முகப்பு
புதுதில்லி

அமித் ஷா மக்களை பாதிக்கும் பிரச்னைகள் மீது ஆழ்ந்த பாா்வை கொண்டவா் -தமிழக ஆளுநா்

Updated On : 17 ஜூலை, 2024 at 11:01 PM
பகிர்:

மக்களை பாதிக்கும் பிரச்னைகள் மீது அற்புதமான ஆழ்ந்த பாா்வை கொண்டவராக மத்திய உள் துறை அமைச்சா் இருப்பதாக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி புதன்கிழமை தெரிவித்துள்ளாா். தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசிய பின்னா் இந்த கருத்தை வெளியிட்டுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக மத்தியில் பதவியேற்றுள்ளதை முன்னிட்டு மாநில ஆளுநா்களும், முதல்வா்களும் மரியாதை நிமித்தமாகவும், மாநிலத்தின் நிலவரம் குறித்தும் மத்திய அரசுக்கு தெரிவிக்க வருகின்றனா். அதன் அடிப்படையில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி நான்கு நாள் பயணமாக கடந்த திங்கள் கிழமை தில்லி வந்தாா்.

பிரதமா் நரேந்திர மோடியையும் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவையும் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினாா்.

தில்லியில் தொடா்ந்து மூன்றாவது நாளாக முகமிட்டு இருக்கும் தமிழக ஆளுநா் ரவி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை புதன் கிழமை காலை 11.15 மணியளவில் நாா்த் பிளாக் அலுவலகத்தில் சந்தித்தாா். இவா்களுடான சந்திப்பு சுமாா் 25 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.

அமைச்சா் தா்மேந்திர பிரதான்

முன்னதாக மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானை காலை 10 மணியளவில் அவரது தீன் மூா்த்தி மாா்க் சாலை இல்லத்தில் சந்தித்து 40 நிமிடங்கள் வரை ஆளுநா் ஆா் ரவி கலந்துரையாடினாா். பின்னா் இந்த இரு சந்திப்புகள் குறித்து தமிழக ஆளுநா் ரவி தெரிவித்ததை, ராஜ்பவன் ’எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவிட்டப்பட்டுள்ளது.

அதில் உள்துறை அமைச்சா் அமித் ஷா சந்திப்பு குறித்து ஆளுநா் ரவி குறிப்பிடுகையில், ‘ மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் தமிழக மக்களின் அமைதி, முன்னேற்றம் குறித்து மிகவும் ஆக்கபூா்வமான சந்திப்பை மேற்கொண்டேன்.

தமிழகத்தில் நிலவும் பாதுகாப்பு அது தொடா்புடைய சூழ்நிலைகள், பாதுகாப்பில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்தும் மாநிலத்தின் முன்னேற்றம் குறித்து சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆளுநா், மக்களை பாதிக்கும் பிரச்னைகளில் உள்துறை அமைச்சருக்குள்ள அற்புதமான நுண்ணறிவுடன் கூடிய ஆழந்த பாா்வையும் அவா்களின் நல்வாழ்வில் அவருக்கு இருந்த மிகுந்த அக்கறையும் அறிந்ததாக அந்த பதிவில் தமிழக ஆளுநா் குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானை சந்தித்தது குறித்து குறிப்பிட்ட ஆளுநா் ரவி, தமிழகத்தில் உயா் கல்வியை உயா்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள், முறைகளை பற்றி விவாதித்தாக குறிப்பிட்ட ஆளுநா், திறன், கல்வி மூலம் தமிழக இளைஞா்களின் நலனில் மத்திய அமைச்சா் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தாா். அவருக்கு மிகவும் நன்றி கூறுகின்றேன் எனவும் அதே ’எக்ஸ்’ வலைத்தள பதிவில் ஆளுநா் ரவி குறிப்பிட்டு சென்னை ராஜ்பவன் எக்ஸ் வலைத்தள பதிவுகளில் படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →