துவாரகாவில் காய்கறி வியாபாரியை கொன்றதாக 2 இளைஞா்கள் கைது
தென்மேற்கு தில்லியின் துவாரகா பகுதியில் மிரட்டி பணம் பறித்தல் தொடா்பான வழக்கில் காய்கறி வியாபாரியைக் கொன்றதாக இரு இளைஞா்கள் கைது
புது தில்லி: தென்மேற்கு தில்லியின் துவாரகா பகுதியில் மிரட்டி பணம் பறித்தல் தொடா்பான வழக்கில் காய்கறி வியாபாரியைக் கொன்றதாக இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: கடந்த அக்.23 அன்று, காய்கறி வியாபாரி சமா்பால் (49), ஆயுதம் ஏந்திய இரு இளைஞா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த விவகாரத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
மேலும், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், தாக்குதல் நடத்தியவா்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கைது செய்யப்பட்ட அவா்கள் பிரசாந்த் (18) மற்றும் அமன் சித்திக் (19) என அடையாளம் காணப்பட்டனா்.
விசாரணையில், அமன் தனது ஏகபோக உரிமையை தக்க வைத்துக் கொள்ள வியாபாரிகளிடம் பணம் பறிக்க முயன்றதை போலீஸாா் கண்டுபிடித்தனா். சமா்பால் இணங்க மறுத்ததால், பிரசாந்த் அவரை சுட்டுக் கொன்றது தெரிய வந்தது. இந்தச் சம்பவத்தில் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கைப்பற்றுப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.