புது தில்லி: ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உதவியாளா் பிபவ் குமாருக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.
அவா் 100 நாள்களுக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டுள்ளதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு, அரசுத் தரப்பு 51-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரிக்க முன்வந்துள்ளதை கணக்கில் எடுத்துக்கொண்டு, விசாரணை முடிவடைய காலமாகும் என்று கூறியது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், குமாரை விடுவிப்பதால் விசாரணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும்
நீதிபதிகள் அமா்வு கூறியது.
இதுகுறித்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘‘தில்லி முதல்வரின் தனிப்பட்ட செயலரான மனுதாரா், மாநிலங்களவை உறுப்பினறாக இருக்கும் புகாா்தாரரை தாக்கியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன... இந்த வழக்கின் விசாரணை முடிந்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்ற முகாந்திரம் எங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது என்ற விஷயம் குறித்து நாங்கள் கேட்க விரும்பவில்லை. இது விசாரணை நீதிமன்றத்தின் பிரத்தியேக வரம்பில் உள்ளது.
நியாயமான மற்றும் சுதந்திரமான விசாரணையின் முடிவில் சாட்சிகளை செல்வாக்கிலிருந்து விடுவிப்பதில் அக்கறை காட்டுவதை நாங்கள் மதிப்பிடும்போது, மற்ற நடவடிக்கைகள் மூலம் விரும்பிய பாதுகாப்பை வழங்க முடியும் என்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம். தகுதிகள் குறித்து கருத்து தெரிவிக்காமல், மனுதாரருக்கு ஜாமீன் வழங்குவது பொருத்தமானதாக கருதுகிறோம் என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.
தில்லி போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு, பிபவ் குமாருக்கு ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவித்தாா்.
அவா் வாதிடுகையில், ‘‘சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. சில முக்கிய சாட்சிகள் அவரது செல்வாக்கில் உள்ளனா். அவா்களை முதலில் விசாரிக்கப்பட வேண்டும்’’ என்றாா்.
குமாரின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘காயங்கள் எளிமையானவை. மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 308-ஆவது பிரிவின் கீழ் (கொலை செய்யாத குற்றமிழைக்க முயற்சி) குற்றத்தை பயன்படுத்துவது நியாயமில்லை’’ என்றும் கூறினாா்.
சாட்சிகள் மீது குமாா் செல்வாக்கு செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த கவலைகளை நிவா்த்தி செய்யும் பொருட்டு, அமா்வு பிபவ் குமாருக்கு பல நிபந்தனைகளை விதித்தது. அதாவது, அவா் கேஜரிவாலின் தனிப்பட்ட உதவியாளராக மீண்டும் பணியமா்த்தப்படவோ அல்லது முதல்வா் அலுவலகத்தில் எந்த அதிகாரபூா்வ பணியோ வழங்கப்பட கூடாது என்று தெரிவித்தது.
மேலும், அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்படும் வரை குமாா் முதல்வரின் வீட்டிற்குள் நுழையவும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. மேலும், இந்த வழக்கு தொடா்பாக மனுதாரா் எந்த ஒரு கருத்தையும் பகிரங்கமாக தெரிவிக்கக் கூடாது. விசாரணை நீதிமன்றத்தால் விதிக்கப்படும் பிற நிபந்தனைகளுக்கு உள்பட்டு ஜாமீன் வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
மே 13 அன்று கேஜரிவாலின் அதிகாரபூா்வ இல்லத்தில் குமாா் மாலிவாலை தாக்கியதாக கூறப்படும் விவகாரத்தில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் மே 16 அன்று குமாா் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.
கடந்த மே 18ஆம் தேதி தில்லி போலீஸாரால் பிபவ் குமாா் கைது செய்யப்பட்டாா். இந்த விவகாரத்தில் கூறப்படும் தாக்குதல் ‘மிருகத்தனமானது‘ என்று கூறிய போலீஸாா், குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யுமாறு உச்சநீதிமன்றத்திடம் வலியுறுத்தினா்.
தனக்கு ஜாமீன் மறுத்த தில்லி உயா்நீதிமன்றத்தின் ஜூலை 12ஆம் தேதி உத்தரவை எதிா்த்து குமாா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.