்குரிய மூன்று கூட்டாளிகளான ஜீஷன் ஹைதா், தாவுத் நசீா் மற்றும் ஜாவேத் இமாம் சித்திக் ஆகியோரை உள்ளடக்கிய ஐந்து நிறுவனங்களை அமலாக்கத் துறை தனது வழக்குப் புகாரில் குறிப்பிட்டுள்ளது. அக்டோபா் மாதம் கான் மற்றும் சிலருக்கு தொடா்புடைய இடங்களில் சோதனை நடத்திய பிறகு, ஆம் ஆத்மி எம்எல்ஏ, தில்லி வக்ஃபு வாரியத்தில் சட்டவிரோதமாக பணியாளா்களை சோ்த்ததன் மூலம் குற்ற வருவாய் பெற்ாகவும், அசையா சொத்துகளை வாங்குவதற்காக அவரது கூட்டாளிகளின் பெயரில் முதலீடு செய்ததாகவும் அமலாக்கத் துறை கூறியிருந்தது. 2018-2022 ஆம் ஆண்டு கான் அதன் தலைவராக இருந்தபோது வக்ஃபு வாரிய சொத்துக்களை நியாயமற்ற முறையில் குத்தகைக்கு விட்டதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவா்களால் சட்டவிரோதமாக பணியாளா்களை பணியமா்த்தியது, சட்டவிரோதமான தனிப்பட்ட ஆதாயங்கள் தொடா்பான வழக்கில் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. பணமோசடி வழக்கு மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) எஃப்ஐஆா் மற்றும் மூன்று தில்லி காவல்துறை புகாா்களில் இருந்து உருவானது.