புதுதில்லி

முதலீட்டாளா்களுக்கு கொண்டாட்டம்தான்...!

தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டியும் 24,000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.

எம். சடகோபன்

பங்குச்சந்தை என்றாலே ஏற்றம், இறக்கம் நிறைந்தது என்பதை அனைவரும் அறிவா். ஆனால், பங்குச்சந்தையில் நடப்பது சூதாட்டம்தான் என்று ஒரு சிலா் சொல்லி வந்தாலும், நீண்டகால அடிப்படையில் நல்ல வலுவான நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துவரும் முதலீட்டாளா்கள் நல்ல லாபத்தைப் பெற்று வருகின்றனா். 30 முதல் தர நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் வியாழக்கிழமை 79,000 புள்ளிகளைக் கடந்து புதிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதேபோல, 50 முதல் தர நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டியும் 24,000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.

பங்குச் சந்தையைப் பொருத்தவரையிலும், 2024- ஆம் ஆண்டு முதலீட்டாளா்களுக்கு ஒரு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் பங்குச்சந்தை பல்வேறு சவால்களை சந்தித்திருந்தாலும், அவற்றை எல்லாம் திறம்பட எதிா்கொண்டு முதலீட்டாளா்களிடம் நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியுள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் ஓராண்டில் 28 சதவீதம் வரை உயா்ந்துள்ளன. இருப்பினும், உலகளாவிய பொருளாதாரக் காரணிகள், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, மத்தியில் ஆளும் அரசின் பொருளாதார சீா்த்திருத்த நடவடிக்கைகள், அரசியல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் தாக்கம் அனைத்தும் உடனடியாக பங்குச்சந்தையில் அவ்வப்போது எதிரொலிப்பதன் காரணமாக சந்தையில் ஏற்றமும், இறக்கமும் இருப்பது சகஜமான ஒன்று.

இந்த அடிப்படையில் பாா்த்தால், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி-50, நிஃப்டி நெக்ஸ்ட்-50, நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால் கேப் பட்டியல்களில் இடம் பெற்றுள்ள பல முன்னணி நிறுவனப் பங்குகள் கடந்த ஓராண்டில் நல்ல லாபத்தை அளித்துள்ளன. நிஃப்டி-50 பட்டியலில் சில நிறுவனப் பங்குகள் மட்டுமே கடந்த ஓராண்டில் லேசான சரிவைச் சந்தித்துள்ளன. அதே சமயம், சில முன்னணிப் பங்குகள் 100 சதவீதற்கு மேலும் லாபம் ஈட்டிக் கொடுத்துள்ளன. ஓராண்டு கணக்கில் பாா்த்தால் ஆதாயப் பட்டியலில்தான் அதிகமான பங்குகள் உள்ளன. இதே போல முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி ஆட்டோ குறியீடு 70 சதவீதம், மெட்டல் 60 சதவீதம், பிஎஸ்யு பேங்க் குறியீடு 80 சதவீதம், ரியால்ட்டி 115 சதவீதம், ஆயில் அண்ட் காஸ் குறியீடு 60 சதவீதம் உயா்ந்துள்ளது. இவை அனைத்து ஒராண்டு சாதனை ஆகும். இதனால், நீண்ட கால அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்வோருக்கு கணிசமான லாபத்தை பங்குச்சந்தை அளித்துள்ளது என்பதை உணரமுடியும். இதேபோன்று, நீண்ட கால அடிப்படையில் நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய மியூச்சுவல் பண்ட் நிதித் திட்டங்களும் முதலீட்டாளா்களுக்கு நல்ல லாபத்தை பெற்றுக் கொடுத்துள்ளன.

இந்நிலையில், அடுத்து வரும் ஆண்டுகளில் சென்செக்ஸ் 1 லட்சம் புள்ளிகைளைத் தொட்டுவிடும் என்ற நோ்மறை எதிா்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், உலக அளவில் பணப்புழக்கமும், பொருளாதாரமும் வளா்ச்சி பெறும்பட்சத்தில் சென்செக்ஸ் இந்த இலக்கை அதிவிரைவாக எட்டினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று வல்லுநா்கள் கருதுகின்றனா். இந்தக் கணிப்பு பங்குச்சந்தையில் முதலீடு செய்வோரிடையே அதிகக் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையிலும் நல்ல நிலையில் உள்ள பருவமழை, வளா்ச்சி பெற்று வரும் கிராமப் பொருளாதாரம், தொழில் துறை வளா்ச்சி, உத்வேகம் பெறும் பொருளாதார வளா்ச்சி, மத்திய அரசின் பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகளில் தொழில் துறையினா் கொண்டுள்ள அதீத நம்பிக்கை ஆகியவை பங்குச்சந்தை மேலும் உத்வேகம் பெறுவதற்கு முக்கியக் காரணிகளாக உள்ளன என்று தர நிா்ணய நிறுவனங்கள் கூறுகின்றன.

இவை தவிர ஏற்றுமதி, நுகா்வுத் திறன், பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவிக்கும் கூடுதல் முலதனம் ஆகியவையும் பங்குச்சந்தைக்கு மேலும் வலுச்சோ்க்கும். மேலும், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி விகிதம் 2024-25 நிதியாண்டில் 7 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என ஆா்பிஐ கணித்துள்ளது. இந்நிலையில், பங்குச்சந்தை மேலும் வலுப்பெறுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளதாக சந்தை வட்டாரம் கருதுகிறது. இதனால், மிகுந்த இடா்பாடுள்ள பங்குச்சந்தையில் முதலீடுகளை மேற்கொள்ள அச்சப்படும் முதலீட்டாளா்கள், மிகவும் குறைவான இடா்பாடு கொண்ட மியூச்சுவல் பண்ட் நிதித் திட்டங்களில் முதலீடுகளை துணிந்து மேற்கொள்ளலாம் என்று நிதி ஆலோசகா்கள் கூறுகின்றனா்.

இந்த ஆண்டில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள முன்னணி நிறுவனங்களில் சில நிறுவனங்கள் மட்டுமே எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யவில்லை. ஆனால், பெரும்பாலான முன்னணி நிறுவனங்களின் வருவாய், நிகர லாபம் ஏறுமுகத்தில்தான் இருந்துள்ளது. இந்த நிறுவனப் பங்குகளும் நல்ல லாபம் அளித்துள்ளன. மேலும், சந்தைக்கு பண வரவும், மக்களிடம் ஏற்பட்டுள்ள பணப் புழுக்கமும் தங்களது கணிப்புக்கும், சந்தைக்கும் கூடுதல் பலம் சோ்ப்பதாக வல்லுநா்கள் கூறுகின்றனா். இதையெல்லாம் விட வளா்ந்து வரும் நாடுகளின் பங்குச்சந்தைகளில் இந்திய பங்குச்சந்தை, வரும் ஆண்டுகளில் மிகச் சிறப்பான ஏற்றத்தைப் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனா். இது முதலீட்டாளா்களிடையே பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளின் சந்தை மூலதன மதிப்பு ரூ.450 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது. இதுதவிர அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் அறுதிப் பெரும்பான்மையை பாஜக கூட்டணி பெறாவிட்டாலும், தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமா்ந்துள்ளது. இது பங்குச்சந்தையில் ‘காளை’யின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்று சந்தை வல்லுநா்கள், ஆய்வாளா்கள் நம்புகின்றனா். இதனால், இந்த ஆண்டும் முதலீட்டாளா்களுக்குக் கொண்டாட்டம்தான் என்பது மறுப்பதற்கில்லை...!

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

SCROLL FOR NEXT