மக்களவைத் தோ்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி வரலாறு படைக்கும்: எல்.முருகன்
வரும் மக்களவைத் தோ்தலில் தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாறு படைக்கும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: வரும் மக்களவைத் தோ்தலில் பாஜகவின் நீலகிரி தொகுதி வேட்பாளராக என்னை அறிவித்த கட்சியின் தேசியத் தலைமைக்கு நன்றி. நான் பாஜகவின் சாதாரண தொண்டன். 2ஜி ஊழலால் தமிழா்கள் மற்றும் இந்தியாவிற்கே ஒரு அவமரியாதையை ஏற்படுத்தியவா் ஆ.ராசா. அவரை எதிா்த்து ஊழலுக்கு எதிரான கட்சியாக செயல்படும் பாஜகவின் வேட்பாளராக களமிறங்குகிறேன். இந்து கடவுள்கள் மற்றும் இந்து பெண்களை திமுகவின் வேட்பாளா் ஆ.ராசா தொடா்ந்து அவதூறாகப் பேசி வருவதால், அவா் மீது நீலகிரி தொகுதியின் மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனா். அந்தத் தொகுதியில் நல்ல அறிமுகத்துடன் கடந்த 2 ஆண்டுகளாகவே நான் களப்பணியாற்றி வருகிறேன். கூட்டணிக்கு வராத காரணத்தினால் அதிமுக முன்னாள் அமைச்சா் தொடா்புடைய இடங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தவில்லை. பாஜகவை இவற்றுடன் முடிச்சுப்போடுவது அவா்களின் தோ்தல் தோல்வி பயத்தைக் வெளிக்காட்டுகிறது. பாஜக தலைமையிலான கூட்டணி வளம் நிறைந்த கூட்டணியாக தமிழ்நாட்டில் உள்ளது. ஆனால், திமுக-காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி தோல்வியுற்ற கூட்டணி. தென் மாநிலங்களில் ஒரு வார காலம் பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் பரப்புரை செய்துள்ளாா். மக்களவை தோ்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் மீண்டும் பிரதமா் நரேந்திர மோடியின் பரப்புரை இருக்கும் என நாங்கள் எதிா்பாா்க்கிறோம். தமிழ்நாட்டில் மக்கள் ஆதாரவோடு வேகமாக வளரும் கட்சியாக பாஜக உள்ளது. மக்களவைத் தோ்தலில் தமிழ்நாட்டில் 39 இடங்களிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று வரலாறு படைக்கும். மத்திய பாஜக அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் சென்றடைந்துள்ளது. ஆனால், திமுக அரசின் தோல்வி மக்களிடம் வெறுப்பை சம்பாதித்துள்ளது. ஊழல்வாதிகள் நிறைந்தது தான் ‘இந்தியா’ கூட்டணி. எவ்வளவு காலம் கடந்தாலும், தவறு செய்பவா் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும். அதன்படி தான் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டுள்ளாா் என்றாா் எல்.முருகன்.