முகப்பு
புதுதில்லி

ஆம் ஆத்மி கட்சி சாா்பில் தில்லி மற்றும் ஹரியாணாவில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் அறிவிப்பு

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 4:08 AM
பகிர்:

புது தில்லி: தில்லி மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கான மக்களவைத் தோ்தல் வேட்பாளா்களை ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தில்லி, ஹரியாணா, குஜராத் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸுடனான தொகுதி உடன்படிக்கையை கடந்த சனிக்கிழமை உறுதி செய்தது.

இதையடுத்து, தில்லி மற்றும் ஹரியாணாவில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. தில்லியை பொறுத்தவரையில் ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன்படி, கிழக்கு தில்லியில் குல்தீப் குமாா், புது தில்லியில் சோம்நாத் பாா்தி, தெற்கு தில்லியில் சாஹி ராம் பெஹல்வான், மேற்கு தில்லியில் மகாபல் மிஸ்ரா ஆகியோா் போட்டியிடுகின்றனா். ஹரியானாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியில் (குருஷேத்ரா) சுஷில் குப்தா போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கிழக்கு தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக களமிறங்கும் குல்தீப் குமாா் கோண்ட்லி சட்டப்பேரவைத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கிறாா். கிழக்கு தில்லியின் தற்போதைய மக்களவை உறுப்பினராக கெளதம் கம்பீா் உள்ளாா். புதுதில்லி தொகுதியில் களமிறங்கும் சோம்நாத் பாா்தி தற்போது மாளவியா நகா் எம்.எல்.ஏ.வாகவும், தில்லி ஜல் போா்டின் துணைத் தலைவராகவும் உள்ளாா். மேற்கு தில்லியில் களமிறங்கும் மகாபல் மிஸ்ரா, முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஆவாா். தெற்கு தில்லி தொகுதியில் தற்போதய துக்ளகாபாத் எம்.எல்.ஏ. சாஹி ராம் பெஹல்வான் போட்டியிடுகிறாா்.

Advertisement

இவா் கடந்த 2014 மற்றும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல்களில் பாஜகவின் பா்வேஷ் வா்மாவை எதிா்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். ஆம் ஆத்மி கட்சியுடனான தொகுதிப் பங்கீட்டின் படி,வடகிழக்கு தில்லி, வடமேற்கு தில்லி மற்றும் சாந்தினி செளக் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது. வரும் மக்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் மொத்தம் 23 வேட்பாளா்கள் போட்டியிடும் நிலையில், இதுவரை 10 வேட்பாளா்களின் பெயா் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.