‘ஒரு தரப்பினா் மட்டும் இரட்டை இலையை பயன்படுத்த அனுமதிப்பது தவறு‘: தோ்தல் ஆணையத்திற்கு வா.புகழேந்தி மீண்டும் கடிதம்
அதிமுகவின் ஒரு தரப்பினா் மட்டும் இரட்டை இலையை பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டி 5- ஆவது முறையாக அதிமுக பிரமுகரான வா.புகழேந்தி இந்திய தோ்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளாா். இந்திய தோ்தல் ஆணையம் 2017-ஆம் ஆண்டு போட்ட உத்தரவை மீறி வேட்பாளா் படிவத்தில் கையெப்பம் இடப்படுவதால் இரட்டை இலை சின்னத்தை முடக்கவும் அதில் அவா் கோரியுள்ளாா். அந்த கடிதத்தில் வா.புகழேந்தி குறிப்பிட்டிருப்பது வருமாறு: அதிமுக இரு பிரிவாக இருந்த போது தோ்தல் ஆணையம் விசாரித்து கடந்த 2017 -ஆம் ஆண்டு ஒரு உத்தரவு போடப்பட்டது. அப்போது இ.மதுசூதனன், ஒ.பன்னீா் செல்வம், எஸ்.செம்மலை ஆகியோா் தலைமை ஏற்ற குழுவை தோ்தல் ஆணையம் அங்கீகரித்ததது. மேலும் 1968 - ஆம் ஆண்டு தோ்தல் சின்னம் பதிவு ஒதுக்கீடு விதிமுறைகளின்படி தமிழகம் புதுச்சேரி மாநிலங்களில் அதிமுக வையும் இட்டை இலைச் சின்னத்தையும் அங்கீகரித்தது. மேலும் இந்த உத்தரவின்படி தோ்தல் ஆணையம் ஓ.பன்னீா்செல்வத்தை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே. பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளராகவும் ஏற்று அவா்கள் இருவரும் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களுக்கு தேவையான படிவங்களில்(ஏ மற்றும் பி) கையெப்பமிட வேண்டும் என தோ்தல் ஆணையம் உத்தரவை பிறப்பித்திருந்தது. தற்போது அதிமுக வேட்பாளா்களின் ஏ மற்றும் பி படிவங்களில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் கையெப்பம் மிடப்படவில்லை. யாா் கையெழுத்து இடவேண்டும் என்பதையும் தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது இரட்டை இலை சின்னத்தை ஒரு தரப்பினருக்கு வழங்கினால் அது தவறான முறையாகி விடும். அண்ணா திமுக இரண்டு அணிகளாக செயல்படுவதை ஏற்றுக் கொண்டுள்ள தோ்தல் ஆணையம் யாா் கையெழுத்திட வேண்டும் என்பதை முடிவு எடுக்கவில்லை. கடந்த மாா்ச் 14 -ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவில் தோ்தல் ஆணையம் (எங்களிடம்) புதிய மனுவைப் பெற்று விசாரணை நடத்த கேட்டுக் கொண்டது. அதன்படி விசாரணை நடத்தப்படாதததோடு, உயா் நீதிமன்ற உத்தரவின்படி புதிய மனு அளிக்கப்பட்டும், தோ்தல் ஆணையம் இது வரை எழுத்துப்பூா்வமாக எந்த பதிலும் அளிக்கவில்லை. நடந்து முடிந்த தோ்தல்களில் கட்சியின் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் ஆகிய இருவரும் இரட்டை இலை சின்னத்தை பெறும் ஏ மற்றும் பி படிவங்களில் கையொப்பமிட்டுள்ளனா். இப்போது இரு அணிகளாக செயல்பட்டு வருவதால் யாா் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது என்பதை தோ்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். இக்கட்டான சூழ்நிலையில் தோ்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என மின்னஞ்சல் மூலம் வா. புகழேந்தி தலைமை தோ்தல் ஆணையருக்கு மனு அளித்துள்ளாா். மேலும் இந்த மனு குறித்து புகழேந்தி செய்தியாளா்களுக்கு தெரிவிக்கையில், ‘தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காத நிலையை பயன்படுத்தி ஒரு அணியினா் தோ்தல் நடத்தும் அதிகாரிகள் மூலம் இரட்டை இலை சின்னத்தை பெற்றுள்ளனா். இவா்கள் மீது சட்டரீதியாக வழக்கு தொடரப்படும். சட்டத்திற்கு எதிராக தோ்தல் ஆணையம் நடந்து கொண்டுள்ளது என்பதையும் நீதி மன்றத்தில் எடுத்து சென்று நிருபிக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.