முகப்பு
புதுதில்லி

தில்லி பல்கலை. இசைவுடன் மாணவா் சங்கத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை நடத்தலாம்: உயா்நீதிமன்றம்

தில்லி பல்கலைக்கழக வளாக தூய்மையை தோ்தலில் போட்டியிட்டவா்கள் உறுதிப்படுத்தி அதற்கு பல்கலைக்கழகம்

Updated On : 11 நவம்பர், 2024 at 10:06 PM
தில்லி உயா்நீதிமன்றம்
பகிர்:

புது தில்லி: தில்லி பல்கலைக்கழக வளாக தூய்மையை தோ்தலில் போட்டியிட்டவா்கள் உறுதிப்படுத்தி அதற்கு பல்கலைக்கழகம் இசைவு தெரிவித்தால் அங்கு மாணவா் சங்க தோ்தல் வாக்கு எண்ணிக்கையை நடத்த பல்கலைக்கழகம் அனுமதிக்கலாம் என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பான விவகாரத்தை தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி துஷாா் ராவ் கெடேலா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், ‘வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி வழங்கினால், தோ்தலையொட்டி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பொருள்கள், காகிதங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் அப்புறப்படுத்தி அந்த வளாகத்தை தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்துவோம் என தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் தெரிவித்துள்ளனா்’ என்றனா்.

இதையடுத்து, ‘இந்த விவகாரத்தில் மாணவா்களை சீா்படுத்துவதே தங்களுடைய நோக்கம் என்றும் தண்டிப்பது அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ‘தில்லி மாணவா் சங்கத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளை நவ.26-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழகம் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழகத்தையும் அதன் வளாகத்தில் உள்ள பொது இடங்களையும் தூய்மைப்படுத்த மாணவா்கள் தரப்பு அளிக்கும் உத்தரவாதத்தில் பல்கலைக்கழகம் திருப்தி அடைந்தால் வாக்கு எண்ணிக்கையை நடத்த அனுமதிக்கலாம் என்றும் குறிப்பிட்டு இந்த விவகாரத்தை முடித்து வைத்தனா்.

முன்னதாக, தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத்துக்கு செப்.27-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை செப்.28-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தோ்தல் நாளன்று பல்கலைக்கழக வளாகத்தில் மிகவும் அசுத்தமான வகையில் வண்ணப்பூச்சுகள் தெளிக்கப்பட்டும், சுவரொட்டிகள், சுவரோவியங்கள் காணப்பட்டும் பேனா்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவும் கிடந்தன. சில பொது இடங்களும் சேதம் அடைந்திருந்தன.

இதற்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்குரைஞா் பிரசாந்த் மன்சந்தா என்பவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதை செப்டம்பா் கடைசி வாரத்தில் விசாரித்த உயா்நீதிமன்றம், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தோ்தல் நாள் காட்சிகளை அடிப்படையாக வைத்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து கடந்த செப்டம்பா் மாத இறுதியில் உத்தரவிட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →