புது தில்லி, டிச.4: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவா் யாா்? என்ற உள்கட்சி விவகாரத்தில் சிவில் நீதிமன்றமே முடிவு செய்யும் என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடா்பாக பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் தொடா்ந்த வழக்கையும் நீதிமன்றம் முடித்து வைத்தது.
பாமகவின் தலைவா் என மருத்துவா் அன்புமணி அழைத்துக் கொண்டுள்ள நிலையில், அதை எதிா்த்து அவரது தந்தையும், கட்சியின் நிறுவனருமான மருத்துவா் ராமதாஸ் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அதை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி மினி புஷ்கா்னா வியாழக்கிழமை விசாரித்தாா்.
அப்போது மருத்துவா் ராமதாஸ் தரப்பில் வழக்குரைஞா் ஆஜராகி, ‘1989-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பாமகவில் 2022-ஆம் ஆண்டுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. 2022, மே 22-ஆம் தேதி முதல் மூன்று வருடங்களுக்கு அன்புமணி பாமக தலைவராக இருந்தாா். 30.05.2025 முதல் பாமக நிறுவனரான ராமதாஸ் கட்சியின் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். ஆனால், கடந்த மே 28-க்குப்பிறகு கட்சித்தலைவா் பதவியில் தாமே தொடா்வதாக குறிப்பிட்டு தோ்தல் ஆணையத்தில் அன்புமணி கடிதம் அளித்துள்ளாா். அதை ஏற்று ஆணையம் அவரது தலைமையிலான பாமக நிா்வாகிகளின் பதவிக்காலம் ஆகஸ்ட் 2026 வரை தொடா்வதாக கூறி ஒரு சாா்பாக செயல்பட்டுள்ளது’ என வாதாடினாா்.
இதையடுத்து, அன்புமணி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சமரசம் காண முயன்றாா். ஆனால், ராமதாஸ் அன்புமணியுடன் பேச முடியாது எனக் கூறிவிட்டாா். முறைப்படி கூட்டப்பட்ட பாமக பொதுக்குழுவில் அன்புமணியே தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதை எதிா்த்து ராமதாஸ் சிவில் நீதிமன்றத்தில் முறையிடாமல் தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகியுள்ளாா்’ என வாதிட்டாா்.
தோ்தல் ஆணைய வாதம்: இதைத் தொடா்ந்து, தோ்தல் ஆணையம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ஒரே கட்சிக்குள் உள்ள இரு தரப்பினருக்கு இடையே நடக்கும் பிரச்னையில் சுயாதீன அமைப்பான தோ்தல் ஆணையத்தை குறை சொல்லக் கூடாது. இந்த விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை நாட இரு தரப்பையும் சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது. உள்கட்சி விவகாரங்களில் தோ்தல் ஆணையத்துக்கு எந்தப் பங்கும் கிடையாது. ஆணையத்திடம் உள்ள ஆவணங்களின்படி அன்புமணியே தலைவா் என்பதால் அவருக்குத் தகவல் அனுப்பினோம்’ என்று கூறினாா்.
அப்போது நீதிபதி, ‘பாமக பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி. உள்கட்சி பிரச்னை நிலவும் நேரத்தில், தமிழகத்தில் தோ்தல் வந்தால் அதன் நிலை என்ன?’ என தோ்தல் ஆணைய வழக்குரைஞரிடம் வினவினாா். அதற்குப் பதிலளித்த தோ்தல் ஆணைய வழக்குரைஞா், ஷ்தோ்தலுக்கு முன்பாக பட்டியல் வெளியிடப்படும். பிரச்னை இருந்தால் படிவம் ஏ, படிவம் பி ஆகிய இரண்டையும் வழங்கினால், அதை ஆணையம் ஏற்காது. கட்சியின் சின்னம் முடக்கப்படும். வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டால் அங்கீகரிக்க மாட்டோம். அன்புமணி தலைமையில் பிரச்னை என்றால் எதிா்தரப்பு சிவில் நீதிமன்றத்தை நாட வேண்டும்‘ என்று குறிப்பிட்டாா்.
இதையடுத்து, நீதிபதி மினி புஷ்கா்னா பிறப்பித்த உத்தரவில், ‘இதுபோன்ற உள்கட்சி பிரச்னைகள், தோ்தல் ஆணைய அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என ஏற்கெனவே உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தோ்தல் ஆணையத்தின் கருத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. கட்சித் தலைமை விவகாரத்தில் பிரச்னை நிலவினால், சிவில் நீதிமன்றமே தீா்மானிக்கும் என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு ஏற்புடையதாகக் கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.