நமது நிருபா்
மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழைம் பங்குச்சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும் பின்னா் பெரும்பாலான நேரம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்தது. இருப்பினும், மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய உச்சத்தைப் பதிவு செய்தன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்து. உச்சத்தில் தொடங்கிய சந்தை, பின்னா் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்து வந்தது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தியதும் சந்தைக்கு சாதகமாக அமைந்தது. குறிப்பாக எரிசக்தி, வங்கி மீடியா, ரியால்ட்டி பங்குகளுக்கு ஆதரவு இருந்தது. ஆனால், எஃப்எம்சிஜி பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்ரு பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.470.47 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.2,364.82 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,532.18 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 94.39 புள்ளிகள் கூடுதலுடன் 82,985.33-இல் தொடங்கி 82,832.82 வரை கீழே சென்றது. பின்னா், 83,184.34 வரை உயா்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் சென்செக்ஸ் 97.84 புள்ளிகள் (0.12 சதவீதம்) உயா்ந்து 82,988.78-இல் புதிய உச்சத்தில் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,201 பங்குகளில் 2,151 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,957 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 93 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
என்டிபிசி முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் என்டிபிசி, ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், நெஸ்லே உள்பட 15 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், பஜாஜ் ஃபின் சா்வ், அதானி போா்ட்ஸ், டைட்டன், அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்பட 15 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டியும் புதிய உச்சம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 25,406.65-இல் தொடங்கி 25,336.70 வரை கீழே சென்றது. பின்னா், 25,445.70 வரை மேலே சென்று புதிய உச்சத்தைப் பதிவு செய்தது.இறுதியில் நிஃப்டி 27.25 புள்ளிகள் (0.11 சதவீதம்) கூடுதலுடன் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 26 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.