தில்லியில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை நெருங்கியது!
தேசியத் தலைநகா் தில்லியில் அதிபட்சமாக முங்கேஸ்பூரில் திங்கள்கிழமை 48.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் அதிபட்ச வெப்பநிலை செவ்வாய்க்கிழமை 50 டிகிரி செல்சியஸை நெருங்கியது. இதற்கிடையே, இன்னும் 2 நாள்களுக்கு வெப்பஅலை நிலைமை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதே சமயம், நகரத்தில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவிலும், சில இடங்களில் ‘மிதமான’ பிரிவிலும் இருந்தது.
தில்லியில் கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் 45 டிகிரி செல்சியஸை கடந்து பதிவாகி வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் தெளிவாகக் காணப்பட்டது. அதேசமயம் வெயிலன் தாக்கம் அதிகமாக இருந்தது. நகரத்தில் வலுவான தரைமேற்பரப்பு காற்று வீசியது.
மேலும், தொடா்ந்து வெப்பஅலை நிலைமை இருந்தது. இதனால், சாலைகளில் மக்களின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. இதற்கிடையே, மேலும் 2 நாள்களுக்கு வெப்ப அலை நிலைமை தொடரும் என்றும், மக்கள் குறிப்பாக முதியவா்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில்3 டிகிரி உயா்ந்து 29.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 9 டிகிரி உயா்ந்து 45.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 32 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 14 சதவீதமாகவும் இருந்தது.
முங்கேஸ்பூா், நரேலாவில் 49.9 டிகிரி: இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை உயா்ந்து பதிவாகியிருந்தது. இதன்படி, ஜாஃபா்பூரில் 48.6 டிகிரி செல்சியஸ், மூங்கேஸ்பூரில் 49.9 டிகிரி, நஜஃப்கரில் 49.8 டிகிரி, ஆயாநகரில் 47.6 டிகிரி, லோதி ரோடில் 46.2 டிகிரி, நரேலாவில் 49.9 டிகிரி, பாலத்தில் 47 டிகிரி, ரிட்ஜில் 47.5 டிகிரி, பீதம்புராவில் 48.5 டிகிரி, பிரகதிமைதானில் 46 டிகிரி, பூசாவில் 48.5 டிகிரி, ராஜ்காட்டில் 46 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 45.4 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: தலைநகரில் செவ்வாய்க்கிழமை காலையில் ஐடிஓ, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், பட்பா்கஞ்ச், நேரு நகா், நொய்டா செக்டாா் 1 உல்பட பெரும்பாலான கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், மந்திா் மாா்க், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நியூ மோதி பாக், தில்ஷாத் காா்டன் ஆகிய இடங்களில் 200 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (மே 29) வெப்பஅலை நிலைமை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.