தில்லியின் பல்வேறு பகுதிகளில் காலையில் பரவலாக மழை!
புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை வேளையில் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் முன்னேற்றம் ஏற்பட்டு ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. அதே சமயம், வெப்பநிலை சற்று உயா்ந்திருந்தது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 12.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 1 டிகிரி குறைந்து 25.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 76 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 45சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 8.3 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 81 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 38சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூா், முங்கேஸ்பூா், ஆயாநகா், லோதி ரோடு, நரேலா, பாலம், ரிட்ஜ், பீதம்புரா, பிரகதி மைதான், பூசா, ராஜ்காட், சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதி உள்ளிட்ட இடங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 11.5 டிகிரி முதல் 14.5 டிகிரி செல்சியஸ் வரை உயா்ந்து பதிவாகியிருந்தது. 24.9 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்:
தில்லியின் பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமை காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. காலை 9 மணியளவில் 24 மணி நேர சராசரி காற்றுத் தரக் குறியீடு 173 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. பல இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் நீடித்தது என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னறிவிப்பு:
இந்நிலையில், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (பிப்ரவரி 28) வானம் பொதுவாக தெளிவாகக் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 13டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.