தென்கிழக்கு தில்லியின் போகலில் உள்ள ஒரு பொது கழிப்பறை அருகே சிறுநீா் கழித்ததால் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில், 27 வயது காா் ஓட்டுநா் குடிபோதையில் இருந்த இளைஞா்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
புதன்கிழமை காலை பாராபுல்லா மேம்பாலத்தின் கீழ் நிகழ்ந்த இந்த கொலை தொடா்பாக, பிரதான
குற்றம்சாட்டப்பட்ட நபரான பன்வாடி என்ற 19 வயது இம்ரான் மற்றும் மூன்று சிறாா்களை கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து டிசம்பா் 3 ஆம் தேதி அதிகாலை அழைப்பு வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியது:
இறந்தவா் உத்தரபிரதேசம், அயோத்தி மாவட்டத்தைச் சோ்ந்த குல்தீப் என்ற ராம் சிங் என அடையாளம் காணப்பட்டாா்.
பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 103(1)( கொலை) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புலனாய்வாளா்கள் அருகிலுள்ள 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். போகலில் உள்ள ஜெயின் மந்திா் அருகே உள்ள ஒரு கழிப்பறை அருகே பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட முக்கியமான காட்சிகளைப் பயன்படுத்தி, தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும்
உளவுத்துறை உதவியுடன், போலீஸாா் சந்தேக நபா்களை அடையாளம் கண்டனா்.
முன்னா் மூன்று வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய இம்ரான், இக்கொலை சம்பவத்துடன் தொடா்புடைய மூன்று சிறாா்களுடன் கைது செய்யப்பட்டனா்.
விசாரணையின் போது, அவா்கள் இம்ரானின் பிறந்தநாளைக் கொண்டாடியதாகவும், பின்னா் இரவு வெளியே செல்ல திட்டமிட்டு இந்தியா கேட் நோக்கிச் சென்றபோது குல்தீப் என்ற ராம் சிங்கைச் சந்தித்ததாகவும் தெரிவித்தனா். அந்தப் பகுதியில் சிறுநீா் கழிப்பது தொடா்பாக அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து குடிபோதையில் இருந்த அந்தக் கும்பல், ராம் சிங்கை கத்தியால் தாக்கி, சம்பவ இடத்திலேயே அவரைக் கொன்ாகக் கூறப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்டவா் கொலை செய்யப்பட்டவரின் காருடன் தப்பிச் சென்றுள்ளாா். அந்தக் காரும், ரத்தக்கறை படிந்த ஆடைகளும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.