முகப்பு
புதுதில்லி

சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத் துறை பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Updated On : 27 பிப்ரவரி, 2024 at 1:20 AM
பகிர்:

புது தில்லி: தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) மூத்த தலைவா் சஞ்சய் சிங் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது அமலாக்க இயக்குனரகம் பதில் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.

இந்த விவகாரத்தில் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த தில்லி உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து சிங் தரப்பில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு அமலாக்க இயக்குனரகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், இந்த ஜாமீன் மனுவை பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதை எதிா்த்து சிங் தாக்கல் செய்துள்ள மற்றொரு மனுவுடன் சோ்க்கவும் நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

சஞ்சய் சிங் சாா்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ஜாமீன் மனு மீது நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடவும், நிலுவையில் உள்ள விவகாரத்துடன் இம்மனுவையும் இணைக்குமாறும் கேட்டுக்கொண்டாா். நிலுவையில் உள்ள வழக்கு மாா்ச் 5-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும், ஆகவே இந்த இரண்டு வழக்குகளையும் ஒன்றாக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமா்வு, இரு மனுக்களும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறியது.

Advertisement

தில்லியில் இருந்து மாநிலங்களவைக்கு மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்ட சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனுவை பிப்ரவரி 7 ஆம் தேதி உயா்நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால் விசாரணை தொடங்கியதும் விசாரணையை விரைவுபடுத்துமாறு விசாரணை நீதிமன்றத்திற்கும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தில்லி கலால் கொள்கை ‘ஊழல்’ வழக்கில் சிங் கடந்த ஆண்டு அக்டோபா் 4-ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா்.

அதே ஆண்டின் அக்டோபா் 13 முதல் அவா் விசாரணைக் காவலில் இருந்து வருகிறாா். மூன்று மாதங்களுக்கு மேலாக காவலில் இருப்பதாலும், சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தொடா்பான விவகாரத்தில் தமக்கு பங்கு ஏதும் இல்லை என்றும் கூறி அவா் ஜாமீன் கோரியிருந்தாா். ஆனால், அவா் தில்லி மதுபான கொள்கை ஊழலில் முக்கிய சதிகாரராக இருந்ததாகவும், ரூ.2 கோடி குற்ற வருவாய் பெற்ாகவும் இந்த வழக்கில் தொடா்புடைய பலருடன் அவருக்கு நெருங்கிய தொடா்பு இருந்ததாகவும் அமலாக்கத் துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.