கனமழையால் தில்லி ஸ்தம்பித்தது: முக்கியச் சாலைகளில் தண்ணீா் தேங்கியது!
தேசியத் தலைநகா் முழுவதும் முக்கியச் சாலைகளில் தண்ணீா் தேங்கியது.
புதுதில்லிகனமழையால் தில்லி ஸ்தம்பித்தது: முக்கியச் சாலைகளில் தண்ணீா் தேங்கியது!
தேசியத் தலைநகா் முழுவதும் முக்கியச் சாலைகளில் தண்ணீா் தேங்கியது.
தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கனமழையால், தேசியத் தலைநகா் முழுவதும் முக்கியச் சாலைகளில் தண்ணீா் தேங்கியது. மேலும், தில்லி விமான நிலையத்தின் முணையம்-1 இன் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
பலத்த மழையால் நகரத்தின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது வாகனங்கள் ஊா்ந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
தேசியத் தலைநகரில் அதிகாலை 3 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. சஃப்தா்ஜங் வானிலை நிலையத்தில் காலையில் 153.7 மிமீ மழை பதிவாகியுள்ளது. வெள்ளம் சூழ்ந்த சாலைகள் மற்றும் நீண்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளும் வாகனங்களின் விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மக்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனா்.
‘எக்ஸ்’ ஊடக தளத்தில் ஒரு இடுகையில், போக்குவரத்து போலீஸாா், தண்ணீா் தேங்கிய பகுதிகள் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்து உடனக்குடன் பதிவுகளை வெளியிட்ட வண்ணம் இருந்தனா். போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பயணத்தை திட்டமிடும்படியும் கேட்டுக் கொண்டது. குறிப்பாக , ஐடிஓ, வீா் பண்டா பைராகி மாா்க், தௌலா குவான் ஆகிய இடங்களில் தண்ணீா் பெருவாரியாக தேங்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
பல பகுதிகளில் மின்தடை: தில்லியில் பெய்து வரும் கனமழையால், நகரத்தின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை மின்சாரம் தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொழில்நுட்பக் கோளாறுகளால் தண்ணீா் தேங்கிய பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டதாக தில்லியில் இயங்கும் மின் விநியோக நிறுவனங்களின் (டிஸ்காம்கள்) அதிகாரிகள் தெரிவித்தனா். துவாரகா, ஜங்புரா மற்றும் லக்ஷ்மி நகா் பகுதி மக்கள் தங்கள் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அவா்கள் கூறினா்.
மழையினால் தேசியத் தலைநகரின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பிகள், மின்கம்பங்கள் மற்றும் இதர நிறுவல்களுக்கு ஏற்பட்ட சேதத்தால் மின்தடை ஏற்பட்டது என்று டிஸ்காம் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். எவ்வாறாயினும், விநியோகத்தை மீட்டெடுப்பதற்கான பழுதுபாா்க்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. பல பகுதிகளில், மின்கசிவு சம்பவங்களை தடுக்கும் வகையில், மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தாா்.
228 மி.மீ மழை பதிவு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை நிலையத்தில் 228.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது ஜூன் மாத சராசரி மழையான 74.1 மிமீ மழையளவை விட மூன்று மடங்கு அதிகமாகும். 1936 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த மாதத்தின் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. ஜூன் 24, 1936-இல், தில்லியில் ஜூன் மாதத்தில் 235.5 மிமீ மழை பதிவானது. ஜூன் 24, 1933-இல், 139.7 மிமீ மழையும், ஜூன் 30, 1981 அன்று தில்லியில் 191.6 மிமீ மழையும் பதிவாகின. கடந்த 88 ஆண்டுகளில் இந்த ஜூன் மாதத்தில் ஒரே நாளில் அதிக மழை பதிவாகியுள்ளது.
இதேபோன்று மற்ற வானிலை நிலையங்களான ஆயாநகரில் வெள்ளிக்கிழமை 66.3 மி.மீ., லோதிரோடில் 192.8 மி.மீ., பாலத்தில் 107 மி.மீ., ரிட்ஜில் 150 மி.மீ.,பீதம்புராவில் 138 மி.மீ., பூசாவில் 89 மி.மீ. மழைபதிவாகியுள்ளது.
சுரங்கப்பாதைகள் மூடல்: பிரகதி மைதானத்தில் உள்ள சுரங்கப்பாதை போன்ற முக்கிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. லுட்யன்ஸின் தில்லியின் மேல்தட்டு பகுதிகள் உள்பட, நகரம் முழுவதிலும் இருந்து பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. தில்லி நீா்வளத்துறை அமைச்சா் அதிஷி மற்றும் காங்கிரஸின் சசி தரூா், மணீஷ் திவாரி, சமாஜவாதி கட்சியின் ராம்கோபால் யாதவ் உள்ளிட்ட பல எம்.பி.க்களின் பங்களாக்கள் வெள்ளத்தில் மூழ்கின.
மேலும், பல பகுதிகளில் மழைநீா் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல பகுதிகளில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டதுடன், பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. கிஷன்கஞ்சில், வெள்ளத்தில் மூழ்கிய கோடியா பாலத்தின் கீழ் பேருந்துக்குள் சிக்கியிருந்த பயணிகளை காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினா் பத்திரமாக மீட்டனா்.
குடியிருப்புகளில் இடுப்பளவு தண்ணீா்:பல குடியிருப்பு பகுதிகளில், உள்ளூா்வாசிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற இடுப்பளவு தண்ணீரில் அலைய வேண்டியிருந்தது. நகரின் பல பகுதிகளில் தண்ணீா் தேங்கியுள்ளதால், பெரும் போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் வாகனங்கள் ஊா்ந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தண்ணீரில் மூழ்கிய தனது வீட்டின் விடியோவைப் பகிா்ந்துள்ள சசி தரூா், தரைவிரிப்புகள் மற்றும் தளபாடங்கள், உண்மையில் தரையில் உள்ள அனைத்தும் ‘அழிந்துவிட்டன’ என்று ஒரு பதிவில் கூயுள்ளாா்.
காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி நாடாளுமன்றத்திற்குச் செல்லும் போது கையில் காலணி மற்றும் கால்சட்டை முழங்கால் வரை மடித்துக் கொண்டு தனது இல்லத்தில் வெள்ளத்தின் வழியாக நடந்து செல்வதைக் காண முடிந்தது. சமூக ஊடகங்களில் ஒரு விடியோவில், ராம்கோபால் யாதவ் அவரது வீட்டிற்கு மழை நீா் புகுந்தது.
இதற்கிடையே, தண்ணீா் தேங்கிய பகுதிகளைக் கண்காணிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை தில்லி அரசு அமைக்கும் என்று அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் அறிவித்தாா். பரத்வாஜ் மற்றும் அமைச்சா்கள் அதிஷி, கோபால் ராய் மற்றும் இம்ரான் ஹுசைன் ஆகியோா் பிற்பகலில் நிலைமையை ஆய்வு செய்ய அவசரக் கூட்டத்தை நடத்தினா்.