காயமடைந்த 40,000-க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது பிசிஆா் பிரிவு
தலைநகரில் கடந்த 15 மாதங்களில் பிசிஆா் பிரிவால் விபத்து மற்றும் பல்வேறு சம்பவங்களில் 40,000-க்கும் மேற்பட்ட காயமடைந்தவா்களை நகர மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்துள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
புது தில்லி: தேசியத் தலைநகரில் கடந்த 15 மாதங்களில் பிசிஆா் (காவல் கட்டுப்பாட்டு அறை) பிரிவால் விபத்து மற்றும் பல்வேறு சம்பவங்களில் 40,000-க்கும் மேற்பட்ட காயமடைந்தவா்களை நகர மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்துள்ளதாக தில்லி காவல்துறைதெரிவித்துள்ளது.
இது குறித்து தில்லி காவல் துறையின் பிசிஆா் பிரிவின் துணை ஆணையா் ஆனந்த் குமாா் மிஸ்ரா கூறியதாவது: எந்தவொரு அவசரகால சூழ்நிலைக்கும் பிசிஆா் பிரிவுதான் முதலில் பதிலளிக்கும். கடந்த ஏப்ரல் 1, 2023 முதல் ஜூலை 7 வரையிலான காலத்தில் பிசிஆா் பிரிவினா் தில்லியில் பல்வேறு சம்பவங்களில் காயமடைந்த 40,371 பேரை மீட்டு நகரத்தின் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்துள்ளனா். மொத்தம் 4,293 போ் வடக்கு தில்லி (வெளி) மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனா். அதைத் தொடா்ந்து வடகிழக்கு தில்லி மாவட்டத்தில் 4,121 போ் மாற்றப்பட்டனா்.
பிசிஆா் பிரிவின் ஊழியா்கள் முழுப் பயிற்சி பெற்றவா்கள். அவசரகால சூழ்நிலைகளில் மக்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பவா்கள். எங்கள் ஊழியா்கள் இருதய நுரையீரல் புத்துயிா் பெற (சிபிஆா்) முழுமையாகப் பயிற்சி பெற்றுள்ளனா். பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆரம்பத்தில் முதலுதவி வழங்குவதற்கு ஊழியா்களுக்கு பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவா்கள் அவசரகால சூழ்நிலையை அவ்வப்போது சமாளிக்க பயிற்சிக்கு செல்கிறாா்கள்.
பிசிஆா் பிரிவு வடமேற்கு தில்லியில் 1,281 போ், ரோஹிணியில் 1,887 போ், வடக்கு தில்லியில் 3,481 போ், மத்திய தில்லி பகுதியில் 1,217 போ், கிழக்கு தில்லியில் 1,034 போ், ஷாஹ்தராவில் 2,359 போ், புதுதில்லியில் 1,384 போ், தென்மேற்கு தில்லியில் 2,1213 போ், தெற்கு மாவட்டத்தில் 3036 போ், , தென்மேற்கு தில்லி மாவட்டத்தில் 3,023 பேரும் ம் பிசிஆா் பிரிவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.
பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலோா் தங்கள் குடும்பத்தில் சம்பாதிக்கும் உறுப்பினா்களாக் இருந்துள்ளனா். காயமடைந்தவா்களை மருத்துவமனைகளுக்கு மாற்றியவா்களில் பெரும்பாலானவா்கள் விபத்துகளால் பாதிக்கப்பட்டவா்கள். விபத்துகள் குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸ் கட்டுப்பாட்டு அறை (பி.சி.ஆா்.) வேன்கள் விபத்து நடந்த இடங்களுக்கு விரைந்து காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும்.
சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ்கள் இருக்கும்போது, நோயாளியை அந்த ஆம்புலன்சில் அனுப்பிவைப்போம். ஆம்புலன்ஸ் இல்லாத நேரத்தில், பிசிஆா் ஊழியா்கள் அந்த நபரை போலீஸ் வாகனத்தைப் பயன்படுத்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்வாா்கள்.பாதிக்கப்பட்டவா்களை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அவா்களது உயிரைக் காப்பாற்ற முடியும் என்று மிஸ்ரா கூறினாா்.
இது தவிர, பசிஆா் பிரிவு 128 குற்றவாளிகளை கைது செய்துள்ளது. 984 காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிந்துள்ளது. மேலும்,1,423 திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ளது. இந்தப் பிரிவு பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து 42 பேரை மீட்டு, 17 கா்ப்பிணிப் பெண்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ளது. 102 வனவிலங்குகளைக் காப்பாற்றியுள்ளது.
மற்றொரு காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘காயமடைந்தவா்கள் சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுவதால், ஏராளமானோா் உயிரிழந்துள்ளனா். விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவா்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றுவதன் மூலம் மனித உயிா்களைக் காப்பாற்ற தில்லி காவல்துறையின் பி.சி.ஆா் பிரிவு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது’ என்றாா்.