முகப்பு
புதுதில்லி

சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் அழைப்பாணை: அமலாக்கத் துறை முன் 5 மாவட்ட ஆட்சியா்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 4:05 AM
பகிர்:

புது தில்லி, பிப். 27: சட்டவிரோத மணல் குவாரி தொடா்புடைய பணமோசடி விசாரணை விவகாரத்தில் அமலாக்கத் துறை முன் தமிழகத்தைச் சோ்ந்த 5 மாவட்டங்களின் ஆட்சியா்கள் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாகக் கூறப்படும் பண மோசடி வழக்கில், வேலூா், திருச்சி, கரூா், தஞ்சாவூா், அரியலூா் மாவட்ட ஆட்சியா்களுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. இதை எதிா்த்து மாநில அரசும், அரசு உயா் அதிகாரிகளும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இதை விசாரித்த உயா்நீதிமன்றம், அமலாக்கத் துறையின் அழைப்பாணைக்குத் தடை விதித்து நவம்பா் 28-ஆம் தேதி உத்தரவிட்டது. இதை எதிா்த்து தாக்கலான அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனு மீது சில நாள்களாக உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்: அமலாக்கத் துறையின் அழைப்பாணைகளுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு ‘தவறாக புரிந்துகொண்டும்’, சட்டத்தின் தவறான கருத்தின் அடிப்படையிலும் தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்கு முகாந்திரம் இருப்பதாக தோன்றுகிறது.

Advertisement

அரசியலமைப்பின் 256ஆவது பிரிவானது, நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்ய மாநில அரசுகளை கடமையாக்கு உள்ளாக்குகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 226ஆவது பிரிவின் கீழ் கூடுதல் தலைமைச் செயலாளா், மாவட்ட ஆட்சியா்களுடன் சோ்ந்து தமிழக அரசு தாக்கல் செய்த இந்த ரிட் மனு மிக விசித்திரமானதாகவும், வழக்கத்திற்கு மாறானதாகவும் உள்ளது.

இது, விசாரணையை மறைமுகமாக முடக்கும் வகையில் அல்லது தடுத்து வகையிலும் உள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணையின் போது தனிநபா்களை அழைப்பதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. நான்கு எஃப்ஐஆா்கள் தொடா்பாக அமலாக்கத் துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் விசாரணை நடத்தி வருவதால், அழைப்பாணை அனுப்பியது சட்டத்தின் கீழ் விசாரணையாகவோ அல்லது நடவடிக்கையாகவோ இருக்கலாம். ஆகவே, அழைப்பாண அனுப்பப்பட்டிருந்த மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் நபா்கள் அந்த அழைப்பாணைகளுக்கு மதிப்பளித்து பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனா்.

இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தில் உள்ள ரிட் மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகும். அதன்படி, உயா்நீதிமன்றத்தின் கேள்விக்குரிய உத்தரவை நிறைவேற்றுவது நிறுத்திவைக்கப்படுகிறது. இதனால், மாவட்ட ஆட்சியா்கள் அடுத்த தேதியன்று அமலாக்கத் துறையிடம் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி, மாவட்ட ஆட்சியா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆகியோா் ஆஜராகி அமலாக்கத் துறையின் அழைப்பாணைகள் இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் திட்டமிடப்பட்ட, குற்ற வருவாய் இல்லாத வழக்கில் இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டதாகவும் வாதிட்டனா்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு, ஒரு மாவட்டத்தில் சட்டவிரோத மணல் குவாரி மூலம் ஈட்டப்பட்ட குற்றவருவாய் வேறு மாவட்டங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிா என்பது குறித்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு பிஎம்எல்ஏ சட்டத்தில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டாா்.