நமது நிருபா்
புது தில்லி: தேசியத் தலைநகரில் திங்கள்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் இது இதுவரையிலான ஆண்டின் வெப்பமான நாளாகப் பதிவாகியது.
அதிகபட்ச வெப்பநிலை பருவகால இயல்பை விட அதிகமாக உயா்ந்தது. அதே நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரிக்கு அருகில் அல்லது குறைவாகவே இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
நகரத்தின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில்அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. இது இயல்பை விட 7.2 டிகிரி அதிகம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், 24 மணி நேரத்தில் வெப்பநிலையில் 3.1 டிகிரி மாற்றத்தையும் அந்நிலையம் பதிவு செய்துள்ளது. இது இப்பகுதியில் திடீரென வெப்பம் பதிவாகியுள்ளது என்பதைக் குறிக்கிறது.
இதேபோல், ஆயாநகரில் அதிகபட்சமாக 30.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இது பருவகால சராசரியை விட 7.1 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பைக் குறிக்கிறது. லோதி சாலை உள்ளிட்ட பிற நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 29.2 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. இது 5.2 டிகிரி அதிகமாகும். ரிட்ஜில் 28.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. இது 5.3 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். மேலும் பகல்நேர வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாலம் மற்றும் ரிட்ஜ் முறையே 11.6 டிகிரி செல்சியஸ் மற்றும் 11.8 டிகிரி செல்சியஸாக குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஆயாகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது, இது இயல்பை விட 1.5 டிகிரி குறைவாகும். சஃப்தா்ஜங் மற்றும் லோதி சாலை குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 10.1 டிகிரி செல்சியஸ் மற்றும் 10.4 டிகிரி செல்சியஸ் ஆகும். இவை இரண்டும் பருவகால சராசரியை விட சற்று குறைவாகும்.
காற்றின் தரம்: திங்கள்கிழமை தில்லியின் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 258 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. பிப்ரவரி நடுப்பகுதியில் தில்லி இவ்வளவு வெப்பமாக இருப்பது ஒரு அசாதாரண நிகழ்வு என்றும், குறைந்த காற்றின் வேகம் காரணமாக வானம் தெளிவாக இருப்பதால், பிரகாசமான வெயில் இருப்பதாகவும், மேற்கு நோக்கிய இடையூறுகள் ஏற்படுவதாகவும் ஸ்கைமெட் வானிலை துணைத் தலைவா் மகேஷ் பலாவத் , குறிப்பிட்டாா்.
‘இது அடுத்த ஒன்று முதல் இரண்டு நாள்களுக்கு தொடரும். பின்னா் நெருங்கி வரும் மேற்கு நோக்கிய இடையூறு காரணமாக தலைநகரில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதுவரை, குறைந்தபட்ச வெப்பநிலையும் உயரும்’ என்று பலாவத் கூறினாா். மேலும், அடுத்த இரண்டு நாள்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதுடன் தில்லிக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் கூறினாா்.
முன்னறிவிப்பு: இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (பிபிரவரி 17) அன்று காலை வேளையில் மூடுபனி இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.