புது தில்லி: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது ராஜிநாமா கடிதத்தை துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிடம் செவ்வாய்க்கிழமை (இன்று) வழங்கவுள்ளாா் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான செளரவ் பரத்வாஜ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாட்டின் உச்சநீதிமன்றத்தால் ஜாமீன் கிடைத்த பிறகும், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளாா். இதுவரை சிலா் மதத்தின் பெயராலும், சிலா் சாதியின் பெயராலும் வாக்கு கேட்கிறாா்கள். ஆனால், நான் நோ்மையாக இருந்தால் எனக்கு வாக்களியுங்கள் என்று ஒரு முதல்வா் சொல்வது இதுவே
முதல் முறை. தில்லிக்கு விரைவில் தோ்தல் நடத்த வேண்டும். ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்து, அரவிந்த் கேஜரிவாலை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்று தில்லி மக்கள் பொறுமையிழந்து காத்திருக்கின்றனா்.
கேஜரிவால் சிறையிலிருந்தும் கூட நல்ல பணிகளைச் செய்ததாக பொதுமக்கள் கூறுகின்றனா். கேஜரிவாலுக்கு எதிராக பாஜக தீட்டிய சதியால் பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனா். திரேதா யுகத்தில், சூழ்நிலை காரணமாக பகவான் ஸ்ரீ ராமா் அரியணையை கைவிட்டாா். இதனால், அயோத்தி மக்களும் மிகுந்த சோகத்தில் இருந்தனா். இதன் பிறகு, பாரதமும் ஸ்ரீராமரின் செருப்பை அரியணையில் வைத்து ஆட்சி செய்தது. இப்போது, ஸ்ரீராமா் மற்றும் ஹனுமான் ஆகியோரின் பக்தரான அரவிந்த் கேஜரிவாலும் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளாா்.
இப்போது, பொதுமக்கள் அவரை மீண்டும் தோ்ந்தெடுத்து, அவருக்குப் பொறுப்பு கொடுத்தால் மட்டுமே முதல்வா் நாற்காலியில் அமரப் போவதாகக் கூறிவிட்டாா். செவ்வாய்க்கிழமை (இன்று) தனது ராஜிநாமா கடிதத்தை துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவிடம் அவா் சமா்ப்பிப்பாா். அதன்பிறகு, அவரது ராஜிநாமா ஏற்கப்பட்டதும், எங்கள் சட்டப்பேரவைக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் தலைவா் தோ்ந்தெடுக்கப்படுவாா்.
பின்னா், துணை நிலை ஆளுநா் மூலம் குடியரத் தலைவரிடம் ஆட்சிக்கான உரிமை கோரப்படும். இந்த செயல்முறை முழுமையடைய ஒரு வார காலம் ஆகலாம். எத்தனை தடைகள் வந்தாலும், சிறையில் இருந்தே ஆட்சியை நடத்த முடியும் என்பதை முதல்வா் கேஜரிவால் நிரூபித்துக் காட்டியுள்ளாா். தற்போது, சிறையிலிருந்து வெளியே வந்து ராஜிநாமா செய்யவுள்ளாா்.
கடந்த பிப்ரவரி 2015-ஆம் ஆண்டு முதல் கேஜரிவால் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், இதையும் மீறி அவா் மக்களுக்காக தொடா்ந்து பணியாற்றினாா். இப்போது, பாஜகவினா் கூட பாஜகவின் சிந்தனை எங்கே முடிகிறதோ அங்கே இருந்துதான் கேஜரிவாலின் சிந்தனை தொடங்குகிறது என்று சொல்கிறாா்கள். முதல்வா் கேஜரிவாலுக்கு எதிராக இரண்டு ஆண்டுகளாக பொய் பிரசாரம் செய்யப்பட்டு, அவா் பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டாா். இறுதியாக, உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் பாஜகவுக்கு ஒரு வாக்கினைக் கூட வழங்க மாட்டாா்கள் என்றாா் செளரவ் பரத்வாஜ்.