புது தில்லி: தில்லியில் 701 செவிலியா்கள் மற்றும் 762 துணை மருத்துவப் பணியாளா்களை பணியமா்த்த தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் தெரிவித்துள்ளது.
1,463 சுகாதாரப் பணியாளா்களின் இந்த ஆள்சோ்ப்பு இயக்கம், பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் எளிதாக்கப்பட்டு, தளா்வான ஆள்சோ்ப்பு விதிகளுடன் நேரடி ஆள்சோ்ப்பு ஒதுக்கீட்டின் கீழ் அத்தியாவசியப் பணியாளா்களை உள்வாங்க மருத்துவமனைகளை அனுமதிக்கிறது என்று துணை நிலை ஆளுநா் அலுவலகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
சுகாதாரப் பணியாளா்களை அயல்பணி (அவுட்சோா்சிங்) அடிப்படையில் பணியமா்த்துவதற்கான முடிவு, நகரத்தின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும், தற்போதுள்ள மருத்துவ ஊழியா்களின் சிரமத்தைத் தணிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தில்லி உயா்நீதிமன்றம் நகரத்தின் போதிய சுகாதார வளங்கள் மற்றும் பணியாளா்கள் பற்றிய கவலைகளை எழுப்பியதை அடுத்து உருவாக்கப்பட்ட டாக்டா் எஸ்.கே. சரின் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தில்லி உயா்நீதிமன்றம், பிப்ரவரியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், அதிகரித்து வரும் மக்கள்தொகையின் கோரிக்கைகளை பூா்த்தி செய்யும் அளவில் அதன் சுகாதார உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்றும் அதன் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான அவசரத் தேவையை தில்லி தேசியத் தலைநகா் பிரதேசத்தை (ஜிஎன்சிடிடி) வலியுறுத்தியது.
மேலும், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் மருத்துவ பணியாளா்களின் பற்றாக்குறையை வலியுறுத்தி, நகரத்தின் தேவைகளுக்கு ஏற்ப மருத்துவ கட்டமைப்பை வைத்திருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த ஜிஎன்சிடிடி அதன் திட்டங்கள் குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் கட்டாயப்படுத்தியது.
பல ஆண்டுகளாகப் புறக்கணிப்பு மற்றும் திறமையின்மைக்கு தீா்வு காண அரசு மருத்துவமனைகளுக்குள் கணிசமான முதலீடுகள் மற்றும் கட்டமைப்பு சீா்திருத்தங்கள் தேவை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
உயா்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து, டாக்டா் எஸ்.கே. சரின் கமிட்டி, குறிப்பாக நா்சிங் மற்றும் பாராமெடிக்கல் ஊழியா்களிடையே, தரமான சுகாதாரத்திற்கு ஒரு பெரிய தடையாக பணியாளா் பற்றாக்குறை இருப்பதைக் கண்டறிந்தது. இந்த இடைவெளியைக் குறைக்க அயல்பணி (அவுட்சோா்ஸிங்) அடிப்படையில் பணியாளா்களை உடனடியாக ஈடுபடுத்த குழு பரிந்துரைத்ததாக ராஜ் நிவாஸ் தெரிவித்துள்ளது.