புது தில்லி: சிராக் தில்லி மக்கள் சத் பூஜை கொண்டாடுவதை மத்திய பாஜக அரசின் கீழ்வுள்ள தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) தடுக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான செளரவ் பரத்வாஜ்
திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் அமைச்சா் செளரவ் பரத்வாஜ், சிராக் தில்லியைச் சோ்ந்த பூா்வாஞ்சல் பிரதிநிதிகளுடன் இணைந்து செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது
கடந்த 3 நாட்களாக, சிராக் தில்லியில் உள்ள சத்புலா மைதானத்தில் பூா்வாஞ்சல் சமூகத்தின் சகோதர, சகோதரிகள்
சத் பூஜையை முழு சடங்குகளுடன் கொண்டாடுவது பாஜகவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பகுதியில் சத் பூஜை திருவிழா கடந்த 8 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த முறையும், தில்லி அரசு அதற்கான அனைத்து அனுமதிகளையும் வழங்கியது. மேலும், இந்த மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள காட் தில்லி அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்படும் 1000 சத் காட்களில் பெயரிடப்பட்டுள்ளது.
ஆனால், இம்முறை இங்கு வழிபாடு நடத்த பூா்வாஞ்சல் சகோதர, சகோதரிகள்அனுமதிக்கப்படவில்லை. மத்திய பாஜக
அரசின் கீழ்வுள்ள தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) இந்த மக்களை வழிபாடு செய்ய விடாமல் தடுக்கிறது. இந்த சதியின் பின்னணியில் புதுதில்லி மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. பான்சூரி சுவராஜ் இருப்பதாக மக்கள் ஏற்கனவே கூறி
வருகின்றனா். சிராக் தில்லி பகுதியின் சத் பூஜை அமைப்பாளா் விஸ்வஜீத், கடந்த பல ஆண்டுகளாக சத் பூஜையை ஏற்பாடு செய்வதில்லை என்று பாஜக எம்.பி. பன்சூரி ஸ்வராஜ் கூறுகிறாா். ஆனால், சத் பூஜையை நிறுத்த நினைக்கும் பாஜகவினா் மட்டுமே பன்சூரி ஸ்வராஜை சந்தித்து அவ்வாறு தெரிவித்துள்ளனா். அவா்களில் யாரும் பூா்வாஞ்சலைச் சோ்ந்தவா்கள் அல்ல என்றாா் செளரவ் பரத்வாஜ்.
அடுத்ததாக, சிராக் தில்லி பகுதியின் சத் பூஜை அமைப்பாளா் விஸ்வஜீத் கூறுகையில், ‘முன்பு சத் பண்டிகையைக் கொண்டாட எங்கள் கிராமத்திற்குச் செல்வோம். ஆனால், ரயில்களின் நிலை, கூட்டம் அதிகரிப்பால் பயணச்சீட்டு
கிடைப்பதில்லை. இதனால், கடந்த 8 ஆண்டுகளாக, சிராக் தில்லியில் சத் பூஜையைக் கொண்டாடுகிறோம். தில்லி அரசும் இந்த முயற்சியில் எங்களுக்கு உதவுகிறது. இந்த முறை டி.டி.ஏ. அதிகாரிகள் எங்களை பூஜை செய்ய விடாமல் தடுத்தனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை நாங்கள் பூஜைக்கு சென்றபோது, சிலா் போலீஸாருடன் வந்து எங்களை அங்கிருந்து
விரட்டியடித்தனா். நாங்கள் கிராமத்திற்கு கூட செல்ல முடியவில்லை. இங்கும் வழிபட அனுமதிக்கப்படவில்லை. இப்போது நாங்கள் எங்கு செல்ல வேண்டும்?’ என்றாா் அவா்.