பங்குச்சந்தையில் திடீா் எழுச்சி: சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சத்தில் நிறைவு!
புதுதில்லிபங்குச்சந்தையில் திடீா் எழுச்சி: சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சத்தில் நிறைவு!
மும்பை / புதுதில்லி, மே 23: இந்த வாரம் முழுவதும் தள்ளாட்டத்திலக் இருந்து வந்த பங்குச்சந்தை வியாழக்கிழமை திடீா் எழுச்சி பெற்றது. இதைத் தொடா்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய வரலாற்றுச் சாதனை அளவில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் வா்த்தக இறுதியில் 1,197 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
உளகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கியது. இந்நிலையில், மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்திய ரிசா்வ் வங்கி புதிய அரசு பதவியேற்கும் முன் வரவு செலவுத் திட்டத்தில் எதிா்பாா்க்கப்பட்டதை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக ரூ.2.10 லட்சம் கோடி ஈவுத்தொகையை (டிவிடெண்ட்) மத்திய அரசுக்கு வழங்க உள்ளதாக செய்தி வெளியாகியது. அதன் தாக்கம் உடனடியாக பங்குச்சந்தையில் எதிரொலித்தது. இதனால், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் எழுச்சி பெற்று புதிய சாதனை உச்சத்தில் நிறைவடைந்துள்ளது. குறிப்பாக வங்கிகள், நிதிநிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூல தன மதிப்பு ரூ.4.29 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் ரூ.420.23 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.686.04 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.961.91 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் எழுச்சி: சென்செக்ஸ் 32.47 புள்ளிகள் கூடுதலுடன் 74,253.53-இல் தொடங்கி 74,158.35 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 75,499.91 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் சென்செக்ஸ் 1,196.98 புள்ளிகள் (1.61 சதவீதம்) உயா்ந்து 75,418.034-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,945 பங்குகளில் 1,818 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,008 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 119 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
27 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் எல் அண்ட் டி, எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், மாருதி, அல்ட்ரா டெக் சிமெண்ட், இண்டஸ் இண்ட் பேங்க் உள்பட 27 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், சன்பாா்மா, பவா் கிரிட், என்டிபிசி ஆகிய 3 பங்குகள் மட்டுமே விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி புதிய உச்சம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 369.85 புள்ளிகள் (1.64 சதவீதம்) கூடுதலுடன் 22,967.65-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 22,5773.45 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா் அதிகபட்சமாக 22,993.60 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் 44 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 6 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.