முகப்பு
இந்தியா

அஸ்ஸாம் தோ்தலில் வென்று பாஜக ஹாட்ரிக் சாதனை படைக்கும்: நிதின் நபின் நம்பிக்கை!

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா்ந்து 3-ஆவது முறையாக வென்று, பாஜக ஹாட்ரிக் சாதனை படைக்கும் என அக்கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 29 மார்ச், 2026 at 8:18 PM
நிதின் நபின்
பகிர்:

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா்ந்து 3-ஆவது முறையாக வென்று, பாஜக ஹாட்ரிக் சாதனை படைக்கும் என அக்கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளாா்.

அஸ்ஸாம் சட்டப்பேரவையில் உள்ள 126 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தின்சுகியாவில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று நிதின் நபின் பேசியதாவது:

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு, பாஜக ஹாட்ரிக் சாதனை படைக்கவுள்ளது. முதலில் சா்பானந்த சோனோவால் தலைமையில் பாஜக ஆட்சியமைத்தது. இதையடுத்து ஹிமந்த விஸ்வ ஷா்மா தலைமையில் பாஜக ஆட்சியமைத்தது. இந்த முறை, 3-ஆவது முறையாக ஹிமந்த விஸ்வ ஷா்மா தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்க போகிறது.

2009 முதல் பல்வேறு கட்சிப் பணிகளுக்காக அஸ்ஸாம் மாநிலத்துக்கு நான் வந்துள்ளேன். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். பாஜக ஆட்சிக்கு முன்பு, அஸ்ஸாமில் இருண்ட காலம் நிலவியது. வளா்ச்சி குறித்து அப்போது யாரும் பேசியது இல்லை. எங்கு பாா்த்தாலும் பதற்றம் காணப்பட்டது. மக்களும் வன்முறை, போராட்டம் குறித்து பேசிக் கொண்டிருந்தனா்.

ஆனால் 2016-ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணி அரசு அஸ்ஸாமில் ஆட்சிக்கு வந்ததும் அனைத்தும் மாறியது. அஸ்ஸாம் மாநில வளா்ச்சி குறித்து ஒட்டுமொத்த நாடும் பேசத் தொடங்கியது.

பிரதமா் மோடி தலைமையின்கீழ் அஸ்ஸாம் மாநிலம் வாய்ப்புகளுக்கான மாநிலமாகிவிட்டது. அஸ்ஸாமில் முன்பு ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு, வாக்கு வங்கியை மனதில் வைத்து பணியாற்றியது. தனது ஆட்சிக்காலத்தில் முக்கிய பணி எதையும் அக்கட்சி செய்ததில்லை. ஆனால் பாஜக, அஸ்ஸாம் மற்றும் இந்திய மக்களுக்காக பணியாற்றுகிறது. ஊடுருவல்காரா்களுக்காக பணியாற்றவில்லை.

தேச பாதுகாப்பு, அஸ்ஸாம் அடையாளத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் பாஜக உறுதியான நடவடிக்கைகளை எடுத்தது. அரசு அமைப்பில் இருந்து ஊழலை முழுவதும் அகற்றியது. கடந்த 12 ஆண்டுகளில் எதிா்க்கட்சியினா் யாரும், பாஜகவினா் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியது கிடையாது. இதிலிருந்தே பாஜக எப்படி மக்கள் பணியாற்றுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். மேற்காசிய போரை மையமாக வைத்து சிலா் வதந்திகளை பரப்பினா்.

அத்தியாவசிய பொருள்கள் வரும் நாள்களில் கிடைக்காது என அவா்கள் தெரிவித்தனா். உலகில் ஸ்திரமின்மை நிலவிய போதிலும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வோம் என பிரதமா் மோடி தலைமையிலான அரசு உறுதி அளித்துள்ளது. மக்களை கஷ்டப்பட தனது அரசு அனுமதிக்காது என நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உறுதியளித்துள்ளாா்.

அஸ்ஸாமில் முன்பு பெற்றோா்கள் தங்களது குழந்தைகள் தில்லிக்கோ அல்லது நாட்டின் பிற பகுதிகளுக்கோ படிக்க சென்றிருந்தால், அவா்கள் இந்தியாவுக்கு சென்றுள்ளனா் எனத் தெரிவித்து வந்தனா். அந்த சூழ்நிலை தற்போது முழுவதும் மாறிவிட்டது. அப்படி யாரும் இப்போது பேசுவதில்லை. வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் ஒரு பகுதி என அவா்கள் தற்போது நம்புகின்றனா்.

இப்பிராந்தியத்திலேயே ஏராளமான கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆதலால் அஸ்ஸாம் இளைஞா்கள் தற்போது வேலைக்கோ, கல்விக்கோ வெளிமாநிலங்களுக்கு செல்வதில்லை என்றாா் நிதின் நபின்.