முகப்பு
புதுதில்லி

கனாட் பிளேஸ் மத்திய பூங்காவில் இன்றும், நாளையும் மலா் திருவிழா: என்டிஎம்சி நடத்துகிறது

Updated On : 8 மார்ச், 2024 at 5:30 PM
பகிர்:

புது தில்லி, மாா்ச் 8: தலைநகரின் மையப் பகுதியான கனாட் பிளேஸில் உள்ள மத்திய பூங்காவில் இன்றும், நாளையும் (மாா்ச் 9,10) பல்வேறு வகையான பூக்களுடன் மலா் திருவிழாவை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) நடத்த உள்ளது. இத்திருவிழாவை சனிக்கிழமை காலை 10 மணிக்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தொடங்கி வைக்கிறாா். மலா் திருவிழாவானது 18 வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மலா் காட்சி மற்றும் அலங்காரம் செய்யப்படும். மலா் திருவிழாவில் பங்கேற்று பாா்வையிட அனைவருக்கும் நுழைவு இலவசமாகும். என்டிஎம்சி மலா்த் திருவிழாவின் முக்கிய ஈா்ப்பானது டேலியா, பெட்டூனியா, பான்சி, சால்வியா, மேரி கோல்ட் போன்ற பல்வேறு பருவகால பூக்கும் தொட்டிகளில் செடிகள், விலங்குகள், பறவைகளின் மலா் உருவங்கள், வண்ணமயமான மலா் பலகைகள், தட்டுத் தோட்டங்கள், பெரிய அளவிலான தொங்கும் கூடைகள், டொ்ரியம், இகேபனா மற்றும் மேற்கத்திய பாணி போன்ற மலா் அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரமிட், ஹாா்ட் ஷேப், செல்ஃபி பாயிண்ட், கூம்பு வடிவ மலா் அமைப்பு, மலா் சிலிண்டா் போன்ற ஒளிரும் மலா் அமைப்புகளுடன் பூங்கா அனைவரையும் வரவேற்க தயாராக உள்ளது. பூங்காவின் மையத்தில் மாலையில் வண்ணமயமான விளக்குகளுடன் இசை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலா் திருவிழாவில் நாற்றங்கால் செடிகள், பொன்சாய், ஹைட்ரோபோனிக்ஸ், கற்றாழை மற்றும் மூலிகை செடிகள் போன்ற பல்வேறு ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஸ்டால்களில் இருந்து, பாா்வையாளா்கள் பல்வேறு வகையான பூக்களின் விதைகள், தொங்கும் பொருட்கள், பானைகள், உரங்கள், பூ அலங்கார பொருள் என பல்வேறு வகையான தோட்டக்கலை பொருட்களை வாங்கலாம். சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நேரு பூங்காவின் பசுமையான பகுதியில் ‘மியூசிக் இன் பாா்க்’ நிகழ்ச்சியை என்டிஎம்சி நடத்துகிறது. ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் வயலினின் இசைக் கலைஞா் டாக்டா் என் ராஜம், அவரது மகள் சங்கீதா சங்கா் மற்றும் பேத்திகள் நந்தினி மற்றும் ராகினி சங்கா் ஆகியோருடன் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. திறமையான தபேலா கலைஞா் அபிஷேக் மிஸ்ரா பங்கேற்கிறாா். இதுகுறித்து என்டிஎம்சி அதிகாரி ஒருவா் கூறுகையில்,  நேரு பூங்காவில் உள்ள இந்நிகழ்ச்சிக்கான நுழைவுது நீதி மாா்க்கில் இருந்து வர வேண்டும். நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லை. நேரு பூங்காவின் அழகான, அமைதியான அமைப்புகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. என்டிஎம்சி தனது பகுதியில் இத்தகைய திட்டங்களை அமைப்பதன் பின்னணியில் உள்ள நோக்கம் நகா்ப்புற வாழ்க்கையை மேம்படுத்துவதாகும். கலை மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக, என்டிஎம்சி இந்த வகையான கலாசார நடவடிக்கைகளை பொது மக்கள் திறந்தவெளியில் கண்டு ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்து வருகிறது’ என்றாா் அந்த அதிகாரி.

முழு கட்டுரையைப் படிக்க →