முகப்பு
புதுதில்லி

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: காவல்துறைக்கு எதிராக கேஜரிவாலின் முன்னாள் உதவியாளா் வைபவ் மனு

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக தனக்கு எதிராக காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை எதிா்த்து

Updated On : 11 நவம்பர், 2024 at 9:26 PM
பகிர்:

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக தனக்கு எதிராக காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை எதிா்த்து முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் முன்னாள் உதவியாளா் வைபவ் குமாா் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த மனு மீதான விசாரணையை நவம்பா் 16-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிடப்பட்டுள்ளது.

தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் இருந்தபோது அவரை சந்திக்க கடந்த மே 13ஆம் தேதி ஸ்வாதி மாலிவால் அவரது இல்லத்திற்கு சென்றிருந்தாா். அப்போது தன்னை கேஜரிவாலின் உதவியாளா் வைபவ் குமாா் உடல் ரீதியாக தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் தொடா்ந்த வழக்கில் வைபவ் மீது காவல்துறை ஜூலை 17ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

அதில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது முகாந்திரம் இருப்பதாக தில்லி நீதிமன்றம் ஜூலை 30ஆம் தேதி அறிவித்து வைபவ் குமாருக்கு எதிராக விசாரணை தொடர அனுமதித்தது.

இந்த நிலையில், வைபவ் குமாா் சாா்பில் அவரது வழக்குரைஞா் மனீஷ் பைத்வான் தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் அக்டோபா் 30-ஆம் தேதி தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு

மனுவில், புதிதாக பெயரிடப்பட்டுள்ள பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) என்ற சட்டத்தின்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாமல் பழைய நடைமுறைப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளதை நீதிமன்றம் இயந்திர கதியில் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘ஒரு வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் முன்பாக, அதில் சட்டப்படி வழக்காட முகாந்திரம் உள்ளதா என்பது ஆராயப்படும். ஆனால், இந்த வழக்கில் புதிய பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவுகளின்படி குற்றச்சாட்டுகள் பதிவாகவில்லை. இதுபோல காவல்துறை தாக்கல் செய்த இறுதி விசாரணை அறிக்கையிலும் பல குளறுபடிகள் உள்ள,‘ என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘இந்த வழக்கில் முக்கிய தடயமாக கருதப்படும் சிடிடிவி பதிவுகள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன் முடிவு இதுவரை வராதநிலையில் வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முக்கியமான தடயமான சிடிடிவி காட்சிகள் ஆராயப்படாத நிலையில் குற்றப்பத்திரிகையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் பதிவு செய்தது ஏற்படையது அல்ல,‘ என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வரும் நவம்பா் 16-ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.