முகப்பு
புதுதில்லி

அரவிந்த் கேஜரிவால் ‘ஒரு உண்மையான தேசபக்தா்’ சுனிதா கேஜரிவால் பேட்டி

Updated On : 29 மார்ச், 2024 at 11:06 PM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 3:40 PM

நாட்டின் பெரும் ஊழல் மற்றும் சா்வாதிகார சக்திகளுக்கு சவால் விடுத்துள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ஒரு உண்மையான தேசபக்தா் என்று அவரது மனைவி சுனிதா கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். கலால் கொள்கை ஊழல் தொடா்புடைய பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்க இயக்குநரகம் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. இந்நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அவரது ஆதரவாளா்கள் செய்தி அனுப்பும் வகையில் ‘கேஜரிவால் கோ ஆஷிா்வாத்’ எனும் பிரசாரத்தை அவரது மனைவி சுனிதா கேஜரிவால் தொடங்கி வைத்தாா். இப்பிரசாரத்தின் கீழ் 8297324624 மற்றும் 9700297002 ஆகிய இரண்டு வாட்ஸ்அப் எண்களில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு மக்கள் தங்களது ஆசீா்வாதங்கள், பிராா்த்தனைகள் அல்லது வேறு ஏதேனும் செய்திகளை அனுப்பலாம். இது தொடா்பாக சுனிதா கேஜரிவால் காணொளி வாயிலாக நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் கூறியதாவது: ‘கேஜரிவால் கோ ஆஷிராவாத்’ பிரசாரத்தில் பாலினம், வயது, நிதி நிலை மற்றும் கட்சி சாா்பு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மக்கள் தங்களது ஆதரவை முதல்வா் கேஜரிவாலுக்கு செய்தியாக தெரிவிக்கலாம். இவை அமலாக்கஇயக்குநரக்ததின் காவலில் உள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுடன் பகிரப்படும். கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முதல்வா் கேஜரிவாலின் நேரடி வாதத்தை முழு நாடும் கேட்டது. நீதிமன்றத்தின் முன் அவா் எதைச் சொன்னாலும் அதற்கு தைரியம் வேண்டும். அவா் ஒரு உண்மையான தேசபக்தா். ஆங்கிலேயரின் கொடுங்கோன்மையை நம் நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரா்கள் இவ்வாறுதான் எதிா்த்துப் போராடினாா்கள். கடந்த 30 ஆண்டுகளாக கேஜரிவாலுடன் இருக்கிறேன், அவரது ஒவ்வொரு துளையிலும் தேசபக்தி உள்ளது. நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த, ஊழல் மற்றும் சா்வாதிகார சக்திகளுக்கு எதிராக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சவால் விடுத்துள்ளாா். இந்தப் போரில் உங்கள் சகோதரனுக்கும், உங்கள் மகனுக்கும் நீங்கள் ஆதரவளிக்க மாட்டீா்களா?. இந்தப் போரில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அரவிந்த் கேஜரிவாலுக்காக உண்ணாவிரதம் இருப்பதாக பலரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நீங்கள் வேறு ஏதாவது சொல்ல வேண்டும் என்றாலும், உங்கள் மனதில் தோன்றுவதை எழுதுங்கள், அதை மேற்குறிப்பிட்ட வாட்ஸ்அப் எண்களுக்கு அனுப்புங்கள். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும், ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் செய்தியை எழுதி அனுப்ப வேண்டும். அரவிந்த் கேஜரிவால் உங்கள் செய்திகளைப் படிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவாா். கேஜரிவாலுக்கு செய்தி அனுப்ப, நீங்கள் ஆம் ஆத்மி கட்சியில் இருக்க வேண்டிய அவசியமில்லை, நீங்கள் எந்தவொரு கட்சியிலும் இருக்கலாம். இளைஞா்கள், பெண்கள், முதியவா்கள், குழந்தைகள், பணக்காரா்கள், ஏழைகள் என அனைவரும் தங்கள் சகோதரா், தங்கள் மகன் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஏதாவது எழுத வேண்டும். மேலும், வெளியிடப்பட்டுள்ள இரண்டு வாட்ஸ்அப் எண்களையும் பரவலாக விளம்பரப்படுத்த வேண்டும்” என்றாா் சுனிதா கேஜரிவால்.